Tuesday, October 10, 2017

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து 


எப்போதுமே நல்லதையே பேச வேண்டும். மங்களகரமான சொற்களையே பயன் படுத்த வேண்டும் என்று நம் முன்னவர்கள் ஒரு விதியாகவே செய்து வைத்து இருந்தார்கள்.

அமங்கல சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

சொற்களுக்கு வலிமை உண்டு. அவை சொன்னது போல பலித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நமது இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது.

சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. ஊரே திரண்டு வந்திருக்கிறது. எல்லோரும் மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பொருள்

விரையினர் = மணம் பொருந்திய பெண்கள். பெண்ணுக்கு ஒரு மணம் உண்டு.

இறைவன் திருவடிக்கு மணம் உண்டு என்கிறார் மணிவாசகர்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


மலரினர் = மலரினை கையில் கொண்டவர்கள்

விளங்கு மேனியர் = விளக்கு போல ஒளி விடும் மேனி உடைய பெண்கள்

உரையினர் = நன்கு தெளிவாக பேசுபவர்கள்

பாட்டினர் = இனிமையாக பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = சாய்ந்த கண்ணால் பார்ப்பவர்கள்

(சைட் அடிப்பவர்கள் என்று நாசூக்காக சொல்கிறார் இளங்கோ அடிகள்)

சாந்தினர் = சந்தனம் போன்ற சாந்தினை பூசியவர்கள்

புகையினர் = சாம்பிராணி போன்ற நறுமண புகை போட்டு கூந்தலையும், உடலையும்  மணமாக வைத்து இருப்பவர்கள்

தயங்கு கோதையர் = தயங்கி தயங்கி மென்மையாக நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = உயர்ந்து நிற்கும் இளமையான மார்பகங்களை உடையவர்கள்

இடித்த சுண்ணத்தர் = பௌடர் பூசி இருப்பவர்கள். சுண்ணம் என்றால் பொடி. வாசனைப் பொடி போட்டு இருப்பார்கள். அதைத்தான் நான் பௌடர் என்று சொன்னேன்.

திருப்பொற்சுண்ணம் என்று பத்து பாதல் எழுதி இருக்கிறார் மணிவாசகர்.

பொடி இடிக்கும் போது இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே பெண்கள் இடிப்பார்களாம்.

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

என்பது திருவாசகம்


சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும் மனதை பறி கொடுத்தேன் பாவியேன் என்பார் பாரதியார்


ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’

என்பது  பாரதி பாடிய குயில் பாட்டு


விளக்கினர் = மங்கள விளக்கை கையில் ஏந்திய பெண்கள்

கலத்தினர் = பால், நெய் , அரிசி போன்ற மங்கள பொருள்களை குடத்தில் ஏந்தி வரும் பெண்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர் = முளை குடம் கையில் ஏந்திய பெண்கள்

முகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்கள்

போதொடு = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தலை உடைய பெண்கள்

 பொலன் நறுங் கொடி அன்னார் = அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்கள் வாழ்த்துகிறார்கள். எப்படி ?

‘காதலற் பிரியாமல் = காதலர்கள் பிரியாமல்

கவவுக் கை ஞெகிழாமல் = பிடித்த கை விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீமை ஏதும் இன்றி

என ஏத்தி = என புகழ்ந்து, வாழ்த்தி

சில் மலர் கொடு தூவி = சிறந்த மலர்களைத் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகில் (வானுலகில்)

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்று

மங்கல நல் அமளி ஏற்றினார்- = மங்கலமான ஆரவாரமான திருமணச் சடங்கை செய்து முடித்தனர்.

திருமண வீட்டை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள்.

ஆனால், கூர்ந்து கவனித்தால் தெரியும், எவ்வளவு அமங்கலமான வாழ்த்து இது என்று.  நினைத்து எழுதவில்லை. வந்து விழுகிறது வார்த்தை.

என்ன அமங்கலம் ?

‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்’ 

இது என்ன வாழ்த்து ?

நீங்கள் ஒன்றாக இருங்கள் என்று சொல்லலாம். "பிரியாமல் இருங்கள்" என்று வாழ்த்தினார்கள். பிரிவு என்ற சொல் வந்து விழுகிறது.

"பிடித்த கை நெகிழ்ந்து விடாமல்" ...பின்னால் கோவலன் கண்ணகியை விட்டு விட்டு மாதவியிடம் போகப் போகிறான் என்று கட்டியம் கூறுவதைப் போல , ஒரு எச்சரிக்கை போல அமைகிறது இந்த வாழ்த்து.

", தீது அறுக!"


தீமை இல்லாமல்  இருங்கள் என்று வாழ்த்தினார்கள். நல்லா இருங்கள் என்று சொல்வது  ஒரு வழி. தீமை இல்லாமல் இருங்கள் என்று சொல்வது இன்னொரு வழி.

இது எப்படி இருக்கிறது என்றால்

"மண மக்களாகிய நீங்கள் வண்டியில் அடி படாமல், கை கால் உடைத்துக் கொள்ளாமல்,  எய்ட்ஸ் போன்ற நோய் வராமல்,  கடன் வாங்கி அல்லல் படாமல் , அற்ப ஆயுளில் மண்டையைப் போடாமல் " வாழுங்கள் என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அர்த்தம் என்னவோ நல்லதுதான். இருந்தும் வார்த்தைகள் மங்கல வார்த்தைகள் இல்லை.

கோவலன் கண்ணகி வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியும் தானே.

எனவே எப்போதும் நல்ல, உயர்ந்த சொற்களையே பேசி பழக வேண்டும். பிள்ளைகளுக்கும்  சொல்லித் தாருங்கள்.

கோபத்தில் திட்டினாலும் அமங்கல சொற்களை சொல்லவே கூடாது.

பல திருமண அழைப்பிதழ்களில் , தேவாரத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து போடுவார்கள். அதை கூட தவறு என்று சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள்.  அதில் ஒரு அமங்கல சொல் இருக்கிறது என்று அதை தவிர்க்கும் படி கூறுவார்கள்.

அது என்ன பாடல் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_10.html

1 comment:

  1. இந்தக் கல்யாணத்தில் போய் அந்தப் பெண்களை சைட் அடிக்க மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தூண்டுகிறது இந்தப் பாடல்!!

    தேவார பாடல் என்ன என்று அறிய ஆவல்.

    ReplyDelete