Tuesday, July 11, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்


============= பாகம் 2 =======================================


எடுத்த எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க என்ன செய்ய வேண்டும் ?


காரியத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். 

பலருக்கு தோல்வி ஏன் வருகிறது என்றால், எடுத்த வேலையில் உறுதி கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதி கிடையாது. எதிலும் சந்தேகம். 

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, இது சரிதானா, இப்படி செய்யலாமா என்று ஆயிரம் சந்தேகங்கள். இப்படி சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் கிட்டாது. 

எண்ணித் துணிக கருமம் , துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு 

என்பார் வள்ளுவர். 

சரி, துணிந்து இறங்கி விட்டால் என்ன ஆகும் ?

இந்த உலகமே அப்படிப் பட்டவன் பின்  இந்த உலகமே நிற்கும். அவனுக்கு உதவி செய்யும். 

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்திருக்கிறோம். அது நமக்குள் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் என்ன வேலை செய்தாலும், நம் மனம் அந்த ஒன்றை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். 

நாம் அதை தொடங்கும் வரை , நம் மனம் நம்மை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும். 

கீதை அதை சுதர்மம் என்கிறது. 

நம் சுதர்மம் நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்பார் ஆச்சாரியா வினோபாபாவே. 

நாம் அதை தொடங்கியவுடன்,  அதன் பாதையில் செல்லத் தொடங்கியவுடன், இந்த உலகமே நமக்கு உதவி செய்ய பின் நிற்கும். 

இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கிய துறவிகளிடம் இருந்தது ஒரே ஒரு மாற்று உடைதான். அது மட்டும்தான் அவர்கள் சொத்து. ஆனால், அவர்கள் அந்த மிஷனை தொடங்கிய பின், எங்கிருந்தோ செல்வம் வந்து கொட்டியது. 

இராமனின் சுதர்மம், பெற்றோர் சொல் கேட்பது. 

அதற்கு பல தடங்கல்கள்.  அமைச்சர்கள், உடன் பிறந்த தம்பி, கல்வி கற்றுத்தந்த குரு  என்று பல தடைகள் வந்தாலும், தான் கொண்ட கொள்கையில் இராமன் தெளிவாக இருந்தான். 

அப்போது, தேவர்கள் வந்து அவனுக்கு உதவி செய்தார்கள்.

தேவர்கள் என்றால் ஏதோ தேவர்கள் வானில் இருந்து குதித்து வந்து உதவினார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நீங்கள் உங்கள் நல்ல கொள்கையில் உறுதியாக இருந்தால், தெய்வமும் இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்யும். 

நம்பிக்கை, உறுதி இரண்டும் வேண்டும். 

சந்தேகமே வேண்டாம். 

நமது புராண இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் இதைத்தான் பல்வேறு விதங்களில் சொல்கின்றன. 

அசரீரி வந்தது, கடவுள் நேரில் வந்து உதவினார் என்பதெல்லாம், கொண்ட செயலில் உறுதியாக இறங்கினால், தெய்வமும் உதவி செய்யும் என்பதை உணர்த்தவே. 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth, the ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favour all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamt would have come his way. I have learned a deep respect for one of Goethe's couplets:
Whatever you can do, or dream you can, begin it.
Boldness has genius, power, and magic in it!”


― William Hutchison Murray


உங்கள் மனதுக்குள் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தை செயல்படுத்த உறுதியாக இறங்குங்கள்.

இராமன் உறுதியாக நின்றான். வான் உலகம் இறங்கி வந்தது.

நீங்களும் இறங்குங்கள்.

வையமும், வானமும் உங்கள் பின்னால் நிற்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/2.html

No comments:

Post a Comment