Saturday, August 26, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி



ஒரு புறம் தன் மனைவியை , கானகத்தில், ஆல மரத்தின் கீழ் இளைப்பாறும் போது கொன்றவன் இந்த வேடன் தான் என்று குற்றம் சுமத்தும் வேதியன்.

நான் கொல்லவில்லை , யார் கொன்றார்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று சாதிக்கும் வேடன் மறுபுறம்.

இதற்கு அற நூல்கள் என்ன சொல்கின்றன என்று அமைச்சர்களிடம் கேட்டான் பாண்டிய மன்னன்.

அவர்களும் அற நூல்களை ஆராய்ந்தபின், இதை புத்தகம் படித்து அறிந்து சரி செய்ய முடியாது. இது தெய்வத்தால்தான் ஆகும் என்று கூறினார்.

பாடல்

என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல் 
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன் 
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது                                                          ஆல் 
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.


பொருள்

என்னா உன்னித் = என்று எண்ணி

தென்னவன் = பாண்டிய மன்னன்

இன்னம்  இது = இனிமேல் இது

முன்னூல் = முன்பு சொல்லப் பட்ட அற நூல்கள்

தன்னால் = அவற்றின் மூல

ஆயத்தக்கது = ஆராயத் தக்கது

அதை = அதை

என்றன் = எனக்கு

தகவிற்று = உயர்ந்தவர்கள் (அமைச்சர்கள்)

தன் அன்னார் = தன்னைப் போன்றவர்கள்

அந்நூல் = அந்த நூல்களை

ஆய்ந்து   = ஆராய்ந்த பின்னால்

இது நூலால் அமையாது    = இதை நூல் அறிவின் மூலம் தீர்க்க முடியாது

மன்னா  = மன்னவனே

தெய்வத் தாலே = தெய்வத்தால் மட்டுமே

தேறும் வழி  = சரியாகும் வழி

என்றார். = என்று கூறினார்கள்


"தகவிற்று தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து"

தகவு என்றால் தகுதி உடையவர்.   

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தால் காணப் படும்.


என்பது வள்ளுவம். 

ஒருவன் தகுதி உடையவனா , அல்லது தகுதி இல்லாதவனா என்பது அவனுக்குப் பின் நிற்கும் அவனுடைய புகழோ , பழியோ அதைப் பொறுத்தே அமையும் என்கிறார் வள்ளுவர். 

அது பற்றி விரிவாக இன்னொரு பிளாகில் பார்ப்போம். 

தகுதி உடைய  உடையவர்களை  பாண்டிய மன்னன் அமைச்சர்களாக கொண்டிருந்தான். 

எப்போதும் நல்லவர்களை , நம்மை விட அறிவும் தகுதியும் உள்ளவர்களை நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவர்கள் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும் , அதை கேட்டு நடக்க வேண்டும். 

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இன்றியும் கெடும் என்பார் வள்ளுவர். 

நம்மை , நல்லது சொல்லி திருத்தும் நண்பர்கள் இல்லை என்றால், எதிரிகள் இல்லாமலேயே கூட நம் வாழ்வை கெட்டுப் போகும். 

அப்படிப்பட்ட நல்லவர்கள், அற நூல்களை ஆராய்ந்த பின், இந்த சிக்கலுக்கு அந்த நூல்களில் தீர்வு இல்லை. ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 


அறிவின் எல்லையை அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். 

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல் என்பார் வள்ளுவர். 

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின். 

அந்த அறிஞர்கள் மன்னனிடம் சொன்னார்கள் "இதற்கு தீர்வு இறைவனிடம் தான் இருக்கிறது " என்று. 

சட்ட புத்தங்களைத் தாண்டி, அற நூல்களைத் தாண்டி , நீதியை தேடி இருக்கிறார்கள். "சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது ..."என்று இந்தக் காலத்தில் நீதிபதிகள் செய்வது போல தீர்ப்பு சொல்லாமல்  இறை அருளை நாடி இருக்கிறார்கள். 

பாண்டியன் கோவிலுக்குப் போகிறான். சிவனிடம் முறையிடுகிறான். 

சிவன் என்ன சொன்னார் ? இந்த வழக்கு எப்படி தீர்ந்தது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_26.html

No comments:

Post a Comment