Thursday, February 16, 2017

திருக்குறள் - நட்பின் இலக்கணம்

திருக்குறள் - நட்பின் இலக்கணம் 


நல்ல நட்பு என்பதின் இலக்கணம் என்ன ?

மனிதர்களுக்கு வாழ்வில் தளர்வு வரும். துன்பம் வரும். சிக்கல்கள் வரும். அப்படி தளர்ச்சி வரும் நேரங்களில் எதை செய்தால் சரியாகும் என்று தவிப்பார்கள். குழப்பத்தில் எங்கு சென்றாலும் ஏதோ சிக்கல் இருப்பது போலத் தெரியும். இப்படி போவதா, அப்படி போவதா என்று திக்குத் தெரியாமல் தவிக்க நேரிடும். யாரை நம்புவது, யாரை சந்தேகிப்பது என்று தெரியாது.


அந்த மாதிரி சமயங்களில், விரைந்து சென்று, அவர்களின் தளர்ச்சியை நீக்கி, அவர்கள் மீண்டும் நிலையான ஒரு வாழ்வைப் பெற உதவ வேண்டும்.

அதுதான் நட்பிற்கு இலக்கணம்

பாடல்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்று நிலை


பொருள்


நட்பிற்கு = நட்பினுக்கு

வீற்றிருக்கை = வீற்று இருக்கும் இருக்கை

யாதெனில் = எது என்றால்

கொட்பின்றி = தளர்ச்சி இன்றி

ஒல்லும்வாய் = விரைந்து சென்று அல்லது அனைத்து வழிகளிலும்

ஊன்று நிலை = நிலை பெறுமாறு செய்யும் நிலை

வீற்று இருக்கும் இருக்கை என்றால் உயர்ந்த சிம்மாசனம். நட்பின் உயர்ந்த நிலை எது என்றால்.

"ஊன்று நிலை " - உறுதியாக வைக்கும் நிலை. எதில் உறுதியான நிலையை உண்டாக்க வேண்டும்.

"ஒல்லும் வாய் " = அனைத்து வழிகளிலும். அனைத்து வழிகளிலும் என்றால் இம்மை மட்டும் அல்ல மறுமைக்கும் உள்ள வழிகள். அறம் , பொருள், இன்பம் என்ற இம்மைக்கும், வீடு பேறு  என்ற மறுமைக்கும் உள்ள அனைத்து வழிகளிலும் உறுதியாகச் செலுத்த வழி செய்ய வேண்டும்.

சிந்தித்துப் பார்ப்போம்.

நண்பருக்கு ஒரு பொருளாதாரச் சிக்கல். கையில் பணம் இல்லை. அவருக்கு உதவி செய்கிறேன் என்று தவறான வழியில் பணம் சம்பாதிக்கக் கற்றுத் தரக் கூடாது.  அறம் அல்லாத வழியில் அவர் செல்வதாகவே இருந்தாலும் அவரை அந்த  வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இன்று மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. மறுமைக்கும் சேர்த்து வழி தேட வேண்டும்.

அதுவும் எப்படி செய்ய வேண்டும் ?


"கொட்பின்றி"  - தளர்ச்சி இன்றி. நண்பரின் தளர்ச்சியை போக்க வேண்டும். அவருக்கு நாம் பல விதங்களில் உதவி செய்வோம். ஒன்றும் சரியாக வராது. சில சமயம் நாமே தளர்ந்து போவோம். நாமும் தளரக் கூடாது , நண்பரின் தளர்ச்சியையும் போக்க வேண்டும்.

"தளர்ந்தேன் எம்பிரான் என்னை  தாங்கிக் கொள்ளேன் " என்பார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


என்பது நீத்தல் விண்ணப்பம்.

தளர்ச்சி என்பது இயலாமையால் வருவது. பணம் கையில் இருக்கலாம். அதிகாரம் கையில் இருக்கலாம். வீட்டில் மனைவி சரி இல்லை என்றால் தளர்வு வரும், பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் தளர்வு வரும், உடல் ஆரோக்கியம் குறைந்தால் தளர்வு வரும்.  தொழிலில் நட்டம் , மேலதிகாரியுடன் சண்டை என்று தளர்ச்சி எங்கு வேண்டுமானாலும் வரலாம்.  
அதைப் போக்கி, அவர்கள் நல்ல நிலையில் இருக்க உதவ வேண்டும்.

சிந்திப்போம். செயல்படுவோம்.





1 comment:

  1. நட்பின் இலக்கணத்தை அழகாக விளக்கினீர்கள்

    ReplyDelete