Tuesday, May 9, 2017

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக

இராமாயணம் - மரணம் பற்றிய பயம் போக


தயரதன் இறந்தான் என்ற செய்தியை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். பின் மயக்கம் தெளிந்த அவனுக்கு வசிட்டன் மரணத்தின் தன்மை பற்றி கூறுகிறான்.

கருத்தாழம் மிக்க பாடல்கள்.

"இன்ப துன்பம் என்ற அனுபவங்களால் பிறக்கும் இந்த பிறவிகள் பல கோடிகள் என்று நூல்கள் கூறுகின்றன.  அதை அறிந்த நீ எமனிடம் அருளை எதிர் பார்க்கலாகுமா ?"

என்று கேட்கிறான்.

பாடல்

உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

பொருள்

உண்மை இல் = உண்மை இல்லாத. நிலை இல்லாத

பிறவிகள் = இந்த பிறவிகள், உயிர்கள்

உலப்பு இல் கோடிகள் = கணக்கில் அடங்காத கோடிக் கணக்கானவை

தண்மையில் = இன்பத்தில்

வெம்மையில் = துன்பத்தில்

தழுவின” = சேர்ந்தன அல்லது பிறந்தன

எனும் = என்ற

வண்மையை = உயர்ந்த செய்தியை

நோக்கிய = அறிந்த பின்

அரிய கூற்றின்பால் = எமனிடம்

கண்மையும் = அருள் (கண்ணின் மை . கண்ணின் தண்மை அருள் நோக்கு)

உளது எனக் = உண்டு என்று

கருதல் ஆகுமோ? = நினைக்கலாமா ?


வாழ்க்கை இருக்கிறது. வாழ்கிறோம். ஒரு நாள் அது முடிந்து போகிறது. நம் வாழ்க்கை முடிந்தாலும், மற்றவர்கள் வாழ்க்கை முடிந்தாலும் துக்கம் வருகிறது. சோகம் நம்மை பிடித்துக் கொள்கிறது. நம் வாழ்க்கை முடிந்து விடுமே என்ற பயம், சோகம் இருக்கிறது. மரணத்தை கண்டு கலங்காதவர் யார். இறப்பதற்கு யாருக்குத் தான் விருப்பம் இருக்கும்.

ஏன் இந்த துக்கம் வருகிறது ? ஏன் மரணம் இவ்வளவு துன்பகரமாக இருக்கிறது ? அந்த துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று வசிட்டன் சொல்லுகிறான் ?

மரணம் துன்பமாக இருக்கிறது ஏன் என்றால் நாம் அனுபவங்கள் தடை பட்டுப் போகும்.  அனுபவங்கள் தொடராது.

எந்த மாதிரி அனுபவங்கள் ?

இன்பமான அனுபவங்கள் ... நல்ல உணவு, உடை, இசை, நாம் வாசிக்கும் புத்தகங்கள், பார்க்கும் சினிமா, டிவி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு கலந்து பழகும் இனிமையான நேரங்கள் போன்றவற்றை அனுபவிக்க முடியாது.

நடுவில் சில துன்பங்கள் வரலாம். நாம் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. நல்லதோ கெட்டதோ , இரண்டு அனுபவங்களின் தொகுப்பு தான் வாழ்க்கை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை.

சரி. இந்த அனுபவங்களை விட்டு சற்று விலகி நின்றால் ? அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போகாமல் இருந்தால் ? நடப்பவைகளை ஏதோ யாருக்கோ நடக்கிறது என்று ஒரு மூன்றாம் மனிதரைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் மரணம் வலிக்காது.

நாம் அனுபவிக்கிறோம். சுகமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். நீண்ட நாள் அவை வேண்டும் என்று விரும்புகிறோம். அது மரணத்தின் மூலம் தடை படும் போது எமனை திட்டுகிறோம்.

தவறு யாரு மேல் ?

துன்பம் எமனிடம் இருந்து வரவில்லை.

நம் ஆசையினால். நமது அனுபவங்களின் மேல் கொண்ட பற்றினால் , அவை தொடர வேண்டும் என்ற விருப்பத்தால் ...மரணம் நமக்கு துன்பமாகத் தெரிகின்றது.

இதை அறிந்து கொண்டால் மரணம் பற்றை பயமோ , வலியோ இருக்காது.

ஆழமான அர்த்தம் கொண்ட பாடல். தனிமையில் இருந்து சிந்தியுங்கள்.

திரை விலகலாம். உண்மையின் தரிசனம் கிடைக்கலாம்.





1 comment:

  1. மரணம் கவலையை உண்டாக்குவதற்கு ஒரு மறைமுகமான காரணம் சொல்வார்கள். இறந்தவருக்கும் நமக்கும் ஒரு அன்பாலான பிணைப்பு இருக்கும். இனிமேல் அவர்மேல் அன்பு செலுத்த முடியாது என்பதால் கவலையா? இல்லை;
    இதுவரை இறந்தவரிடம் காட்டிய நமது அன்பினை இருக்கும் மற்றவர்களிடம் காட்ட முடியும்; ஆனால் இறந்தவர் நம்மிடம் காட்டிய அன்பு இனிமேல் கிடைக்காது என்பது ஆழ்மனதிற்கு தெரிகிறது, அதுதான் உண்மையான கவலைக்குக் காரணம் என்பார்கள்

    ReplyDelete