Wednesday, April 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன் 


குடும்பம் என்றால் எப்போதும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. வருத்தம் இருக்கும், சோகம் இருக்கும், கவலை இருக்கும்.

அப்படி ஒரு வருத்தமான சூழ்நிலை வரும்போது என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்கிறோம் ?

வருத்தம் பிள்ளைகளை தாக்கி விடக் கூடாது என்று அவர்களிடம் இருந்து மறைக்கிறோம். பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கட்டும் , நம்ம கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று நினைக்கிறோம்.

குடும்பத் தலைவன் அழலாமா ? அதுவும் மனைவியின் முன்னால் , பிள்ளைகள் முன்னால் ? அழுவது என்பது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு அல்லவா ?

வருத்தத்தை விடுவோம். கணவன் செய்து விடுகிறான். அதனால் மனைவிக்கு வருத்தம். கணவன் அதை உணர்கிறான். அவளிடம் மன்னிப்பு கேட்க அவன் மனம் இடம் தர மறுக்கிறது. "என்னை மன்னித்துக் கொள் , நான் தவறு செய்து விட்டேன் ...உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டேன் ..இனிமேல் இப்படி நடக்காது " என்று அவள் கையை பிடித்துக் கொண்டு கண் கலங்கி சொல்லும் கணவன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

ஆண் என்பவன் அழ கூடாது என்று சொல்லியே வளர்க்கிறோம். உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் ஆண் குழம்புகிறான். தவிக்கிறான். அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வேறு வழியில் வெளிப்படுகிறது.


இராமனைக் காண வந்த பரதனின் மெலிந்த உருவைக் கண்ட இராமன் வருந்தி அழுகிறான். ஐயோ , என் தம்பி இப்படி மெலிந்து உரு குலைந்து போய் விட்டானே என்று உருகுகிறான்.

காப்பிய நாயகன். மிக வலிமையான இராமன் , அன்பில், காதலில் உருகுகிறான். கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவர்.

அளவு கடந்த அன்பினால் , இராமன் கண்கள் நீரை வார்க்கின்றன.

பாடல்

‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.


பொருள்

‘உண்டுகொல் உயிர்?’ = உயிர் இருக்கிறதா ? பரதனின் உடலில் உயிர் இருக்கிறதா ?

என ஒடுங்கினான் = என்று சந்தேகப் படும் அளவுக்கு மெலிந்த

உருக் = (பரதனின்) உருவத்தைக்

கண்டனன்; = (இராமன்) கண்டான்

நின்றனன் = திகைத்து நின்றான்

கண்ணன் = அழகிய கண்களைக் கொண்ட இராமன்

கண்எனும் = கண்கள் என்ற

புண்டரீகம் = தாமரை மலர்கள்

பொழி புனல் = அருவி போல பெருகிய நீர்

அவன் =  பரதனின்

சடா மண்டலம் = முடி நிறைந்த தலையின் மேல்

நிறைந்து போய் = நிறைந்து

வழிந்து சோரவே = வழிந்து விழுந்தது .


இராமன் கால்களில் பரதன் விழுந்தான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். அப்படி விழுந்த பரதனின் தலையில் இராமனின் கண்ணில் இருந்து  வழிந்த நீர் விழுந்து நனைத்தது.

ஆண் அழுவது தவறு இல்லை. ஆண் அன்பை வெளிப்படுத்துவது தவறு இல்லை.

இராமன் அழுதான் என்பதால் அவன் வீரமோ, பெருமையோ குறைந்து விடவில்லை. அது இன்னும் பொலிவு பெறுகிறது.

பரதன் அழுகிறான். இராமன் அழுகிறான்.

ஆண் பிள்ளைகள் அழுவதை பரிகாசம் பண்ணி, அதை அடக்கி அடக்கி அவர்களை  முரட்டு பிள்ளைகளாக வளர்க்கிறோம். அவர்களுக்குள்ளும் அன்பு இருக்கிறது. அந்த அன்பு வெளிப்படும் போது கண்ணீர் வரும். கண்ணீர் விட பழக்கம் இல்லை என்றால் அன்பை வெளிப்படுத்துவதும் பழக்கும் இல்லாமல் முரடாக, கரடு முரடாக வளர்வார்கள்.

அதிகாரம் செய்வதும் , மிரட்டுவதும் மட்டும்தான் ஆண்மை என்று நினைத்துக்கொண்டு வளர்வார்கள். அது சரியா ?

சிந்திப்போம்.




1 comment:

  1. அழுவதும் கண்ணீர் விடுவதும் அன்பின் வெளிப்பாடே! மேலும்
    ஓர் ஆண் அழுவதால் அவனது வீரமும் பெருமையும் பொலிவு மிகுகின்றது.

    ReplyDelete