Sunday, May 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - வாளின் கொன்று அறம் தின்றான் 


பதவி ஆசை இன்று எவ்வளவு பெரிதாகப் போய் விட்டது. எப்படியாவது, எதை செய்தாவது பதைவியை அடையவேண்டும் என்று தவிக்கிறார்கள். பணம் கொடுத்து ஓட்டு வாங்கி, ஒவ்வாத கருத்து உள்ளவர்களிடம் கூட்டு வைத்து , எப்படியாவது பதவியை அடைய ஆசைப் படுகிறார்கள்.

அற வழியில் அல்லாத அரச பதவி தவறு என்று எண்ணி , அப்படி வந்த பதவியை இராமனிடம் திருப்பித் தர வந்திருக்கிறான் பரதன்.

"நீ ஏன் தவக் கோலம் கொண்டு இருக்கிறாய்" என்று கேட்ட பரதனிடம் , பரதன் சொல்கிறான்

"வழி வழியாக வந்த அரச பதவியை துறந்து நீ (இராமன்) தவக் கோலம் கொண்டு காடு வந்து இருக்கிறாய். அப்படி இருக்கும் போது , நான் மட்டும் எப்படி , மரபை மறந்து, நீதியில் இருந்து விலகி, அறத்தினை வாளால் கொன்று தின்று அரசை ஆள முடியும் "

என்றான்.

மிக மிக கடுமையான வார்த்தைகள். அறத்தை வாளால் கொன்று தின்ற என்று சொல்கிறான்.

பாடல்

‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?


பொருள்


‘பிறந்து = மூத்த மகனாக பிறந்து

நீயுடைப் = உனக்கு உடைய

பிரிவு இல் = உன்னை விட்டு பிரியாத

தொல் பதம் = பழைய முறைமையான அரசு

துறந்து, =துறந்து

மா தவம் = பெரிய தவம்

தொடங்குவாய் என்றால் = தொடங்குவாய் என்றால்

மறந்து = மறந்தும் கூட

நீதியின் திறம்பி = நீதியை விட்டு விலகி

வாளின் கொன்று = வாளால் கொன்று

அறம் தின்றான் = அறத்தினை தின்றான்

என = என்று

அரசுஅது ஆள்வெனோ? = அரசை ஆள்வேனோ ?


அரச பதவியை விட, அது தரும் சுகத்தை விட அறமே உயர்ந்தது என்று இருந்தான் பரதன்.

எப்படி ஒரு பாரம்பரியம் இருந்திருக்கிறது ? எந்த ஒரு உன்னத நிலையில் இருந்திருக்கிறோம்.

எங்கிருந்து , எங்கே வந்து விட்டோம்.

அற வழியில் வராத எதுவும் நல்லது இல்லை. அது அரச பதவியாக இருந்தாலும் சரி, வேறு எந்த பதவியாக இருந்தாலும் சரி.

3 comments:

  1. அற்புதமான விளக்கம்.நாம்அதல பாதாளத்தில் விழுந்த உணர்ச்சி தான் மனதில் நிற்கிறது.
    ராமாயணத்தில் கற்க எவ்வளவோ இருக்கிறது. உங்கள் பணி சிறப்பானது்

    ReplyDelete
  2. பரதனின் அறம் தவறாத தன்மை அவன் மீது பெருமதிப்புக் கொள்ள வைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  3. 'ஆயிரம் ராமர் நின் கீழ் ஆவரோ' என்று சும்மாவா சொன்னார்? இதில் ராமன் சிறந்தவரா, பரதன் சிறந்தவரா என்றால் அளக்கும் பொருள், அளக்கப்படும் பொருளில், அளக்கப்படும் பொருளே உயர்ந்ததாக இருக்கும். ( ஸ்கேல் அளக்கும் பொருள், துணி அளக்கப்படும் பொருள்) அதனடிப்படையில் அளக்கப்படும் பரதனே உயர்ந்தவன் என்பார் முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மாச்சார்யார் ஸ்வாமி.

    ReplyDelete