Monday, June 5, 2017

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர


நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது ,மற்றது கூம்பும்.

நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

இரண்டு கைகளையும் சேர்த்து , குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது , உள்ளத் தாமரை மலரும்.

அதற்கு மாறாக,

எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி , குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

மணிவாசகர் சொல்கிறார்

"கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,"

கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

போற்றித் திரு அகவல்.

இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறு புறம் , தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்துகிறது.

மணிவாசகர் குழைகிறார்.

பாடல்


தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!


பொருள் 

தப்பாமே = விடாமல்

தாம் பிடித்தது சலியா = தான் பிடித்த கொள்கையில் இருந்து விலகாமல்

தழல் அது கண்ட மெழுகு அது போல = தீயில் விழுந்த மெழுகு போல

தொழுது = வணங்கி

உளம் உருகி = உள்ளம் உருகி

அழுது = அழுது

உடல் கம்பித்து =  உடல் நடுங்கி

ஆடியும் = ஆடி

அலறியும் = அலறி

பாடியும் = பாடி

பரவியும் = போற்றி

`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் = இது ஒரு பழ மொழி. கொடிறு என்பது குறடா போன்ற சாதனம். வீட்டில் சூடான பொருள்களை அடுப்பில் இருந்து இறக்க பயன் படுத்துவோமே , கிடுக்கி என்று சொல்லுவார்கள். அதுவும் , முட்டாளும் பிடித்ததை விட மாட்டார்கள்.  என்பது போல

படியே ஆகி = அப்படியே ஆகி

நல் இடை அறா அன்பின் = நல்ல , இடை விடாத அன்பின்

பசு மரத்து ஆணி அறைந்தால் போல = பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எப்படி இறுக பற்றிக் கொள்ளுமோ அது போல பற்றி

கசிவது பெருகி = கண்ணீர் பெருகி

கடல் என மறுகி = கடல் அலை போல அங்கும் இங்கும் அலைந்து

அகம் குழைந்து = உள்ளம் குழைந்து

அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து = அதற்கு ஏற்ப உடல் நடுங்கி

சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப = ஊரில் உள்ளவர்கள் (சகம் ) எல்லாம் என்ன இவன் இப்படி பேய் போல அலைகிறானே என்று சொல்லும் படி

நாண் அது ஒழிந்து = அதற்காக வெட்கப் படாமல்

நாடவர் பழித்துரை = நாட்டில் உள்ளவர்களின் பழிச் சொற்களையே

பூண் அதுவாக = அணிகலனாக கோட்னு

கோணுதல் இன்றி = குறைவு இன்றி

சதிர் இழந்து = திறமை இழந்து

அறியாமல் கொண்டு  சாரும் = தன்னை அறியாமல் கொண்டு போய் சேர்க்கும்

கதியது = உயர்ந்த கதியான அது

பரம அதிசயம் ஆக = பெரிய அதிசயமாக ,

கற்றா மனம் எனக் கதறியும் = கன்றை ஈன்ற பசுவைப் போல கதறியும்

பதறியும் = பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது = மற்ற வேறு ஒரு தெய்வத்தையும் கனவிலும் நினைக்காமல்

அரு பரத்து ஒருவன் = அரிய மேலான ஒருவன்

அவனியில் வந்து = உலகில் வந்து

குருபரன் ஆகி - உயர்ந்த குருவாகி

அருளிய பெருமையை = அருள் செய்த பெருமையை

சிறுமை என்று இகழாதே = சிறியது என்று இகழாமல்

திருவடி இணையை = இரண்டு திருவடிகளையும்

பிறிவினை அறியா நிழல் அது போல = உடலை விட்டு பிரிந்து அறியா நிழல் போல

முன் பின் ஆகி = முன்னும் பின்னும் ஆகி

முனியாது = கோபம் கொள்ளாமல்

அத் திசை = அந்தத் திசை நோக்கி

என்பு நைந்து உருகி = எலும்பு நைந்து உருகி

நெக்கு நெக்கு ஏங்கி = தேம்பி தேம்பி ஏங்கி

அன்பு எனும் ஆறு கரை அது புரள = அன்பென்ற ஆறு இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓட

நன் புலன் ஒன்றி = நல்ல புலன்கள் எல்லாம் ஒன்றாக

`நாத' என்று அரற்றி, = தலைவனே என்று அரற்றி

உரை தடுமாறி = பேச்சு தடுமாறி

உரோமம் சிலிர்ப்ப = மெய் கூச்சம் அடைந்து

கர மலர் மொட்டித்து, இருதயம் மலர = இரண்டு கரங்களும் கூப்பி, இருதயம் மலர்ந்து

கண் களி கூர, =  கண்கள் ஆனந்தத்தை வெளிப் படுத்த

நுண் துளி அரும்ப = வியர்வை அரும்ப

சாயா அன்பினை = தளராத அன்பினை

நாள்தொறும் தழைப்பவர் = தினமும் வளரச் செய்பவர்களுக்கு

தாயே ஆகி = தாய் போல இருந்து

வளர்த்தனை போற்றி! = வளர்த்தனை போற்றி

இறைவன் தாய் போல கருணை செய்வான்.

அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா ?


முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும் , அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

பத்து மாதம் , படாத பாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை  கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ள மாட்டாள். முடியுமா ?

இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை  சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல் , அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும் , கோபத்திற்கும் அளவு இருக்காது.

சூர்பனகையை மூக்கையைம், காதையும், முலையையும் அரிந்தான் இலக்குவன். அவளால் தாங்க முடியவில்லை. எந்தப் பெண்ணாலும் சகிக்க முடியாது.

ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும்.  வயிற்றில்  வரி வாரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

இருந்தும் அந்தப் பிள்ளையை  தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள் .

மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா , பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா , சிவப்பா, ஒல்லியா, குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வ்ளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள் . குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள் . குழந்தைக்கு வலிக்கும் என்று   ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும் , வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான் , ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள் ஒரு தாய்.


அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர். 

No comments:

Post a Comment