Monday, May 29, 2017

இராமாயணம் - கவிதையும் ஆறும்

இராமாயணம் - கவிதையும் ஆறும் 


கவிதை என்பது ஒரு ஆறு போல இருக்க வேண்டும் என்கிறார் கம்பர்.

இன்று யார் யாரோ கவிதை எழுதுகிறார்கள்.  கவிதை எழுத முதல் தகுதி காதல் தோல்வி என்று வைத்திருக்கிறார்கள்.

எப்படி ஆறு இருக்கிறதோ அது போல கவிதை இருக்க வேண்டும் என்கிறார்.

ஆறு எப்படி இருக்கும் ?

பாடல்

புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

பொருள்


புவியினுக்கு அணியாய் = நிலமகள் கழுத்தில் கிடக்கும் ஒரு சங்கிலி போல, இடுப்பில் உள்ள ஒரு ஒட்டியாணம் போல அணிகலனாக

ஆன்ற பொருள்தந்து = வரும் வழியில் உள்ள நல்ல பொருள்களை எல்லாம் ஏந்தி கொண்டு வந்து

புலத்திற்றாகி = புலன்களையும் தாண்டி மகிழ்ச்சி தருவதை போல

அவி அகத் துறைகள் தாங்கி =  மனதுக்கு குளிர்ச்சி தந்து

ஐந்திணை நெறி அளாவி = ஐந்து திணைகளையும் தொட்டுக் கொண்டு

சவி உறத் தெளிந்து = தெளிந்த நீரோடையாக

தண்ணென்று = குளிர்ந்து

ஒழுக்கமும் தழுவிச் = கரைகளுக்குள், ஒரு கட்டுப்பாட்டோடு

சான்றோர் கவி எனக் = பெரியவர்கள் சொன்ன கவிதை போல

கிடந்த = சென்ற

கோதாவரியினை = கோதாவரி  ஆற்றினை

வீரர் கண்டார் = வீரர்களான இராமனும் இலக்குவனும் கண்டார்கள்

அவ்வளவுதானா ?

ஆழ்ந்து சிந்திப்போமா ?

ஆற்றினை பார்த்து இருக்கிறீர்களா ?

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு அடி எடுத்து வைத்தால் சில் என்று இருக்கும். கரையில் ஆழம் இல்லை என்று இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், திடீரென்று ஆழமாக இருக்கும். இழுத்து விடும்.  நதியின் ஆழம் எவ்வளவு என்று  மேல் இருந்து பார்த்து சொல்ல முடியாது.

சில கவிதைகள் அப்படித்தான். பார்க்க ஏதோ மேலோட்டமாக சாதாரண கவிதை போல இருக்கும். உள்ளே போக போக இழுத்துக் கொண்டே போகும். அவ்வளவு  பொருள் ஆழம் இருக்கும்.

ஆறு மலையில் இருந்து வரும் போது வரும் வழியில் உள்ள பல மலர்கள் அதன் மேல் விழும். அத்தனை மலர்களையும் சுமந்து வரும். சந்தனம் போன்ற  மரத்தை உரசிக் கொண்டு வருவதால் அந்த மணமும் சேர்ந்து இருக்கும்.

தள்ளி நின்று பார்த்தால் மிதக்கும் பூ தெரியும். நீரில் இறங்கினால் தான் மணம் புரியும்.

கவிதையும் அப்படித்தான். சும்மா வாசித்துக் கொண்டு போனால் ஏதோ அழகு தெரியும். உள்ளே இறங்கி அனுபவிக்கும் போது தான் அதன் மணம் புரியும்.

"புவியினுக்கு அணியாய்"  ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் ஆறு ஏதோ  ஒரு அணிகலன் போல வளைந்து நெளிந்து மின்னும்.

அது போல கவிதை என்பது வாழ்க்கைக்கு ஒரு அணிகலன் போல அழகு சேர்க்க வேண்டும்.


"புலத்திற்றாகி" - புலத்து + இற்று + ஆகி

புலன்களை கடந்து செல்ல வேண்டும். ஏதோ கிளர்ச்சிக்கு மட்டும் பாடல் இருக்கக் கூடாது. ஆற்றில் குளித்தால் புலன்களுக்கு இன்பம் தருவது மட்டும் அல்ல, ஒரு மன நிறைவும் இருக்கும். அது போல ஒரு பாடலைப் படித்தால் மன நிறைவு இருக்க வேண்டும்.

"அகத் துறைகள் தாங்கி" - ஆறு என்பது உயிர் வாழ உதவுகிறது.  உணவு அளிக்கிறது.  ஆறு எப்படி உயிரை தாங்கிப் பிடிக்கிறதோ, அது போல கவிதையும் உள் மனதை தாங்கிப் பிடிக்க வேண்டும். .துக்கம் வந்த நேரத்தில், சோகம் வரும் போது , மனம் சோர்வு அடையும் போது அதை தாங்கிப் பிடிக்க வேண்டும்.  நல்ல கவிதை என்பது மனதுக்கு ஆறுதல் தரும். அகத்துறை என்பது ஆண் பெண் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கை. அதை தாங்கிப் பிடிக்க வேண்டும். துறை என்றால் கரை என்றும் பொருள்.

ஐந்திணை நெறி அளாவி = ஆறு மலை, காடு, நிலம், கடல் என்று பாய்ந்து ஓடுகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு ஒழுக்கம் உண்டு. மனித வாழ்வின் ஒழுக்கம் அவன் இருக்கும் இடத்தைப் பொறுத்து அமைகிறது. கவிதை எல்லா வாழ்க்கை முறைகளையும் தொட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.


ஆறு கடைசியில் கடலைப் போய் சேரும். அது போல நல்ல கவிதையும் ஒரு ப்ரமாண்டத்ததில் கலக்க வேண்டும். உண்மை, அழகு, அறம் , ஒழுக்கம் , கடவுள் , மனித நேயம் , காதல் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மை விட பெரிய ஒன்றில் அது நம்மை கொண்டு சேர்க்க வேண்டும்.

சான்றோர் கவி என கிடந்த கோதாவரி என்கிறான் கம்பன்.

ஒரு கவிதையை படித்தால் இதில் உள்ளவை எத்தனை அதில் இருக்கிறது என்று பாருங்கள்.

அழகு
பொருள் செறிவு
மன நிறைவு
மன அமைதி
ஒழுக்கம், வாழ்க்கை நெறி

இதெல்லாம் கலந்திருக்க வேண்டும்.

இன்றும் வரும் புதுக் கவிதைகளையும், சினிமா பாடல்களையும் படிக்கம் போது  , நல்ல கவிதைக்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது.

நல்ல கவிதைகளை தேடிப் பிடித்து படியுங்கள்.


2 comments:

  1. என்ன ஒரு அருமையான உரை! முதலில் பாடலைப் படிக்கும்போது, "இவ்வளவுதான?" என்று தோன்றியது. உரையைப் படித்த பிறகுதான் முழுப் பொருளும் தெரிகிறது. அருமை!

    நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

    ReplyDelete