Friday, February 17, 2017

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?


இறைவன் எங்கே இருக்கிறான் என்று நாளும் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். கைலாயத்தில் இருக்கிறான். வைகுண்டத்தில் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அங்கே போக வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

நாவுக்கரசர் சொல்லுகிறார்

"மனதில் இருக்கிறான். வாக்கில். அடியவர்கள் மத்தியில் இருக்கிறான். தேவர்களின் தலைக்கு மேலே இருக்கிறான். அண்டங்களுக்கு அப்பால் இருக்கிறான். மலையில் இருக்கிறான். கொன்றைப் பூவில். நெருப்பில் இருக்கிறான். காற்றிலும் இருக்கிறான். மேகத்தில் இருக்கிறான். கைலாயத்தின் உச்சியில் உள்ளான். என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் " என்கிறார்.

பாடல்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே


சீர் பிரித்த பின்

மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
    வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
    ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து அகத்தான்  நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
    பொருப்பின் இடையான்  நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியில் உள்ளான் 
    காளத்தியான் அவன் என் கண்ணுளானே

பொருள்

மனத்து அகத்தான் = மனதினுள் இருக்கிறான்

தலை மேலான் = தலைக்கு மேலே இருக்கிறான்

வாக்கினுள் உள்ளான் = சொல்லில் இருக்கிறான்

வாயாரத் = வாயால்

தன் அடியே = தன்னுடைய திருவடிகளையே

பாடும் = பாடும்

தொண்டர் இனத்து = தொண்டர் கூட்டத்தின்

அகத்தான் = நடுவில் இருப்பான்

இமையவர் = இமைக்காமல் இருக்கும் தேவர்கள்

தம் சிரத்தின் மேலான் = அவர்களுடைய தலைக்கு மேலே இருக்கிறான்

ஏழு அண்டத்துக்கு = ஏழு அண்டங்களுக்கு

அப்பாலன் = வெளியே இருக்கிறான்


இப்பாற் = இந்தப் பக்கம்

செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற

புனத்து அகத்தான் = புனைகளுக்கு மத்தியில் இருக்கிறான்

நறுங்கொன்றைப் = நல்ல கொன்றைப்

போதினுள் = பூவில்

உள்ளான் = இருக்கிறான்

பொருப்பின் இடையான் = மலையின் மேல் இருக்கிறான்

நெருப்பிடையான் = நெருப்பில் இருக்கிறான்

காற்றி னுள்ளான் = காற்றில் இருக்கிறான்

கனத்தகத்தான் = மேகத்தில் இருக்கிறான்

கயிலாயத்து உச்சியில் உள்ளான் = கைலாயத்தின் உச்சியில் இருக்கிறான்

காளத்தியான் = திருக்காளத்தி என்ற ஊரில் இருக்கிறான்

அவன் என் கண்ணுளானே = அவன் என் கண்ணில் இருக்கிறான்.



அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் என்று பெரிய பட்டியயல் தருகிறார். படித்து முடித்தவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது ?

பெரிசா ஒன்றும் இல்லை. எல்லோரும் சொல்லுவதுதான். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான்.

சரி. அதை அறிந்து கொண்டு என்ன செய்வது. இருக்கட்டும் என்று நாம் நம் வேலையை பார்க்கப் போய் விடுவோம். அந்தப் பாடல் நமக்குள் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

நாவுக்கரசர் போன்ற பெரியவர்கள் இப்படி ஒரு பாடலை ஏன் எழுதுகிறார்கள்.  நமக்கு பயன் இல்லாத ஒன்றை அவர்கள் சொல்லுவார்களா ?

சொல்லவே மாட்டார்கள். அப்படி என்றால் அதில் என்னதான் இருக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்போம்.


"மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான் "

அதாவது மனம், வாக்கு, காயம் (உடல் , இங்கே தலை)  என்ற மூன்றிலும் இருக்கிறான். நம் மனத்தில், நாம் பேசும் பேச்சில், நாம் நினைக்கும் எண்ணத்தில் இருக்கிறான். 

நாம் பேசும் பேச்சில் இறை தன்மை இருக்கிறதா ? நல்லதைப் பேசுகிறோமா ? உயர்ந்தவற்றை பேசுகிறோமா ? அன்போடு பேசுகிறோமா ? நம் பேச்சில் கருணை இருக்கிறாதா ?  

நல்லவற்றை சிந்திக்கிறோமா ? நம் சிந்தனையில் அன்பும், கருணையும், அருளும் இருக்கிறதா ? 

