Thursday, June 22, 2017

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள்

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள் 


பெண்ணின் குணங்களைப் பற்றி சொல்லும் போதெல்லாம் , அவளுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

மற்ற குணங்கள் எல்லாம் இருக்கட்டும், அது என்ன மடம்  ?

மடம் என்றால் மடத்தனம்,  அறிவின்மை என்ற பொருளில் தான் பலர் உரை சொல்ல படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.

அது சரிதானா ?  பெண்களுக்கு மட்டும் ஏன் மடத்தனம் என்ற அந்த குணத்தை சொல்லி இருக்கிறார்கள் ? எல்லா பெண்களுமா அப்படி இருப்பார்கள் ?

எனக்கு வேறு ஒரு யோசனை தோன்றுகிறது.

பெண் என்பவள் தன் ஆற்றல் என்ன என்பதை அறியாமல் இருக்கிறாள்.

அவளுக்குள் மாபெரும் ஆற்றல் இருக்கிறது.

மன வலிமையிலும், உடல் வலிமையிலும் பெண் ஆணை விட பல மடங்கு உயர்ந்தவள் தான்.

ஆண் பார்ப்பதற்கு வேண்டுமானால் முரடாய், வலிமையானவனாக தோன்றலாம். உலகிலேயே மிகப் பெரிய  பலமான ஆண் கூட ஒரு நோஞ்சான் பெண் தாங்கும் பிரசவ வலியை தாங்க முடியாது.

மெலிந்து, வலுவிழந்து இருக்கும் ஒரு கடைக் கோடி பெண் கூட, அந்த பிரசவ வலியை பொறுத்துக் கொள்கிறாள்.

கல்யாண வீட்டில் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டால் மூச்சு முட்டிக் கொண்டு அலைகிறோம் . மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு அரை கிலோ எடை இருக்கும் உணவு. ஒரு சில மணி நேரங்களில் சீரணம் ஆகி விடும். அதை பொறுத்துக் கொள்வதே கடினமாக இருக்கிறது.

பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பதை ஒரு ஆணால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரசவம் அதற்கு அடுத்தபடி.

உடல் வலியில் பெண் ஆணை விட பல படிகள் மேல் என்பதில் சந்தேகமே இல்லை.

மன வலியிலும் பெண் உயர்ந்தே நிற்கிறாள். பிறந்த வீடு, பெற்றோர்,உற்றார், உறவு, உடன் பிறப்பு என்று அனைத்தையும் விட்டு விட்டு புகுந்த வீடு போய் ,    அனைவரையும் அணைத்துக் கொண்டு போய் , கணவன், குழந்தைகள் என்று அத்தனை போரையும் சமாளித்து கொண்டு போகும் அவளின் மன உறுதியும் பலமும் அசாதாரணமானது.

இவ்வளவு பலம் இருந்தும், தன்னிடம் பலம் இல்லை என்று நினைத்தே வாழ்கிறாள்.

ஆனால், சமயம் வரும்போது எவ்வளவு பெரிய சுமை, சிக்கல் , பிரச்சனை வந்தாலும் அவள் தன் பலத்தால் அவற்றை எதிர் கொண்டு சமாளிக்கிறாள். அவள் இல்லாமல் ஆணால் ஒன்றும் செய்ய முடியாது. தெரியாமலா சொன்னார் வள்ளுவர் "வாழ்க்கை துணை நலம் " என்று மனைவியை.

அவள் துணை இல்லாமல் , ஆண் ஒன்றும் சாதிக்க முடியாது.

அப்படி தன் வலிமை தெரியாமல் அவள் அடங்கி  போவதால், தன் பலம் அறியாத அந்த குணத்தை மடம் என்று சொல்லி இருக்கலாம்.

அது மடத்தனம் இல்லை. அவளின் இயற்கை குணம் , அவளின் ஆற்றலை அவள் அறியாமல் மறைக்கிறது.  அந்த மறை தன்மையை உலகம் மடத்தனம் என்று கூறுகிறது.

இது என் சொந்த கற்பனை அல்ல.

இராமாயணத்தில் சீதை.


அவள், வெகுளியாக இருக்கிறாள்.

இராமனும், இலக்குவனும் சீதையும் நகரத்தை விட்டு காடு நோக்கி போகிறார்கள்.

நகரின் வாசலை தாண்டியவுடன், இராமனிடம் சீதை கேட்கிறாள் "இதுதான் காடா ?" என்று. அவ்வளவு வெகுளி. ஒன்றும் தெரியாத பெண்ணாக இருக்கிறாள். நகர் வாசலை தாண்டியவுடன் காடு வந்துவிட்டது என்று எண்ணும் அளவுக்கு உலக அறிவே இல்லாமல் இருப்பதாக கம்பன் காட்டுகிறான்.


பாடல்


"நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய். 

பொருள்

"நீண்ட = நீண்ட நாள்

முடி வேந்தன் = முடி சூட்டி அரசாண்ட தயரதன்

அருள் ஏந்தி = கட்டளையை ஏற்று

நிறை செல்வம் = நிறைந்த செல்வத்தை

பூண்டு = = ஏற்று

அதனை நீங்கி = பின் அதை நீங்கி

நெறி போதலுறு நாளின் = (கானகம்) போகும் போது ,

ஆண்ட நகர் = ஆட்சி செய்த நகரமான அயோத்தி

ஆரையொடு வாயில் அகலாமுன் = வாசலை விட்டு விலகியவுடன்
,
யாண்டையது கான்?" = இதுதான் காடா ?

