Saturday, May 27, 2017

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் , அந்தப் பெற்றோருக்குத் தெரியும்....

என்னைக்கும் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிறவள் தானே, இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்று அந்த பெண் பிள்ளைக்கு கொஞ்சம் அதிகமாகவே அன்பு காட்டுவார்கள். அதிலும் அப்பாக்கள் ரொம்பத் தான் செல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் செல்லம் கொடுத்தாலும், அம்மாவுக்கு கொஞ்சம் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

போகிற இடத்தில் இந்த பெண் எப்படி சமாளிக்கப் போகிறாளோ ?  போகிற இடத்தில் இந்த சௌகரியம் எல்லாம் இருக்குமா ? இவ்வளவு சுதந்திரம் இருக்குமா ?  என்றெல்லாம் கவலைப் படுவாள். அதற்காக இப்போது இருந்தே அந்த பெண்ணை கஷ்டப் படுத்த வேண்டுமா ? அதுவும் முடியாது.

இப்போது உள்ள அம்மாக்களுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இந்த பெண் எப்படி விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பாள் ? பிடித்த உணவு கிடைக்குமா ? எப்படி துணி துவைப்பாள் ? வேலைக்குப் போகிற இடத்தில் எங்கு தங்குவாள் ? எப்படி இந்த உலகை எதிர் கொள்ளுவாள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த கவலை இன்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே இருக்கிறது.

செல்லமாக வளர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீடு போகிறாள்.

போன இடம் அவ்வளவு பெரிய இடம் இல்லை. அவளின் பிறந்த வீடோ பெரிய பணக்கார வீடு. பால் சோறு தான், தங்கக் கிண்ணம் தான், பெரிய வீடு, வீட்டை அடுத்த தோட்டம் , தோட்டத்தில் மல்லிகையும், முல்லையும் பூத்து குலுங்குகிறது.

போன இடத்தில் சரியான சாப்பாடு கூட கிடையாது.

கட்டிக் கொடுத்த பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வர செவிலித் தாய் போகிறாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இந்தப் பெண் நம் வீட்டில் இருக்கும் போது தேனும் பாலும் கலந்த உணவை பொற் கிண்ணத்தில் ஏந்தி சாப்பிடு சாப்பிடு என்று பூ சுற்றிய குச்சியை வைத்து அவளை விரட்டிக் கொண்டு சென்றோம், பொற் சிலம்பு ஒலிக்க அங்கும் இங்கும்  பூ பந்தலுக்கு கீழே ஓடுவாள். சரியான விளையாட்டுப் பெண்ணாக இருந்தாள் . நீரோடும் இடத்தில் பரல் கற்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நீர் சோறுதான் இருக்கிறது. அது கூட மூன்று  வேளையும் இல்லை. ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்கிறாள். அப்போது கூட தந்தை வீட்டில் இருந்த செல்வச் செழுமையை நினைத்து வருந்தவில்லை. இந்த அறிவையும், கற்பையும் இவள் எங்கு கற்றுக் கொண்டாள் என்று அந்த செவிலித் தாய் வியக்கிறாள். பாடல்
   


பாடல்

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே


பெண்ணைப் பெற்ற அம்மாக்களே, கவலைப் படாதீர்கள். உங்கள் பெண்  எந்த சிக்கலையும் எதிர் கொண்டு சமாளிப்பாள். நீங்கள் சமாளிக்கவில்லையா ? வழி வழியாக இப்படித்தானே செய்து கொண்டு  வந்து இருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள். விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் உங்கள் மகள் , அது விடுதியாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் இடமாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி  , நல்ல படி எதிர் கொண்டு சமாளிப்பாள்.

ஐயோ, நான் அவளுக்கு ஒண்ணுமே சொல்லித் தரவில்லையே என்று பயப்படாதீர்கள். 

இந்தப் பாடலில் செவிலி வியக்கிறாள் - அறிவும்,  ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்  என்று.

எப்படி இவற்றை படித்துக் கொண்டாள் ? யார் இவளுக்குச் சொல்லித் தந்தார்கள் ? நானோ அவளின் தாயோ சொல்லித் தரவில்லை. தானே கற்றுக் கொண்டு விட்டாளே என்று வியக்கிறாள்.

அது தான் பெண்.

மகா சக்தி.  அவள் அனைத்தும் நடத்துவாள். கவலையை விடுங்கள். 

1 comment:

  1. முதல் செய்தி... எல்லாப் பெண் குழந்தைகளையும் பெற்றோர் போற்றி வளர்ப்பதில்லை. இந்தியாவில், பெண் சிசுக் கொலை முதல், பெண்களை படிக்காமல் செய்வது முதல், இளம் பெண் மணம் முதல், "அடுத்தவன் வீட்டுக்குப் போறவள் தானே" என்ற வசைச் சொல் முதல் எல்லாம் உண்டு. அதை எண்ணும்போது இந்தியப் பண்பாடு பற்றி வெட்கமாக இருக்கிறது.

    அது இருக்கட்டும். இந்தப் பாடல் அருமை சும்மா தூள் தூள் தூள். அந்தப் பெண்ணின் இளமைக்காலச் செல்வமும், தற்கால வறுமையும் மண் முன்னே தெரிகின்றன.

    இதைப் படித்து இன்புறும் வாய்ப்பைத் தந்ததற்கு மிக நன்றி!

    ReplyDelete