Saturday, July 8, 2017

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய 


சடையனார் என்பவருக்கும், இசை ஞானியாருக்கும் பிள்ளையாக சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தார்.

இது செய்தி.

இதைச் சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

தமிழ் கொஞ்சுகிறது.

பாடல்

மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி 
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

பொருள்

மாதொரு பாக னார்க்கு = மாது + ஒரு + பாகனார்க்கு = பெண்ணை ஒரு உடம்பின் ஒரு பக்கத்தில் உடையவர்க்கு . அதாவது சிவ பெருமானுக்கு

வழிவழி யடிமை செய்யும்  = வழி வழி அடிமை செய்யும்.

அது என்ன வழி வழி ? ஒரு முறை சொன்னால் போதாதா ?

தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழியிலும் சிவத் தொண்டு செய்து வந்த குடும்பம்.  எனவே வழி வழி என்று கூறினார்.

வேதியர் குலத்துட் =  வேதியர் குலத்தில. வேதம் ஓதும் குடும்பத்தில்.  வேதம் என்பது வீட்டுப் புழக்கமாக இருந்திருக்கிறது.

டோன்றி = தோன்றி

மேம்படு சடைய னாருக் = மேன்மை மிகுந்த சடையனாருக்கு

கேதமில் கற்பின் = கேதம் என்றால் துக்கம்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

கேதமில் கற்பு என்றால் குற்றமற்ற கற்பு, தீமையற்ற கற்பு.

வாழ்க்கை = வாழ்க்கை

மனை = மனைவியான

யிசை ஞானியார்பாற் = இசை ஞானியார் பால். அவரிடம்

றீதகன் றுலக முய்யத் = தீது அகன்று உலகம் உய்ய

திருவவ தாரஞ் செய்தார்= திரு அவதாரம் செய்தார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

என் வீடு, என் குடும்பம், என் சமயத்தில் உள்ளவர்கள், என் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இன்பமாக வாழ்ந்தால் போதும் என்று சேக்கிழார் போன்ற பெரியவர்கள் நினைக்கவில்லை.

அவர்களிடம் உலகம் பற்றிய சிந்தனை  இருந்தது.

உலகம் நன்றாக இருக்க வேண்டும் விரும்பினார்கள். உலகம் என்றால் உலகில் உள்ள மக்கள். இடவாகு பெயர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பார் சேக்கிழார்

உலகம் யாவையும் தாம் உள வாக்கிலும் என்பார் கம்பர்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . .

என்று தொடங்குகிறார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப என்றால் உலகம் மகிழ என்று அர்த்தம்.

நான் மகிழ, என் வீட்டில் உள்ளவர்கள் மகிழ, என் சாதிக்காரர்கள் மகிழ என்று வேண்டவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று  பாடினார் நக்கீரர்.

உலகளாவிய சிந்தனை இருந்திருக்குறது.

உலகிலே தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுந்தரர் காலத்திலும் தீமைகள் இருந்திருக்கின்றன.

அந்தத் தீமைகள் எல்லாம் விலகி, உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான்.


தீமைகள் நீங்காவிட்டால் உலகம் அழித்து போகும்.

நன்மைகள் பெருகி உலகம் உய்ய என்று சொல்லி இருக்கலாம்.

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், கொஞ்சம் தீமை இருந்தால் அது நல்லவைகளை சிறுமை படுத்தி விடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பார் வள்ளுவர்.

மனத்துக்கண் நல்லவன் ஆதல் அறம் என்று சொல்லி இருக்கலாம்தானே ? சொல்லவில்லை. மாறாக, மாசிலன் ஆதல் என்று கூறுகிறார்.

தீமைகளை விலக்கி விட்டால், நன்மை தானே வரும்.

"அவதாரம் செய்தார் " அவதாரம் என்றால் மேலிருந்து கீழ்  வருவது. வந்த பின் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடுவது.

இராமனை இருகை வேழத்து இராகவன் என்பார் கம்பர்.

ஏன் இராமனை யானையோடு ஒப்பிடுகிறார் ?

யானையின் காலைப்  பிடித்தால்,அது நம்மை தலைக்கு மேலே தூக்கி முதுகில் உட்கார வைத்துக் கொள்ளும்.

இராகவனும் , அவனுடைய பாதங்களை பிடித்தவர்களை மேலே தூக்கி விடுவான்.

நம்மை உயர்த்த வந்த  யாருமே அவதாரம் தான்.

கீழிருப்பது மேலே செல்வதற்காக , மேலிருந்து ஒன்று கீழே வருவது அவதாரம் என்று பெயர்.

உலகம் தீமைகளில் இருந்து விடப்பட்டு உய்வடைய சுந்தர மூர்த்தி நாயனார்  அவதாரம் செய்தார்


பெரிய புராணத்து தமிழ் சொற்கள் ஆழம் மிகுந்தவை. பொருட்ச்செறிவு நிறைந்தவை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_8.html


3 comments:

  1. Absolutely wonderful writing, Mr Rethin!

    ReplyDelete
  2. தீது அகல என்ற பொருள் அருமை. நன்றி.

    ReplyDelete