என = என்று

இசைத்ததும் இசைப்பாய் = என்று கேட்டதை (சீதையிடம் ) சொல்வாய் (என்று இராமன் சொல்லி அனுப்பினான்)

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் ஆயிரம் அந்தரங்க பேச்சுகள், செயல்கள் இருக்கும். அதை, அனுமன் போன்ற மூன்றாம் மனிதனிடம் சொல்வது பண்பாடாக இருக்காது. அதே சமயம், அனுமன் , இராமனின் தூதன் தான் என்று உறுதி செய்ய இராமனுக்கும், சீதைக்கும் மட்டும் தெரிந்த சில செய்திகளை சொல்லவும் வேண்டும்.

தேர்ந்து எடுத்து சொல்கிறான் இராமன்.

அப்படி , ஒன்றும் தெரியாதா அப்பாவியாக இருந்த சீதையிடம் , அனுமன் சொல்கிறான்.

"அம்மா, மத்தது எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது என் தோள் மேல் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன் "

அதை கேட்ட சீதை சொல்கிறாள்.

"அனுமனே, எனக்கு தீங்கு செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும் என் சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன் . ஆனால் , அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு களங்கம் என்று நினைத்து செய்யாமல் இருக்கிறேன்"

என்று கூறுகிறாள்

பாடல்

'அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ? 
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் 
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் 
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்


பொருள் 


'அல்லல் = துன்பம் செய்யும்

மாக்கள் = விலங்குகளை போன்ற அரக்கர்கள் வாழும்

இலங்கையது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல

எல்லை நீத்த உலகங்கள் யாவும் = எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும்

என் சொல்லினால் சுடுவேன்; = என் சொல்லினால் சுடுவேன் , எரித்து சாம்பலாக்கி விடுவேன்

அது = அப்படி செய்தால்

தூயவன் = இராமனின்

வில்லின் = வில்லின்

ஆற்றற்கு = ஆற்றலுக்கு

மாசு  = களங்கம்

என்று, = என்று நினைத்து

வீசினேன் = அந்த எண்ணத்தையே வீசி விட்டேன்


இலங்கையை அழிக்க இராமனுக்கு அனுமன் போன்ற அறிவாளி, பலசாலி துணை வேண்டி இருந்தது, ஆயிரக்கணக்கான வானரங்களின் துணை, இலக்குவனின் வீரம்,  வீடணனின் ஆற்றல், அங்கதனின் போர் திறம் என்று பல துணைகள் தேவைப் பட்டது.

சீதைக்கு அது ஒன்றுமே வேண்டாம். ஒரே ஒரு சொல் போதும் என்கிறாள்.

அவ்வளவு ஆற்றல் அவளுக்கு உள்ளே இருக்கிறது.

அதை அறியாமல், "இது தான் காடா " என்று வெகுளியாக கேட்கிறாள். "பொன் மான்  வேண்டும் " சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறாள்.

ஏதோ ஒரு காரணத்துக்காக, இயற்கை அவளின் ஆற்றலை அவளிடம் இருந்து மறைத்து வைக்கிறது.

அவளும் அது தெரியாமல், ஆற்றல் இல்லாதவளாகவே வலம் வருகிறாள்.

அந்த குணத்தைத்தான் உலகம் தவறாக மடமை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது.

ஒரு விதத்தில் தன்னை தான் அறியாதது மடமை தான்.

அனுமனுக்கும் அவன் ஆற்றல் அவனுக்குத் தெரியாது என்று சொல்லுவார்கள்.  அது மடமை இல்லை. அது தேவையாக இருக்கிறது.

ஆசிரியர் மாணவனிடம் கேட்பார் , இரண்டும் இரண்டும் எத்தனை என்று ....அவருக்குத் தெரியாமல்  அல்ல அவர் கேட்பது. அது ஒரு உத்தி. மாணவன் பதில்  சொல்லுவான், அவனை பாராட்டுவார், அவன் மகிழ்வான், மேலும் மேலும்  பல சிக்கலான கணக்கை போட்டு ஆசிரியரிடம் பாராட்டு வாங்கி பெரிய ஆளாவான்.

அனைத்துக்கும் காரணம், ஒன்றும் தெரியாத மடையன் மாதிரி அவர் கேட்ட  இரண்டும் இரண்டும்   எத்தனை என்ற கேள்வி.

பெண் தன் ஆற்றலை மறைத்து, மறந்து ஆணை உயர்த்துகிறாள்.

தன் ஆற்றலை அடக்கி இராமனுக்கு பெருமை சேர்த்தாள் சீதை.

அது மடமையா ?

அது மடமை என்றால், அந்த மடமையை வணங்குவோம்.

இப்படி பெண் தன் ஆற்றலை மறைத்து ஆணை உயர்த்திய பல சம்பவங்கள் நம் இலக்கியம்  எங்கும் கொட்டிக் கிடக்கிறது.

சரியாக பார்க்காமல் இருந்து விட்டோம்.

இன்னும் கொஞ்சம் உதாரணங்கள் சொல்ல ஆசை, தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை இருந்தால்.


2 comments:

  1. மடமை என்றால் என்ன என்று இது வரை தெரியவில்லை. நல்ல பொருள்தான்.

    ReplyDelete
  2. இன்னும் உதாரணம் பல சொல்லுங்கள்.

    ReplyDelete