Monday, April 17, 2017

இராமாயணம் - வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே

இராமாயணம் - வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே 


தயரதன் சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். இராமனைத் தேடி பரதன் வருகிறான். இராமனிடம் அரசை ஒப்படைக்க வேண்டும், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது பரதனின் எண்ணம்.  படையோடு வரும் பரதனை தூரத்தில் கண்ட இலக்குவன் , பரதன் தங்கள் மேல் படை எடுத்து வருவதாக எண்ணிக் கொண்டு பரதன் மேல் படை தொடுக்க தயாராகிறான். பரதன்  அப்படி பட்டவன் அல்ல என்று இராமன் , இலக்குவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

கூப்பிய கைகளோடும், அழுத விழிகளோடும்  வரும் பரதனை இலக்குவன் காண்கிறான்.


"மிகுந்த வலிமையுடைய பரதனின் தோற்றத்தைக் கண்ட இலக்குவன், கோபம் தணிந்து, சோர்ந்து, கண்ணில் நீர் வழிய, கையில் உள்ள வில் நழுவி விழ ஒளி இழந்து நின்றான் "


பாடல்

எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் -
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும்
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர,
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே.


பொருள்

எல் ஒடுங்கிய = ஒளி குறைந்து. எல் என்றால் ஒளி. எல்லே இளங்கிளியே

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

உடல் ஒளி விடுமாம். மிகுந்த ஒளி விடும் உடலைக் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரதீபன் என்று பெயர்.

இராமன் உடலில் இருந்து புறப்பட்ட ஒளி சூரிய ஒளியை விட பிரகாசமாய் இருந்தது என்பார் கம்பர். சூரியன் ஒளி தன்னுடைய மேனியின் ஒளியில் மறைய என்று இராமனின் மேனி ஒளியையை கூறுவார் கம்பர்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


முகத்து இளவல் நின்றனன் = முகத்தை கொண்ட இலக்குவன் நின்றான்

மல் ஒடுங்கிய = மல் யுத்தம் ஒடுங்கிய

புயத்தவனை = புயங்களை கொண்ட பரதனை

வைது எழும் சொல்லொடும் = சினந்து சொல்லிய சூடான சொல்லோடு

சினத்தொடும் = கோபத்தையும்

உணர்வு = உணர்வும்

சோர்தர = தளர்ச்சி அடைய

வில்லொடும் = வில்லோடும்

கண்ண நீர் = கண்ணில் இருந்து வரும் நீர்

நிலத்து வீழவே = நிலத்தில் விழ


மல் ஒடுங்கிய ...பரதன் மிகப் பெரிய தோள் வலிமை உடையவன். அவன் இருக்கும் வரை  வேறு யாரும் மல் யுத்தம் செய்யக் கூட நினைக்க மாட்டார்களாம். அதனால் மல் யுத்தம் என்பதே இல்லாமல் போய் விட்டதாம். எனவே  'மல் ஒடுங்கிய' என்றார்.

பேராற்றல் கொண்டவன் பரதன். அவன் நினைத்திருந்தால் , அரசை அவனே வைத்துக் கொண்டிருக்க முடியும்.  தயரதன் அளித்தது மட்டும் அல்ல, அவன் ஒரு பெரிய  பலசாலியும் கூட. பரதனை யாரும் எதிர்த்திருக்க முடியாது . இருந்தும் அது சரி அல்ல என்று நினைத்து அவன் அரசை இராமனிடம் தர வந்திருக்கிறான்.

அது மட்டும் அல்ல,  எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவனாய் இருந்தாலும் நீதி, நேர்மை, ஒழுக்கம், அறம் இவற்றிற்கு கட்டுப்பட்டே வாழ வேண்டும். நான் பெரிய  ஆள் என்று நினைத்துக் கொண்டு அறம் அல்லாத செயல்களைச் செய்யவே கூடாது.

என்னை யார் கேட்க முடியும் ? யார்க்கு தைரியம் இருக்குறது என்னை எதிர்த்து நிற்க என்று ஆணவத்துடன் அறம் நழுவி நிற்கக் கூடாது.

தவறு செய்ய பயப்படவேண்டும். அறத்தின் முன் கை கட்டி நிற்க வேண்டும். நான் அரசன், மந்திரி, தலைவன் என்று மனம் போன வழியில் செல்லக் கூடாது  என்பதை காட்டும் பாத்திரம் பரதன்.

இலக்குவன் சரியாக ஆராயாமல், இராமன் மேல் கொண்ட அதீத காதலால் பரதனை தவறாக நினைத்த இலக்குவன் , முகத்தில் ஒளி இழந்து, கையில் இருந்த  வில் நழுவ, கண்ணில் இருந்து நீர் நழுவ நின்றான்.

இலக்குவன் தான் செய்தது , செய்ய நினைத்தது தவறு என்று உணர்ந்தான். அதற்காக  வருந்தினான். அவன் முகம் ஒளி குன்றியது. உடல் வலி குன்றியது. குற்ற உணர்வில் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

நினைத்திருந்தால் இலக்குவன் , தன் செயலுக்கு ஞாயம் கற்பித்திருக்க முடியும்.  அவ்வாறு செய்யவில்லை.  தன் தவறை உணர்ந்து வருந்துகிறான்.

சக்ரவர்த்தியின் பிள்ளையாக இருந்தாலும் தவறு செய்யக் கூடாது, அப்படியே தவறி செய்து விட்டாலும் அதற்காக வருந்தி அழுதார்கள்.

உயர்ந்த அறங்களை எடுத்துச் சொல்லும் பகுதி இது.

உணர்வோம். 

2 comments:

  1. உணர்ந்தோம்.அழ்காக விளக்கமளித்தீர்கள்.

    ReplyDelete
  2. பேராற்றல் பெற்றவனாயினும் அறச்செயல்களையே செய்தல் வேண்டும்.
    பரதன் நிலையில் பாரத மக்கள் வாழ்ந்தால் இந்தியா எல்லா நிலையிலும்
    மேலோங்கி வளர்ந்து வாழும்.

    ReplyDelete