Sunday, February 5, 2017

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்


பிள்ளைகள் ஒரு கால கட்டத்திற்குப் பின், வீட்டை விட்டு போய் விடுவார்கள். மேல் படிப்பு படிக்க வேண்டியோ, அல்லது வேலை நிமித்தமாகவோ அல்லது திருமணம் முடித்தோ வீட்டை விட்டு போக வேண்டியது இருக்கும்.

அவர்கள் போன பின், வீடு கொஞ்சம் வெறிச்சோடித் தான் போய் விடுகிறது.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். பைன் விளையாடிய வீடியோ கேம்ஸ், அவன் பைக், சைக்கிள், புத்தகங்கள் என்று. பெண் பிள்ளையாக இருந்தால் அவளின் துணி மணிகள், அழகு சாதன பொருள்கள், புத்தகங்கள், என்று அவர்களின் பொருள்கள் எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த பொருள்களை தூக்கி வேறு எங்காவது கண் காணாத இடத்தில் வைத்து விடலாம் என்றால் அதுக்கும் மனம் வராது. சரி, அவற்றை பார்காமலாவது இருக்கலாம் என்றால் அதுக்கும் மனம் வராது.

பிள்ளை ஹாஸ்டலில் எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போவோம். அங்கே ஒரு சிறிய கட்டில் இருக்கும். உட்கார கடினமாக ஒரு நாற்காலி இருக்கும். புழங்க அதிகமான இடம் ஒன்றும் இருக்காது. அடடா , பிள்ளை எப்படி இருந்தவன் இங்க வந்து இப்படி துன்பப் படுகிறானே என்று மனம் தவிக்கும். இருந்தாலும் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அவனுக்கு கஷ்டமாக இருக்குமே என்று "நல்லாதான் இருக்கு " என்று ஒப்புக்குச் சொல்லி விட்டு வருவோம். 

கட்டிக் கொடுத்த பெண்ணைப் பார்க்கப் போனால் அவள் அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். நம் வீட்டில் இருந்தவரை காலையில் சுகமாக படுத்து உறங்கி இருப்பாள். காலைத் தூக்கம் அவளுக்கு ரொம்பப்  பிடிக்கும். 

 என்ன செய்வது. வந்த இடம் அப்படி. பொறுப்புகள் அதிகம். 

எப்படி சுகமாக இருந்த பிள்ளைகள் எப்படி கஷ்டப் படுகின்றனவே என்று மனதுக்குள் அழுவோம். 

வேறு என்னதான் செய்ய முடியும் ?

பிரிவுத்    துன்பம் பெரிய துன்பம்தான்.

இராமனை பிரிந்த பரதன் , அவனைத் தேடிக் கொண்டு கங்கை கரையை அடைகிறான். அங்கே குகனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், இராமன் இருந்த இடத்தை காட்டும் படி குகனிடம் பரதன் வேண்டுகிறான். குகனும் காட்டுகிறான். 

ஓடோடிச் சென்று இராமன் இருந்த இடத்தை காணுகிறான் பரதன். 

இராமன்  கல்லின் மேல் புற்களை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். அரண்மனையில், ஒரு சக்ரவர்த்தியின் மகன் எப்படி இருந்திருப்பான். அவன் படுக்கை எப்படி இருந்திருக்கும் ? 

இங்கே, கல்லின் மேல் புல்லைப் பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். 

அதைக் கண்ட பரதன் உருகுகிறான்.  

பாடல் 

கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
    வைகியபள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரற்பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.



 பொருள் 

கார் எனக் = நீர் கொண்ட மேகம் போல 

 கடிது சென்றான் = விரைந்து சென்றான் 

கல்லிடைப் படுத்த புல்லின் = கல்லின் மேல் புல்லைப்  பரப்பி

வார் சிலைத் = நீண்ட , நேர்மையான வில்லை 

தடக் கை வள்ளல் = தன்னுடைய கையில் கொண்ட வள்ளல் 

வைகிய = தங்கிய, உறங்கிய 

பள்ளி = படுக்கையைக் 

கண்டான் = கண்டான் 

பார்மிசைப் = தரையின் மேல் 

பதைத்து = பதறி 

வீழ்ந்தான் = வீழ்ந்தான் 

பருவரல் = துன்பம் 

பரவை = கடலில் 

புக்கான் = புகுந்தான் 

வார் மணிப் புனலால் = மணி போன்ற கண்களில் இருந்து 

மண்ணை = மண்ணை 

மண்ணு நீர் = மஞ்சன நீர் 

ஆட்டும் = ஆட்டும் 

கண்ணான் = கண்களை கொண்ட பரதன் 


கார் எனக் கடிது சென்றான்... கார் மேகம் போலச் சென்றான் பரதன். பரதன் கரிய செம்மல். அதுவும் இல்லாமல், பின்னால் மண்ணை தன்னுடைய கண்ணீரால் நீராட்டினான் என்று சொல்லும் போது கார் மேகம் மழை பொழிவது நமக்கு நினைவுக்கு வரும். 

வைகியபள்ளி கண்டான்.... வைகுதல் என்றால் இருத்தல். "உண் " என்றால் ஒன்று படுதல். சேர்ந்து இருந்தல் என்று பொருள். "அம் " விகுதி. 

வை + உண்  + தம் = வைகுண்டம்.  

ஒன்று பட்டு இருத்தல். 

அது இருக்கட்டும் ஒரு புறம்..

நமக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் எவ்வளவு துவண்டு போகிறோம்.

உடல் நோவு, பணக் கஷ்டம், பிள்ளைகள் படிப்பு என்று எவ்வளவோ கவலைப் படுகிறோம். ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பம் என்று அலுத்துக் கொள்கிறோம். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....

சக்கரவர்த்தி திருமகன் இராமன், எல்லாம் இழந்து  காட்டில் வந்து பாறையின் மேல் புல்லை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். நம்மால் ஒரு நாள் மெத்தை இல்லாமல் படுக்க முடியுமா ? 

ஒரு நாள் வீடு வேலை செய்யும் பெண் வரவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இராமனுக்கு அரண்மனையில் எவ்வளவு பணியாட்கள் இருந்திருப்பார்கள். காட்டில் ? 

துன்பம் வரும். அதுவும் வாழ்வில் ஒரு பகுதி.  அந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். இராமனின் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரியது ? 

எல்லாம் பழகிக் கொள்ள வேண்டியதுதான். 

கல்லின் மேல் இராமன் படுத்து இருந்தது மட்டும் அல்ல பரதனின் கவலைக்கு காரணம்.... பின் ?



2 comments:

  1. // கட்டிக் கொடுத்த பெண்ணைப் பார்க்கப் போனால் அவள் அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். நம் வீட்டில் இருந்தவரை காலையில் சுகமாக படுத்து உறங்கி இருப்பாள். காலைத் தூக்கம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
    என்ன செய்வது. வந்த இடம் அப்படி. பொறுப்புகள் அதிகம்.
    எப்படி சுகமாக இருந்த பிள்ளைகள் எப்படி கஷ்டப் படுகின்றனவே என்று மனதுக்குள் அழுவோம்.//

    காலையில் தூங்காமல் பொறுப்புடன் வேலை செய்வது கஷ்டமா? கலிகாலம்!

    ReplyDelete
  2. பெண்கள் மேலும், பிள்ளைகள் மேலும் நம் எதிர்பார்ப்பில் எவ்வளவு வித்தியாசம்?

    அது ஒருபுறம் இருக்க, அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete