Friday, March 3, 2017

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

தேவாரம் - காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே


பாடல்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

பொருள்

மிக மிக எளிய பாடல். கடின பதங்களே கிடையாது. ஒவ்வொரு செயலையும் செய்வித்தால் யார் செய்யாமல் இருப்பார்கள் என்று கேட்கிறார்.

ஆட்டுவித்தால், அடக்கினால், ஓட்டினால், உருக வைத்தால், பாட வைத்தால், பணிய வைத்தால், காட்டினால்  அதை செய்யாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறார்.

சரி, இதில் என்ன இருக்கிறது ?

நாவுக்கரசர் சொல்கிறார் என்றால் அதில் ஏதாவது இல்லாமல் இருக்குமா ? சிந்திப்போம்.

மொத்த பாடலும் ஒரு உயிரின் ஆன்மீகப் பயணம். எங்கிருந்து ஆரம்பிக்கிறது. எங்கு முடிகிறது என்பதைச் சொல்லும் பாடல்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

ஆசையினால் உயிர்கள் அங்கும் இங்கும்  அலைகின்றன. அது வேண்டும், இது வேண்டும்  என்று நாளும் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆசைக்கு ஒரு அளவு இருக்கிறதா. ஒன்று கிடைத்தால் அடுத்ததை தேடுகிறது.  இறைவன் அனைத்தையும் படைத்தது வைத்திருக்கிறான். உயிர்கள் அது வேண்டும் , இது வேண்டும்  என்று அனைத்துக்கும் ஆசைப் பட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றன.  ஆட்டுவிப்பவன் அவன். உயிர்கள் ஆடுகின்றன. 

கூத்தாடுவானாகி என்கிறார் மணிவாசகர். 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

கூத்தாடுகிறான். கூத்தாட்டுகிறான்.



"அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே"

ஆசைகளின் பின்னால் போகும் உயிர்கள் அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணியே அவற்றின் பின்னால் போகின்றன. எல்லாமா கிடைத்து விடுகிறது. உடலில் வலு இருக்கும் வரை உயிர்கள் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றன. நாள் ஆக ஆக , தனது சக்தியின் எல்லையை உணர ஆரம்பிக்கின்றன.  முடியாது என்று சிலவற்றை உணர ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் அடங்குகின்றன.



ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

ஓட்டம் இரண்டு வகையில் இருக்கும். ஒன்று வெளி நோக்கி ஓடுவது. இன்னொன்று, உள் நோக்கி ஓடுவது.  ஆசையினால், இன்பம் அனுபவிக்க வேண்டி உயிர்கள் வெளி நோக்கி ஓடுகின்றன. வீடு, கார் , நகை, சொத்து, சொந்தம் , பந்தம் என்று என்று ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் இந்த ஓட்டம் நிற்கும். நின்ற பின், எதற்கு இந்த ஓட்டம், எதை அடைய வேண்டி இந்த ஓட்டம், யாருக்காக இந்த ஓட்டம் என்று உயிர்கள் நினைக்கப் தலைப் படும். பின், நான் யார், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வாழ்வின் நோக்கம் என்ன என்று உயிர்கள் தன்னை நோக்கி உள்புறமாக சிந்திக்கத் தொடங்கும். வெளியில் ரொம்ப தூரம் ஓடி விட்டதால், தன் வசம் வர அவ்வளவு தூரம் உள்நோக்கியும் ஓடி வர வேண்டி இருக்கிறது.

நீ எந்த பக்கம் ஒட்டுகிறாயோ, அந்த பக்கம் ஓடுகிறேன். நான் புலன் இன்பங்கள் பின்னால் ஓடுவதை நிறுத்தி , என்னை அறிய என்னை நோக்கி ஓடி வர அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.


"உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே"

முதலில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று உயிர்கள் அலையும். எனக்கு கிடைக்க வேண்டும், அது எனக்கு உரியது  என்று உயிர்கள் சொந்தம் கொண்டாடும். எனக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும், எனக்கு அழகான பெண் வேண்டும், அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும் என்று உயிர்கள் தனக்குக் கிடைத்ததெல்லாம் ஏதோ அவை தமக்கு உரியன போலவும்,  மேலும் கிடைக்க வேண்டியது இருக்கிறது என்று அலையும்.

ஒரு காலகட்டத்தில், நமக்கு இவ்வளவு கிடைத்ததே, நாம் இதற்கு தகுதி உள்ளவர்கள் தானா, நாம் என்ன செய்து விட்டோம் நமக்கு இப்படி ஒரு அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், இனிய வாழ்க்கை என்று தனக்கு கிடைத்ததை எண்ணி உயிர்கள் உருகும். கிடைத்த நல்லன எல்லாம் உணரச் செய்து , உயிர்களை உருக வைப்பான்.

"பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே"


உயிர்கள் தங்களுக்கு கிடைத்த இன்பங்களை எண்ணி உருகும் போது , மனதுக்குள் தோன்றும் நன்றி உணர்வில் பாடத் தோன்றும். தனக்காக பாடல் வரவில்லை என்றாலும், மற்றவர்கள் பாடியதை பாடி உள்ளம் உருகும். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், அபிராமி அந்தாதி என்று மற்றவர்களின் பாடலைப் பாடும்.

"பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே"


தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. தன் முயற்சி என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் நடக்கிற படி நடக்கிறது என்று மனிதன் எண்ணத் தலைப்படுகிறான்.  தான் சாதித்தது ஒன்றும் இல்லை என்ற பணிவு வருகிறது.


"காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே"

எல்லாம் மிகப் பெரிய அளவில் தன்னைச் சுற்றி நடப்பதை உயிர்கள் அறிகின்ற. பிறப்பும், வளர்வதும், ஆடுவதும், பாடுவதும், தேடுவதும், ஓய்வதும் நில்லாமல் நடக்கின்றன. இது எப்படி நடக்கிறது. யார் இதை நடத்திச் செல்கிறார்கள் என்று அறியாமல் உயிர்கள் குழம்பும்.  எது உண்மை என்று  யாராவது காட்டினால் அன்றி காண முடியாது.


அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே என்பார் அபிராமி பட்டர். என் சிற்றறிவுக்கு இது எல்லாம் புரியவே புரியாது . இருந்தும் புரிந்து விட்டது. எப்படி , எல்லாம் உன் அருள் என்று உருகுகிறார் பட்டர்.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

என்பது அபிராமி அந்தாதி.

"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே."

கண் நுதல் = நெற்றியில் கண் 

நெற்றியில் கண் உள்ள நீ காட்டாவிட்டால் எப்படி காண முடியும். நீ காட்டினால் இவை எல்லாம் என்னால் காண முடியும் என்கிறார். 

உங்களுக்கும் காட்டுவான். காத்திருங்கள். 

எவ்வளவு எளிமையான பாடல். எவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள். சமயமிருப்பின் மூல நூலை தேடித் படியுங்கள். 





3 comments:

  1. Very well explained and beautiful meaning. Sir, Can you please recommend the book to purchase? Namaskaram

    ReplyDelete
  2. கண்ணதாசன் இந்தப் பாடகின் முதல் வரிகளை உபயோகித்து ஒரு நல்ல பாடல் அவன் தான் மனிதன் படத்தில்: https://www.youtube.com/watch?v=HLzDV7iApBM

    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
    அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்

    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
    இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். உங்களின் சிறந்த சேவை இந்த உலகமே பயன் அடையும்..

    ReplyDelete