Thursday, June 1, 2017

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும்

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும் 


அரசை நீ ஏற்றுக் கொள் என்று இராமனிடம் பரதன் சொல்கிறான். அதை மறுத்துச் சொல்கிறான் இராமன்.

மிக மிக முக்கியமான கட்டம்.


அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. ஆனால், எது சரியோ அதைச் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

தந்தை சொல் கேட்க வேண்டும் என்பது இராமனின் வாதம்.

யார் என்ன சொன்னாலும், அறம் தான் முக்கியம். அதற்கு எதிராக யார் சொன்னாலும் அதை கேட்கக் கூடாது என்பது பரதனின் வாதம்.

இங்கே இராமன் வாதத்தைத் தொடங்குகிறான்....அண்ணன் தம்பிக்குள் நடக்கும் வாதத்தைப் பார்ப்போம். எது சரியான வழி என்று நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

"சரியான வழியும், உண்மையும், நீதியும், மேலான அறமும் இவை யாவும் எல்லாம் படித்த தந்தை சொல்லில் அடங்கும் " என்கிறான் இராமன்.


பாடல்

‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.


பொருள் 


முறையும் = ஒழுக்கமும்

வாய்மையும் = உண்மையும்

முயலும் நீதியும் = அடைய நினைக்கும் நீதியும்.

அறையும் = சொல்லப் படும்

மேன்மையோடு அறனும் = மேலான அறங்களும்

ஆதியாம் துறையுள் = தொன்மையான வழிகள்

யாவையும் = அனைத்தும்

சுருதி நூல் விடா = வேத நெறிகளை விட்டு விலகாத

இறைவர் = அரசர் (தயரதன்)

ஏவலால் = செய்யச் சொன்ன செயல்களால்

இயைவ காண்டியால் = சேர்ந்திருக்க காண் .


இராமானுக்குத் தெரியும் , பரதன் நீதி, நேர்மை, அரம் , அரச குல வழக்கம் என்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறான் என்று. அதற்கு முன்பே, சொல்லி விடுகிறான், அவை எல்லாம் தயரதன் சொன்ன சொல்லில் இருக்கிறது என்று.

தயரதனுக்குத் தெரியாத, அவன் அனைத்தையும் அறிந்தவன் எனவே அவன் சொல்லில் எல்லாம் அடங்கி இருக்கிறது என்கிறான் இராமன்.

புத்தக அறிவா, சான்றோர் சொல்லும் மொழிகளா - எதை கடை பிடிக்க வேண்டும் ?

தந்தையும் , ஆசிரியரும் சொல்லவதை கேட்பதா அல்லது தான் படித்து அறிந்தவற்றை பின் பற்ற வேண்டுமா ?

விடை வருகிறது....


1 comment:

  1. ஏன், புத்தகங்களையும், சான்றோர் சொல்லையும் விட்டால், சொந்த புத்தி கிடையாதா?!!

    ReplyDelete