Monday, September 25, 2017

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


வான் பொய்ப்பதும், பஞ்சம் வருவதும் என்றும்  உள்ளது தான்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. மழை வந்தால் , வாழ்க்கை.

ஏனோ தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளாய் கோபம் கொண்ட காதலியாய் வானம் முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. பூமி கட்டாந்தரையாக போய் விட்டது. பஞ்சம் பிழைக்க ஊர் மக்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். செத்தாலும் இந்த மண்ணிலேலேயே சாவோம் என்று ஒரு சில வயதானவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிறார்கள். மரங்களில் விளையாடும் அணில் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வருகிறது. வீட்டை காலி பண்ணி விட்டு சென்றவர்கள் விட்டுச் சென்ற நெல் மணிகள், தானியங்கள், என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படி தின்கின்றன. வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது பூட்டி வைக்க ? அணில் தொட்டி முத்தத்தில் விளையாடுகிறது.  மற்றபடி ஊரில் உயிர் இல்லை.

இன்றுதான் அப்படி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் , இந்த கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா ? தேரும் திருவிழாவும், ஆட்டமும் பாட்டமும், குதூகலமாய் இருந்தது. மாடு கன்னு ஒரு புறம், வண்டிகள் அசைத்து செல்வது ஒருபுறம், தெருவோரக் கடைகளும், பாடும் கூத்துமாய் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இன்று, எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய் விட்டது.

அவளுக்கு அந்த ஊர் சொந்த ஊர் அல்ல. ஆனால் அந்த ஊருக்கு வந்து போனவள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்ததையும் பார்த்து இருக்கிறாள். இப்போது வெறிச்சோடிப் போன ஊரையும் பார்க்கிறாள்.

அவள் காதலன் அவளை விட்டு விட்டு வெளியூர் போயிருக்கிறான் - பொருள் தேட.

அவனில்லாத வெறுமை அவளை வாட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த ஊர் போலத்தான் தன் வாழ்வும் என்று நினைக்கிறாள்.

அவன் இருந்த போது சந்தோஷமும், மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவன் இல்லாத போது வெறுமை சூழ்ந்து , சோகத்தில் இருக்கிறாள்.

அந்த கிராமம் போல.

பாடல்


காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.


பொருள் 

காதலர் = காதலர்

உழையராகப் = உடன் இருந்த போது

பெரிதுவந்து = பெரிது உவந்து

சாறுகொள் = சாரம் நிறைந்த

ஊரின்  = ஊரில்

புகல்வேன்  = புகுந்தது போல இருந்தது

மன்ற = ஆனால்

அத்தம் நண்ணிய = பாலை நில வழி சென்ற

அங்குடிச் = அந்த குடிமக்கள் நிறைந்த

சீறூர் = சிறந்த ஊர்

மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின்

அணிலாடு முன்றில் = அணில் ஆடும் முன் இல். இல்லத்தின் முன்னே, திண்ணையில் அணில் விளையாடும்

புலப்பில் = புலப்பு + இல் = தனிமையான இல்லம்

 போலப் = போல

 புல்லென்று = பொலிவு இழந்து

அலப்பென் தோழி = வருத்தம் கொள்வேன் தோழி

 அவர் அகன்ற ஞான்றே = அவர் என்னை விட்டு பிரிந்த பொழுது .

யாருக்காக வருந்துவது ? பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பஞ்சம் பிழைக்க எங்கோ சென்ற  அந்த மக்களை நினைத்தா ? சொந்த வீட்டை திறந்து போட்டு விட்டு, இனிமேல் திரும்பி வரும் எண்ணமே இல்லாமல் , இறுதியாக  விலகிப் போன  அந்த மக்களை நினைத்தா அல்லது

காதலனைப் பிரிந்து வாடும் அந்த இளம் பெண்ணை நினைத்தா ?

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும் அந்த ஊரின் சோகம், அதன் தனிமை, அந்த மக்களின் சோகம் மனதுக்குள் என்னவோ செய்கிறது என்பது உண்மை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_47.html
1 comment:

  1. மிக அருமையான பாடலுக்கு நல்ல உரை தந்ததற்கு நன்றி.

    ஆனால் அவள் அந்த ஊருக்குப் போயிருக்கிறாளா, அல்லது அந்த ஊர் அவளுக்கு ஒரு உவமையா என்பது புரியவில்லை.

    ReplyDelete