Thursday, January 12, 2017

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்


கணவன் வெளியூருக்குப் போகிறான் என்றால், மனைவிக்கு ஒரு இனம் தெரியாத கவலையும் பயமும் வந்து விடும்.

நேரா நேரத்துக்கு சாப்பிடணுமே , மறக்காம மருந்து சாப்பிடணுமே ,நல்ல சாப்பாடு கிடைக்குமா, அங்கு குளிருமா ? ரொம்ப சூடா இருக்குமா ? பத்திரமா போயிட்டு பத்திரமா வரணுமே என்று ஆயிரம் சஞ்சலம் மனதுக்குள்.

இந்தக் கவலை இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே பெண்ணுக்கு இந்தக் கவலை தான்.

பொருள் தேடி தலைவன் வெளியூர் செல்ல  வேண்டும். பிரிவு அவளை வருத்துகிறது.

பிரிவு  மட்டும் அல்ல, அவன் படப் போகும் துன்பங்களும் அவளை நெகிழ வைக்கிறது. என்னால் தானே அவன் இவ்வளவு துன்பப் படுகிறான் என்று நினைத்து அவள் உருகுகிறாள்.

அவள் அதிகம் வெளிய போனவள் அல்ல.  உலகம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.எல்லாம் கேள்விப் பட்டதுதான்.

அவன் போகப் போகும் பாலைவனத்தைப் பற்றி அவள் மிரள்கிறாள்.

அந்தப் பாலைவனம் அவள் கண் முன்னே விரிகிறது.

அது ஒரு சுட்டெரிக்கும் மணல் வெளி. மருத்துத்துக் கூட ஒரு மரம் கிடையாது.

அங்கங்கே பெரிய பாறைகள்  இருக்கிறது. பாறைகளுக்குப் பின்னால் கள்ளர்கள்,  வழிப்பறி செய்பவர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

யாராவது அந்த வழியே போனால், உடனே ஒரு விசில் அடிப்பார்கள். அந்த விசில் சத்தத்தை கேட்டு  அங்கே அலைந்து கொண்டிருக்கும் சில காட்டு விலங்குகள் வெருண்டு  ஓடும். விசில் சத்தம் கேட்டு மற்ற கள்வர்களும் வந்து விடுவார்கள். எல்லோரும்  ஒன்று சேர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பொருளை பறித்துக்  கொள்வார்கள்.

அப்படிப் பட்ட கொடிய பாலைவனத்தின் வழியே அவன் போக வேண்டியது இருக்கும் என்று கேட்ட உடனையே  கண்களில் நீர் ததும்பி  விட்டது.

பாடல்

கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

பொருள்

கடுகி = விரைந்து

அதரலைக்குங் = அதர் என்றால் வழி.  வழியில் வருவோரை

கல்சூழ் = கற்கள் சூழ்ந்த

பதுக்கை = பதுங்கும் இடங்களைக் கொண்ட

விடுவி லெயினர்தம் =  விடு + வில் + எயினர் + தம் = வில்லில் இருந்து அமபை விடுகின்ற எயினர்களுடைய

 வீளையோர்த் தோடும் = வீளை  + ஓரத்து + ஓடும் = விசில் சப்தத்தை கேட்டு ஓடும்

நெடுவிடை = நெடு + விடை. விடை என்றால் காளை  மாடு. அஞ்சி நீண்ட தூரம் ஓடும் காளை மாடுகளைக் கொண்ட

அந்தம் = கடைசிவரை

செலவுரைப்பக் கேட்டே = செல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட உடனேயே

வடுவிடை = வடு மாங்காய் போன்ற கண்களை உடைய அவளின்

மெல்கின கண் = மெண்மையாக, மெளனமாக நீரை வெடித்தன . மெல்கின கண் என்றால் , கண்கள் மென்மையாகின என்று பொருள். எப்படி மென்மையாகும் ?

நாலு வரிக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டம். 

2 comments:

  1. தற்போது போகும் இடங்கள்தான் மாறுபட்டது.ஆனால் பெண்களின் கவலை படுகின்ற உணர்ச்சிகள் மாறுபடவே இல்லை.அழகாக எடுத்து உரைத்தீர்கள் ..

    ReplyDelete
  2. மனதைப் பிழியும் பாடல்!

    ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள், ஆண்களை விடவும் பல நாடுகளைக் கடந்து, பல வேலைகளைச் செய்பவர்கள். அப்படிப்பட்ட பெண்ணாகத்தான் இன் பெண்ணை நான் வளர்க்க விரும்புகிறேன். சும்மா மென்மை மென்மை என்று சொல்லி அவர்களை இளைக்கச் செய்யக் கூடாது!

    ReplyDelete