Thursday, March 23, 2017

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும்

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும் 


ஒன்று எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறோம். அல்லது இறந்த காலத்தை எண்ணி அசை போடுகிறோம். நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை. ஒவ்வொரு வினாடியும் கசிந்து கொண்டே போகிறது. வாழ்ந்ததையும் , வாழப் போவதையும் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர வாழ்வதே இல்லை.

உங்களைச் சுற்றி பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது. டிவி, கைபேசி இவற்றை மூடி வையுங்கள். வாழ்வு என்பது என்ன என்று தெரியும்.

கணவன், மனைவி, பிள்ளைகள், மழை, மரம், மேகம், அனைத்தையும் பாருங்கள்.

அது ஒரு பெரிய காடு. அடர்ந்த காடு. மரம் செடி கொடிகள் ஏகமாக வளர்ந்து கிடக்கிறது. பல வன விலங்குகள் அங்கே இருக்கும்.

அந்த காட்டில் ஒரு மலை. அந்த மலையில் ஒரு கொடிய சிங்கம் இருக்கிறது. வளைந்த கூர்மையான நகங்கள். சிவந்த கண்கள். அந்த சிங்கம் குகையில் படுத்து இருக்கிறது.

மழை மேகமாக இருக்கிறது. மழை வரும் போல இருக்கிறது. வானம் இருண்டு தூரத்தில் எங்கோ இடி இடிக்கிறது. அந்த இடி சத்தத்தை கேட்ட சிங்கம் எதோ யானை தான் பிளிறிக் கொண்டு வருகிறதோ என்று எண்ணிக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க எழுகிறது.

அந்த காட்டின் இன்னொரு பக்கத்தில் பெரிய ஆல மரம். அந்த ஆல மரத்தின் கீழ் ஒரு முனிவர் தவம் புரிகிறார். அவரின் இனிய அழகிய மனைவி உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அந்த கானகம் இருக்கும் இடம் திரு முதுகுன்றம் என்ற இடம். அங்கே போவோமா என்கிறார் திரு ஞான சம்பந்தர்.

பாடல்


தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

சீர் பிரித்தபின்

தழையார் வட வியவீதனில் தவமே புரி சைவன்
இழையார் இடை மடவாளொடும் இனிதாக உறை இடமாம் 
மழை வானிடை முழவ எழில்  வளை வாளுகி எரி கண் 
முழை வாளரி குமிறும் உயர்  முது குன்று அடைவோமே 

பொருள்

தழையார் = தழைகள் (இலைகள்) நிறைந்த

வட  வியவீதனில் = ஆல மர நிழலில்

தவமே = தவம்

புரி = புரிகின்ற

சைவன் = சைவன் (சிவன்)

இழையார் =  நூல் இழை போன்ற

இடை = இடையைக் கொண்ட

மடவாளொடும் = பெண்ணான உமா தேவியோடு

இனிதாக = இன்பமாக

உறை இடமாம் = இருக்கின்ற இடமாம்

மழை வானிடை முழவ = மழை வானத்தில் இடி ஒலிஎழுப்ப

எழில் = அழகான

வளை  = வளைந்த

வாளுகி = நகங்களுடன்

எரி கண் = தீ போன்ற சிவந்த கண்களுடன்

முழை = குகையில்

வாளரி= சிங்கம்

குமிறும் = கர்ச்சிக்கும்

உயர்  = உயர்ந்த

முது குன்று  = முதுகுன்று என்ற இடத்தை

அடைவோமே = செல்வோமே


முதுகுன்றம் என்ற கோவிலுக்குப் போவோம் என்று சொல்லவில்லை. அங்குள்ள இயற்கை. அந்த காடு, மலை, மழை மேகம், சிங்கம் என்று இயற்கையை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

அது சரி, இந்த முதுகுன்றம் என்ற இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? நம்ம விருத்தாச்சலம் தான் அந்த இடம். (விருதா என்றால் வயதான; அசலம் என்றால் மலை. வயதான மலை. முது குன்றம். 
வேதாச்சலம். அருணாச்சலம் இதை பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்) 


No comments:

Post a Comment