Tuesday, April 18, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை 


கானகத்தில் இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர பரதன் வருகிறான். இராமனும் பரதனும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

அவர்கள் பேசியதை கம்பன் சொல்கிறான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவர்கள்நீ என்ன பேசி இருப்பார்கள் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

"அண்ணா", "தம்பி" என்று ஒருவரை ஒருவர் விளித்து கட்டி பிடித்து இருக்கலாம்.  இலக்குவன் மற்றும் சீதையின் நலம் விசாரித்து இருக்கலாம். "என்ன இப்படி செய்து விட்டீர்கள் அண்ணா. நீங்கள் உடனே அயோத்திக்கு வர வேண்டும் " என்று பரதன் சொல்லி இருக்கலாம்.....என்றெல்லாம் நினைப்போம். நாமாக இருந்தால் அப்படித்தான் பேசி இருப்போம்.

பரதன் அப்படி பேசவில்லை.

இராமன் மேல் குற்றக் கணைகளை தொடுகிறான்.

"நீ அறத்தை நினைக்கவில்லை, அருள் என்பதை விட்டு விட்டாய் , அரச முறை என்ற ஒன்றை கை விட்டாய்" என்று இராமன் மேல் நேரடியாக குற்றம் சுமத்துகிறான்.

அன்பு, அண்ணன் மேல் கொண்ட பாசம் அடுத்து வருகிறது.

இதையெல்லம் சொல்லிவிட்டு, இராமன் திருவடிகளில் விழுகிறான். இறந்த தன் தந்தையே நேரில் வந்தது போல இராமனை நினைத்து , தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான்.

பாடல்

‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே.


பொருள்

‘அறம்தனை நினைந்திலை; = அறத்தை நீ நினைக்கவில்லை

அருளை நீத்தனை = அருளை விட்டு நீங்கி விட்டாய்

துறந்தனை முறைமையை = அரச முறை என்ற ஒன்றை துறந்து விட்டாய்

என்னும் சொல்லினான் = என்று சொல்லியவன்

மறந்தனன் = தன்னை மறந்து

மலர்அடி வந்து வீந்தனன் = இராமனிடம் வந்து அவன் திருவடிகளில் வீழ்ந்தான்

இறந்தனன் = இறந்த தன்

தாதையை = தந்தையை

எதிர்கண்டென்னவே = எதிரில் கண்டது போல .

அறம் ஒன்றே பரதனின் மனதில் எப்போதும் நின்றது. இராமன் மேல் கொண்ட அன்பையும்  காதலையும் தாண்டி முதலில் வந்து நிற்பது அறம் பற்றிய  எண்ணமே.

பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு எது என்றால் பிள்ளைகள் தவறு செய்யும் போது  கடிந்து சொல்வது கிடையாது. கண்டிப்பது கிடையாது. பாவம், சின்ன பிள்ளை தானே , போக போக சரியாகி விடும் என்று பிள்ளைகள் மேல் கொண்ட அன்பினால் செய்யும் தவறுகளை திருத்துவது இல்லை.

கணவன் மனைவி உறவிலும் அதே சிக்கல் தான். கணவனோ மனைவியோ தவறான  ஒன்றைச் செய்தால் உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மனம் புண்படுமே என்று தவறை சகிக்கக் கூடாது. எது செய்தாலும் அதற்கு  ஒத்துப் போவது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி அல்ல.  தவறு யார் செய்தாலும்  அது திருத்தப் பட வேண்டியதே.


பரதனுக்கு இராமன் மேல் அளவு கடந்த அன்பு உண்டு. இராமனை தன்னுடைய தந்தையாகவே நினைக்கிறான். இருந்தாலும் அவன் செய்த தவற்றினை தயங்காமல் சுட்டிக் காட்டுகிறான்.

மூன்று தவறுகளை சுட்டிக் காட்டுகிறான்.

அறம் தனை மறந்தனை = அறம் என்பது நீதி, ஒழுக்கம், உயர்ந்தோர் சொல்லியது...அவற்றை எல்லாம் மறந்து விட்டாய். அப்போது கூட இராமன் மேல் மென்மையாக   குற்றம் சொல்கிறான். அறம் பற்றி இராமன் அறியாதவன் அல்ல. தெரியும் , ஆனால் மறந்து விட்டாய் என்கிறான். அறம் தனை  வலுவினை என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. குற்றம் சொல்ல வேண்டும் என்றால்  அதை கத்தி சொல்ல வேண்டும், கோபத்தோடு சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை மென்மையாகவும் சொல்லலாம் என்று பரதன் சொல்லித் தருகிறான்.

அருளை நீங்கினை = என் மேலும், அயோத்தி மக்கள் மீதும் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய். தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்துவது அன்பு. தொடர்பு இல்லாதவர்கள் மேல் செலுத்துவது அருள். உன் குடி மக்கள் மேல் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய்.

துறந்தனை முறைமையை = சரி அறம் தான் மறந்து விட்டது. அருள் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் அரச முறை என்று ஒன்று இருக்கிறதே. அதை  எப்படி நீ விட முடியும். மூத்த மகன் அரசு ஆள்வது என்பது ஒரு முறை. அதை எப்படி நீ துறக்க முடியும் என்று கேட்கிறான்.

சரி , இவ்வளவு கடுமையான குற்றங்களை சொல்கிறானே. அவனுக்கு இராமன் மேல் கோபம் இருக்குமோ ? வெறுப்பு இருக்குமோ ? என்று நாம் நினைப்போம்.

இல்லை. அளவு கடந்த காதல்.

தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான். தந்தை போல அவன் மேல் மரியாதை  வைக்கிறான்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. குற்றம் சொல்வதாக இருந்தாலும், மென்மையாகச் சொல்லலாம். அன்போடும், மரியாதையோடும் சொல்லலாம். குற்றம் சொல்வது என்றால் கோபத்தோடும், வெறுப்போடும், கடுமையான சொற்களோடும் தான் பேச வேண்டும் என்று இல்லை.

பேசிப் பழகுவோம்.



2 comments:

  1. நீங்களே முதலில் சொன்னபடி குற்றமிருந்தால் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதையும் உங்களின் கடைசி பரராவில் சேர்க்கலாம்.
    சின்ன பாட்டில் எவ்வளவு விஷயங்கள் பொதிந்து இருக்கிறது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
  2. தவறுகளைச் சுட்டிக்காட்ட கனிந்த வாழைப்பழத்தில் ஊசியைச் செலுத்துவது போன்று செய்ய வேண்டும்.
    கடிந்து கொள்ளாது கனிந்து சொல்லவும்.

    ReplyDelete