Thursday, July 6, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல் 


தயரதனின் கட்டளை ஏற்று இராமன் கானகம் சென்றான். இராமனை , கானகத்தில் சந்தித்த பரதன், அரசை இராமன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது வசிட்டன் இடையிட்டு , இராமன் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறான்.

ஒரு புறம் பெற்றோர் சொல். மறு புறம் குருவின் சொல். எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவது என்ற தர்மசங்கடமான நிலை இராமனுக்கு.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம் ? அரசு பரதனிடம் இருக்கிறது. பரதனே அந்த அரசை தருகிறான். மக்கள் எல்லோரும் இராமன் தான் ஆள வேண்டும் என்கிறார்கள். அரச முறைப்படி பார்த்தாலும் இராமன் தான் பட்டத்துக்கு உரியவன். ஆணையிட்ட தயரதன் இறந்து போய்விட்டான்.  எழுந்து வந்து கேட்கப் போவது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக , குல குருவான வசிட்டரும் ஆணை இட்டு விட்டார்.

பேசாமல் அரசை ஏற்றுக் கொண்டிருப்போம். அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் குறை சொல்ல முடியாது.

இராமன் ஏற்கவில்லை.

அப்பாவின் ஆணையை, அம்மா மகிழ்ந்து சொன்ன சொல்லை ஏற்று அதன்படி நடக்காதபிள்ளையும் ஒரு பிள்ளையா ? அவனைக் காட்டிலும் நாய் எவ்வளவோ மேல் என்கிறான்.

பாடல்


‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?


பொருள்



‘தாய் = தாயான கைகேயி

பணித்து = பணி செய்யுமாறு ஆணையிட்டு

உவந்தன = மகிழ்வோடு

தந்தை, = தந்தையான தயரதன்

 “செய்க” என ஏய  = செய் என்று கட்டளையிட

எப் பொருள்களும் = அப்படி சொல்லப்பட்ட எது ஒன்றையும்

இறைஞ்சி  = வணங்கி

மேற்கொளாத் = ஏற்றுக் கொள்ளாத

தீய = தீமை நிறைந்த

அப் புலையனின் = அந்த புலையனின்

செய்கை = செயலானது

தேர்கிலா = நல்லது கேட்டது தேர்ந்து அறியாத

நாய் எனத் திரிவது = நாய் போலத் திரிவது

நல்லது அல்லதோ? = எவ்வளவோ நல்லது

எவ்வளவு படித்தாலும், யார் என்ன சொன்னாலும், பெற்றோரின் சொல்லுக்கு மேல்  ஒன்று கிடையாது என்று இராமன் வாழ்ந்து காட்டுகிறான்.

பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது, நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கும் ஒரு தலைமுறை வரும் என்று இராமனுக்கு தெரிந்திருக்கிறது. நாலு புத்தகம், கொஞ்சம் google அலசல் செய்து விட்டு , பெற்றோரைப் பார்த்து "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று எள்ளி நகையாடும் தலைமுறைக்கு இராமனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு

பெற்றோர் சொல்வதை கேட்காமல் இருக்கும் வாழ்க்கை , நாயை விட கேவலமானது என்கிறான் இராமன்.

மிக கடினமான வார்த்தைதான்.

பெற்றோரின் சொல் கேட்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் தருகிறான் இராமன்.

சில வீடுகளில் பிள்ளைகள் தந்தை சொல் கேட்டாலும் கேட்பார்கள், தாய் சொல்லை கேட்பது இல்லை. அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு இளக்காரம் வேறு.

இராமானுக்குத் தெரியும் , கைகேயியை விட வசிட்டன் அறிவில் மிக உயர்ந்தவன் என்று. இருந்தும், தாய் சொல்லை வசிட்டனின் சொல்லை விட அதிகம் இராமன் மதிக்கிறான்.

உயர்ந்த கருத்து. அற்புதமான பாடல்.

அறிந்து கொள்வோம். அறியச் சொல்வோம். 

1 comment:

  1. தன் அறிவினால் ஆராயாமல், சும்மா பெற்றோர் சொல்லி விட்டனர் என்று கொள்ள முடியுமா?!

    ReplyDelete