நம் உடலை இறைவன் கோவில் கொண்டிருக்கும் இடமாக நினைக்கிறோமா ? அப்படி நினைத்தால் மற்றவர்களின் உடலும் இறைவனின் கோவில் கொள்ளும் இடம்தானே. அந்த உடலுக்கு தீங்கு செய்யும் எண்ணம் வருமா ? கொலை, கற்பழிப்பு போன்ற உடல் சார்ந்த தீங்குகள் ஏன் நிகழுகிறது ?  அனைத்து உடலும்  இறைவன் வாழும் கோவில் என்று நினைத்தால் 

- உயர்ந்தவன், தாழ்ந்தவன், 
- பணக்காரன், ஏழை 
- படித்தவன், படிக்காதவன் 
- தீண்டத் தகாதவன் , தகுந்தவன் 

என்ற பாகுபாடுகள் வருமா ?

கோவிலை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ அப்படி இந்த உடலையும்  வைத்திருக்க வேண்டும். 

உடல், உள்ளம், பேச்சு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.  இந்த ஒரு வரியை விரித்துச் சொன்னால் , ஒரு புத்தகமே எழுதலாம். 


"வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர் இனத்து அகத்தான்"

இறைவன் அடியார்கள் மத்தியில் இருக்கிறான். அப்படி என்றால் என்ன ?  ஏதாவது ஒரு அடியார் கூட்டத்திற்கு போய் , அங்கே இறைவன் இருக்கிறானா என்று  பார்க்க முடியுமா ?

அது அல்ல அர்த்தம்.

தீயவர்கள் மத்தியில் இருந்தால் , தீய எண்ணங்களே தோன்றும். மது அருந்தலாமா, புகை பிடிக்கலாமா என்பது பற்றிய சிந்தனைகளே தோன்றும். சிந்தனை வராவிட்டாலும், நம்மை அறியாமலேயே அது போன்ற செயல்களில்  இறங்கி விடுவோம். சூழ்நிலை அப்படி.

அடியவர்கள் மத்தியில் இருந்தால்  இறை சிந்தனை இருக்கும். உயர்ந்த சிந்தனைகள் இருக்கும். மனம் வேறு ஒன்றை நினைக்காது. அந்த சிந்தனைகள் நம்மை இறைவனிடம் சேர்க்கும் அல்லது அவனை நமக்கு காண்பித்துத் தரும்  எனபது அர்த்தம்.

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

என்பார் மணிவாசகர். நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, நடிப்புக்காக கூட அடியார்கள் மத்தியில் போய் இருந்தால் , பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல நமக்கும் நல்லது கிடைக்கும்.

போக வேண்டும். அவ்வளவுதான்.


இன்னும் எழுத ஆசைதான். படிக்க உங்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை......

யாராவது நாலு பேர் , மேலும் படிக்க பொறுமை இருக்கிறது என்று கூறினால், மேலும் எழுத  ஆசை


7 comments:

  1. காலையில் எழுந்தவுடன் முதலில் படிப்பது உங்களுடைய வலைப்பூ தான் .நான் சிலாகித்ததை
    ஓரிரு வரிகளில் விமர்சிப்பதுண்டு .இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு கொண்ட நண்பர்களுக்கும் படிக்க சொல்லி தூண்டுவதுண்டு..நிறைய எழுதுங்கள்.மிக சுவையாகவும் எளிதில் புரியும்படியாகவும் இருக்கிறது
    இறைவன் எங்கு உள்ளான் என்பது பற்றி பலர் எழுதியிருந்தாலும் உங்கள் அணுகுமுறை விசேஷமாக இருக்கிறது

    ReplyDelete
  2. Yes...please write more. We discuss your commentaries and the poems in our book club. Shanthini Arun

    ReplyDelete
  3. Pl. Pl. Pl. go ahead & write very much more. Can read but can't express myself in Tamil.But I simple enjoy & overwhelmed with your writings. May Lord Shiva bless you.
    K.S.Subramanian

    ReplyDelete
  4. I am very sorry to be writung in english. Please write more. Love your perspectives.

    With respects from Indonesia.

    ReplyDelete
  5. ஐயா, தங்கள் பதிவுகள் மிக அருமை. ஆழ்ந்த சிந்தனைக்குரியது. தொடர்ந்து பதியுங்கள் ஐயா. நன்றி.
    நமச்சிவாய 🙏🙏

    ReplyDelete
  6. இப்போதுதான் தங்கள் பதிவுகளை படிக்கத்
    துவங்கினேன். தொடர்ந்து மூன்று நாட்களாக பொறுமையாக மிகவும் ரசித்து - கம்பராமாயண பதிவுகள் பல படித்தேன். இன்று சில தேவாரப்பதிவுகள். எனக்கு தங்கள் பதிவுகளை படித்து ரசிப்பது இறைவன் கொடுத்த வரன்,

    ReplyDelete
  7. உங்கள் விளக்கம் அருமை , மேலும் படிக்க ஆசையாய் இருக்கிறது . தயை செய்து பதிவிடுங்கள்

    ReplyDelete