Sunday, January 1, 2017

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 


சிலப்பதிகாரம் ஒரு ஆச்சரியமான நூல். வில்லன் என்ற பாத்திரமே இல்லாத ஒரு காப்பியம் என்றால் அது சிலப்பதிகாரம் தான். 

இராமாயணத்தில் - இராமன், இராவணன் 
பாரதத்தில் - பாண்டவர்கள், கௌவரவர்கள் 
கந்த புராணத்தில் - கந்தன் , சூரபத்மன் 

இப்படி எந்த கதையை எடுத்துக் கொண்டாலும், அதில் கதாநாயகன் இருப்பான், அவனுக்கு எதிராக ஒரு பலமான வில்லன் இருப்பான். வில்லனை முறியடித்துத்தான் கதாநாயகன் தன் வலிமையை காட்ட முடியும். 

சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு வில்லன் என்று யாரும் கிடையாது. 

விதிதான் வில்லன். 

நடக்கும் சம்பவங்கள் தான் வில்லனின் விளையாட்டு.

ஒரு சின்ன சம்பவம், கதையின் போக்கையே மாற்றி விடுகிறது. 

பாண்டிய மன்னன் அவையில் இருந்து நடனத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் அங்கு நடனமாடும் பெண்கள் மேல் இலயிக்கிறது. அதை , அருகில் இருந்த அவன் மனைவி பார்த்து விடுகிறாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. 'தலை வலிக்கிறது' என்று கூறிவிட்டு அந்தப் புறம் நோக்கிச் செல்கிறாள். அவளின் ஊடலை புரிந்து கொண்ட பாண்டியன் அவள் பின்னே செல்கிறான் அவளை சமாதனப் படுத்த. அந்த நேரத்தில் பொற் கொல்லன் வந்து கோவலனைப் பற்றி ஏதோ சொல்ல, தான் இருந்த மன நிலையில் , சரியாக ஆராயாமல் , பாண்டியன் கோவலனுக்கு தண்டனை கொடுத்து விடுகிறான். 

பாடல் 

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், 
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும், 
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன் 
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து, 
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 
குலமுதல் தேவி கூடாது ஏக, 
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன் 
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு 
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி, 
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்

பொருள்

‘கூடல் மகளிர் = கூடத்தில் ஆடும் பெண்களின்

ஆடல் தோற்றமும் = ஆடலும், அவர்களின் தோற்றமும்

பாடல் பகுதியும் = பாடல் பகுதியும்

பண்ணின் பயங்களும் = பாடலின் பயன்களும்

காவலன் = அரசனின்

உள்ளம் கவர்ந்தன’ என்று, = உள்ளத்தை கவர்ந்தன என்று

தன் = தன்னுடைய

ஊடல் உள்ளம் = ஊடல் கொண்ட மனத்தை

உள் கரந்து ஒளித்து = உள்ளே ஒளித்து  வைத்து

தலைநோய் = தலைவலி

வருத்தம் = வருத்தம்

தன்மேல் இட்டு = தனக்கு இருப்பதாகக் கூறி

குலமுதல் தேவி = பாண்டிமாதேவி

கூடாது ஏக = சேர்ந்து இருக்காமல் உள்ளே போக

மந்திரச் சுற்றம் நீங்கி = மந்திரிகளை விட்டு நீங்கி

மன்னவன் = பாண்டிய மன்னன்

சிந்து அரி நெடுங் கண் = சிவந்த அழகிய நீண்ட கண்களை கொண்ட

சிலதியர் = பணிப் பெண்கள்

தம்மொடு = அவர்களோடு

கோப்பெருந்தேவி = அரசியின்

கோயில் = அரண்மனை

நோக்கி, = சென்று

காப்பு உடை  = காவலை உடைய

வாயில் = வாசலில்

கடை காண் = வாசலை அடையும் முன்பே

அகவையின் விழ்ந்தனன் = படியில் வீழ்ந்தான்

கிடந்து = தரையில் கிடந்து

தாழ்ந்துபல ஏத்திக் = பணிந்து பலவாறாக அவளை சமாதானம் செய்து

காமம் , பாண்டியனை அந்த நடனமாடும் பெண்களின் உடலை இரசிக்கத் தூண்டியது. அருகில் அவன் மனைவி இருப்பது கூடத் தெரியாமல். இன்னொரு பெண்ணை கணவன் இரசிப்பதை எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. 'தலை வலிக்கிறது ' என்று  சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் .

'போனால் போகட்டும்...அவ எப்போதும் அப்படித்தான் ...அப்புறம் பேசிக் கொள்ளலாம் ...இந்த ஆட்டம் முடியட்டும் ' என்று பாண்டியன் இருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்தான். அவள் இருக்கும் அரண்மனைக்கு சென்று அவளை சமாதனப் படுத்த முயன்றான்.

அன்பான, இனிமையான தாம்பத்யத்தின் இலக்கணம் அது.

'நான் எவ்வளவு பெரிய ஆள். நீ யார் என்னை கேட்க ' என்று இருக்கவில்லை.

அவன் அந்த அளவுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறான் என்றால் அவர்களுக்குள் இருந்த தாம்பத்யம் புலப்படும்.

வெளியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியின் முன்னால் கணவன் , அவ்வளவுதான்.

அந்த ஒரு இக்கட்டான இடத்திலும் ஆண்களுக்கு ஒரு பாடத்தை வைக்கிறார் இளங்கோ அடிகள் .

ஆண் வெளியில் யாராக இருந்தாலும், வீட்டில் , தாய்க்கு பிள்ளைதான், தாரத்துக்கு கணவன் தான், பிள்ளைகளுக்கு தந்தை அவ்வளவுதான் இருக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டால் வாழ்வு உறவுகள் பலப்படும். 

1 comment:

  1. இளங்கோ அடிகளின் கவிதையில் புதைந்து உள்ள கருத்தை அழகாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.பெரிய அதிகாரியாக இருந்தாலும் அந்தந்த உறவிற்கு ஏற்றபடி அன்போடும்,புரிந்துகொண்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்தால் வாழ்வில் பிரசனையே குறைவாக இருக்கும்.

    ReplyDelete