நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2
பாடல்
இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.
சீர் பிரித்த பின்
இடரான யாக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார்
பொருள்
இடரான = துன்பம் நிறைந்த
யாக்கை = உடம்பு
இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்
மடவார் = மடமை கொண்ட பெண்கள்
மயக்கின் = மயக்கினால்
மயங்கார் = மயங்க மாட்டார்கள்
கடவுளர்க்கு = தேவர்களுக்கு
நாதன் = தலைவன், இந்திரன்
ஊர் = தேவலோகம்
ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.
நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்
அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்
ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்
எந்தை = என் தந்தை என்பதன் மரூஉ
அடியார் = அடியவர்கள்.
இது முதல் பாகத்தின் தொடர்ச்சி.
இந்த ஊருக்கு ஆதனூர் என்று ஏன் பெயர் வந்தது ?
ஆ + தன் + ஊர் = ஆ என்றால் பசு. பசுவின் ஊர் என்பதால், ஆதனூர்.
காமதேனு என்ற பசு, இந்தத் தலத்தில் இருந்து தவமிருந்து பெருமாளிடம் சரண் அடைந்ததால் இந்தத் தலம் திரு ஆதனூர் என்று அழைக்கப் படுகிறது.
இங்குள்ள கோவிலில் கர்ப்ப கிரகத்தில் இரண்டு தூண்கள் உள்ளன.
இதே போல் இரண்டு தூண்கள் உள்ள ஒரே ஒரு இன்னொரு தலம் திருவரங்கம். இந்தத் தூண்களை மனத் தூண் என்கிறார்கள். இந்த தூண்களை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டால், நரகம் போக மாட்டோம் என்பது ஐதீகம்.
வைகுண்டத்திலும் இப்படி இரண்டு தூண்கள் இருக்கின்றதாம்.
பாடல்
வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!
சீர் பிரித்த பின்
வாய் ஓர் ஈர் ஐநூறு துதங்கள் ஆர்த்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும் பரந்த தன் கீழ்
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!
என்பது குலசேகர ஆழ்வார் வாக்கு
மன தூண் , ஒரு சிறப்பு.
“என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”
பெரிய திருமடல் 126 - 129 (2674)
என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பு.
இவை எல்லாம் விட எனக்குப் பிடித்த சிறப்பு என்றால் , கீழே வருவதுதான் .....
திருமங்கை ஆழ்வார் , திருவரங்கனுக்கு மதில் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது பொருள் பற்றாக் குறை ஏற்பட்டது. அவர், பெருமாளிடம் வேண்டினார். அப்போது பெருமாள் கனவில், "கொள்ளிட கரைக்கு வா , பணம் தருகிறேன் " என்றார். திருமங்கையும் அங்கே சென்றார். அங்கே ஒரு ஆள் கையில் ஒரு வியாபாரி கையில் ஒரு காலி மரக்காலும் (பெரிய படி) எழுத்தாணியும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். "நீ யார்" என்று மங்கை வினவ, "உமக்கு பொருள் தரும்படி அழகிய மணவாளன் என்னை அனுப்பினார் " என்று கூறி காலி மரக்காலை திருமங்கையிடம் கொடுத்தார்.
"இது என்ன காலி மரக்காயாக இருக்கிறதே ..இதனால் என்ன பிரயோஜனம் " என்று கேட்டார்.
அதற்கு அந்த வியாபாரி , "இதில் பெருமாளே சரண் என்று மூன்று முறை சொல்லி இதில் கை விட்டால் நீர் நினைத்த பொருள் வரும். ஆனால், யார் முறையாக வேலை செய்தார்களோ அவர்களுக்குத் தான் பொருள் வரும். வேலை செய்யாமல் சோம்பித் தெரிந்தவர்களுக்கு வெறும் மணல் தான் வரும் " என்று சொல்லி அதை கொடுத்தார்.
பெற்றுக் கொண்ட திருமங்கை எல்லோருக்கும் அதில் இருந்து கூலி கொடுத்தார்.
