Friday, March 17, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை 


கங்கை கரை கடந்து, பரதன் இராமனைத் தேடி வருகிறான். பரதன் படையோடு வருவதை தூரத்தில் கண்ட இலக்குவன் கோபம்  கொள்கிறான்.பரதன் தங்கள் மேல் படை எடுத்து  வந்து விட்டான் என்று தவறாக எண்ணி சண்டைக்கு தயாராகுகிறான். பின் பரதன் வருகிறான். பரதன் இராமனை அரசை மீண்டும் ஏற்றுக்  கொள்ளும்படி கூறுகிறான். அவர்களுக்குள் வாதம் நடக்கிறது. இறுதியில் பரதன் இராமனின் பாதுகைகளை பெற்றுச் செல்கிறான்.

தெரிந்த கதைதான்.

இந்த திருவடி சூட்டுப் படலம் இராமாயணம் என்ற மகுடத்தில் ஒளி  ஒரு உயர்ந்த வைரம் போல ஜொலிக்கிறது. அவ்வளவு இனிமையான பாடல்கள். உணர்ச்சிகளின் தொகுப்பு.

உணர்வுகள் மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவு எவ்வளவு முக்கியமோ, உணர்ச்சிகளும் அவ்வளவு முக்கியம். ஆங்கிலத்தில் emotional intelligence என்று கூறுவார்கள்.

நம்முடைய உணர்ச்சிகள் என்ன, அவை சரியா ,  தவறா,அவற்றை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரிய வேண்டும்.

அநேக வீடுகளில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் இவர்களுடைய வரும் சிக்கல்களுக்கு காரணம் அன்பை சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது தான்.

அன்பு  இருக்கிறது.காதல் இருக்கிறது.  ஆனால் அதை சரியாக வெளிப்படுத்துவது  இல்லை.

கண் கலக்கினால் பலகீனம் என்று ஒரு எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அப்படி சொல்லியே ஆண் பிள்ளைகளை வளர்க்கிறோம். "என்ன இது பொம்பளைப் பிள்ளை மாதிரி அழுது கொண்டு " என்று ஆண் பிள்ளைகளை கேலி  செய்கிறோம்.

ஆண் பிள்ளைகள் அழாமல் அடக்கிக் கொள்ள பழகிக் கொள்கிறார்கள்.

அன்பு, காதல், பக்தி எல்லாம் கண்ணீரில் தான் வெளிப்  படும்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்கிறார்  வள்ளுவர்.

அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

காதலாகி கசிந்து கணீர் மல்கி என்பார் ஞானசம்பந்தர்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்பது அவர் வாக்கு.

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி என்பார் மணிவாசகர்



மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே

என்பது திருவாசகம்.

கண்ணீர் என்பது  அன்பின், காதலின்,கருணையின், பக்தியின் வெளிப்பாடு. அழ முடியாத ஆண் மகனால் எப்படி காதலிக்க முடியும் ? அவன் காதலும் உள்ளேயே இறுகிப் போய் விடுகிறது.

மனம் இளக வேண்டும். நெகிழ வேண்டும். அன்பு வெளிப்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால் உறவுகள் பலப்படும். குடும்பம் சந்தோஷமாக  இருக்கும். சமுதாயமும், நாடும் அமைதியாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். இயற்கையின் மேல் பரிவு பிறக்கும். மண்ணில் சொர்கம்  தோன்றும்.


மிக பலம் பொருந்திய , அறிவாற்றல் மிக்க இராமன் அழுகிறான். புலம்புகிறான். மயங்கி விழுகிறான். ஆண் அழுவது தவறல்ல என்று கம்பன்  காட்டுகிறான்.அரசு போனபோது  அழவில்லை.கானகம் போ என்று சொன்ன போது அழவில்லை.  ஆனால், இங்கே அழுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.


உணர்ச்சிக்கு குவியல் ஒரு புறம் என்றால், அறிவார்ந்த சர்ச்சை இன்னொரு புறம், அறம் பற்றிய சிந்தனை இன்னொரு புறம், அண்ணன் தம்பி பாசம் இன்னொரு புறம்,  ஒன்றுக்கு ஒன்று முரணான ஆனால் அனைத்தும் சரியான வாதம்  என்றாலும் எதை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலுக்கு விடை காணும் முறை இன்னொரு புறம் என்று இந்த படலம் மனித வாழ்வின் அத்தனை கோணங்களையும்  படம் பிடிக்கிறது.

எது வென்றது ?

அறிவா ? உணர்வா ? அறமா ? என்று தெரியவில்லை. இந்தப் படலத்தை படித்து  முடிக்கும் போது , இது போன்ற சர்ச்சைகள் தேவையில்லாமல் போய் விடுகிறது.

வாழ்க்கை என்பது  ஒரு கட்டுக்குள் அடங்காத ஒன்று. வரையறுக்க முடியாத ஒன்று. அது அதுபாட்டுக்குப் போகிறது. வாழ்வது ஒன்றுதான் நிகழ்கிறது.

அற்புதமான படலம்.


வாருங்கள் . அத்தனையையும்  சுவைப்போம்.

திருவடி சூட்டுப் படலம்.

No comments:

Post a Comment