சிலருக்கு பொருளும், சிலருக்கு மண்ணும் வருவதைக் கண்ட மக்கள், இந்த வியாபாரி ஏதோ மந்திரவாதி என்று நினைத்து அவரை அடிக்க அவரை துரத்தினார்கள்.
பெருமாள் வேகமா சென்றார். மக்களும் துரத்தினார்கள். திருமங்கை ஒரு குதிரையின் மேல் ஏறி துரத்தினார். ஓடி வந்த பெருமாள் திரு ஆதனூர் கோவிலில் மறைந்து விட்டதாக ஒரு செய்தி உண்டு.
இது அல்ல நான் சொல்ல வந்த சிறப்பு.
அவ்வாறு ஓடி வரும் போது ,
ஆதனூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து ஓலை எழுதியதால் அந்த ஊருக்கு ஓலைப்பாடி என்று பெயர் வந்தது,
பெருமாள் கம்பீரமாக விஜயம் செய்த ஊருக்கு விஜயமங்கை என்றும்,
அவர் ஓடும் போது மற்றவர்கள் எவ்வளவு தூரத்தில் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாராம், அந்த ஊர் "திரும்பூர்" என்றும்,
எங்கேடா ஆள் யாரையும் காணோம் என்று மயங்கி நின்ற ஊர் , மாஞ்சு போய் நின்ற ஊர் "மாஞ்சேரி " என்றும்,
மரக்காலில் கை வைத்த ஊருக்கு "வைகாவூர்" என்றும் ,
புகுந்த ஊருக்கு "பூங்குடி" என்றும்,
கடைசியில் சென்று அமர்ந்த ஊருக்கு "ஆதனூர் என்றும்
பெயர் வந்தது என்பது வரலாற்று குறிப்பு.
இந்த ஊர்கள் இன்றும் இதே பெயரில் வழங்கப் படுகிறது.
இத்தனை ஊர்கள். ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? இந்த சிறப்பு எனக்கு மிகவும் பிடித்தது.
யோசித்துப் பாருங்கள்.
பெருமாள் விரைவாக முன்னே செல்கிறார். அவர் பின்னே திருமங்கை குதிரையில் செல்கிறார். அவருக்குப் பின்னே மக்கள் அவரை தொடர்கிறார்கள்.
இறைவன் முடிவு செய்து விட்டான் திருமங்கைக்கு அருள் செய்வது என்று. அவன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது. திருமங்கைக்கு வியாபாரி போல வந்தான்.
என்ன தத்துவம் , இறைவன் எந்த வடிவிலும் வருவான். எல்லா வடிவையும் இறையாக நினைத்து போற்ற வேண்டும்.
வந்த இறைவன், கொஞ்சம் சோதனை செய்கிறான். ஓடுகிறான், எங்கே பக்தனுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று காண. திருமங்கையும் விடாமல் துரத்துகிறார்.
அவர் பின்னால் மற்றவர்கள் செல்கிறார்கள். என்று அவர் இறைவனை அடைகிறாரோ, மற்றவர்களும் இறைவனை காண அவர் வழி செய்வார் என்று ஆச்சார்யா ஸம்ப்ரத்யாத்தை விளக்குகிறது.
சரி, இந்த ஊர் எங்கே இருக்கிறது ?
சுவாமி மலைக்கு பக்கத்தில், திரு புள்ள பூதக்குடிக்கு பக்கத்தில், நடந்தால் போய் விடும் தூரம் தான்.
கும்பகோணம் போய் விட்டால், புள்ள பூத கூடியும், திரு ஆதனூரும் தரிசனம் பண்ணலாம்.
மூலவர் கையில் மரக்காலோடு அளந்து கொடுக்கும் திருக்கோலம். பெயர் ஆண்டாளுக்கு ஐயன். இன்னொரு கையில் எழுத்தாணி.
சென்று வாருங்கள். பக்திக்காக இல்லாவிட்டாலும், ஒரு சரித்திர சம்பவம் நிகழ்ந்த இடம் என்றாவது நினைத்துப் போகலாம்.
http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_29.html