Sunday, January 14, 2018

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி 


கம்பன் தன் காவியப் போக்கில் சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விடுகிறான்.

அதற்கு காரணம் பல இருக்கலாம்.

பெரிய காப்பியம் செய்யும் போது , சில சில விஷயங்கள் விட்டுப் போவது இயல்பு. எல்லாவற்றையும் நுணுக்கமாக சொல்லுவது என்றால் காப்பியத்தின் சுவை குன்றும். இது ஒரு ஒரு காரணம்.

இரண்டாவது, சில விஷயங்களை இல்லை மறை காயாகத்தான் சொல்ல முடியும். இராமாயணம் போன்ற காவியத்தை பல தரப்பட்ட மக்கள் படிப்பார்கள். எனவே, எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

மூன்றாவது, அவை நாகரிகம் கருதியும் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கலாம்.

நமக்குத் தெரியாது. இருந்தும், விட்டதற்கான காரணம் தெரிந்தால், அதிலும் ஒரு பாடம் இருக்கும்.

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் முடிந்து விட்டது. எல்லோரிடமும் ஆசி வாங்க வருகிறார்கள். மூன்று தாய்மார்களும் இருக்கிறார்கள்.

கோசலை, கைகேயி, மற்றும் சுமித்திரை.

யாரிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும் ? பெற்ற தாய் கோசலை , அவளிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும்.

அல்லது, மூத்த பட்டத்து இராணி என்று பார்த்தாலும், கோசலை தான் முதலில் வந்தவள்.

ஆனால், இராமன், கோசாலையிடம் முதலில் ஆசி வாங்கவில்லை.

கைகேயிடம் முதல் ஆசி பெறுகிறான்.

பாடல்


கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

பொருள்


கேகயன் = கேகய நாட்டின் அரசனின்

மா மகள் = சிறந்த மகள்

கேழ்  கிளர் பாதம். = ஒளி பொருந்திய திருவடி

தாயினும் = தாயை விட

அன்பொடு = அன்பு கொண்ட

தாழ்ந்து வணங்கா = (அவளின் அடிகளை) தாழ்ந்து வணங்கி

ஆய = பின்பு

தன் அன்னை அடித் துணை சூடி = தன் அன்னையான கோசலையின் பாதங்களை வணங்கி

தூய சுமித்திரை = தூய்மையான சுமித்தரையின்

தாள் தொழலோடும் = அடிகளை தொழுதான்


முதலில் கைகேயி காலில் விழுந்தான், பின் கோசலை பின் சுமித்திரை. அவ்வளவுதான் கம்பன் சொன்னது.

கம்பன் சொல்லாமல் விட்டது என்ன ?

வீட்டில் ஏதோ ஒரு சிக்கல்.  மனைவிகளுக்குள் ஏதோ ஒரு பனிப் போர் நடக்கிறது. ஆயிரம் தான் கைகேயி இராமன் மேல் அன்பு கொண்டிருந்தாலும்,  திருமணம் நடந்து முடிந்த கையோடு பெற்ற தாயிடம்  முதலில்  ஆசி வாங்குவதுதான் யாரும் எதிர் பார்த்த ஒன்று.

கைகேயிடம் முதலில் ஆசி பெற்றது, சீதைக்கு இராமன் சொல்லாமல் சொல்லும் பாடம். யாருக்கு வீட்டில் அதிகாரம் அதிகம் இருக்கிறது என்று சீதைக்கு  உணர்த்துகிறான்.


திருமணம் ஆன கையோடு , சீதைக்கு இதை எல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இராமன் சொல்ல முடியாது என்பது மட்டும் அல்ல, கம்பனும் சொல்ல முடியாது.

எனவே, சொல்லாமல் சொல்கிறான்.

சீதை புரிந்து கொள்கிறாள்.  அவளுக்குப் புரிந்திருக்கும். பின்னால், பரதன் நாட்டை  ஆள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று அறிந்த போது , "சரி வா போகலாம் " என்று சீதை கிளம்பி விட்டாள்.  காரணம், அவள் அதை  எதிர்பார்த்திருக்க வேண்டும். இராமன் முன்பே கோடி காட்டியிருக்கிறான்.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது, குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை , சிக்கல்களை புதிதாக வந்த மனைவியிடம்  சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

சொன்னால் என்ன ஆகும் ?

"எங்க அப்பா கொஞ்சம் சரி இல்லை. எப்ப பாரு , கைகேயி வீட்டிலேயே கிடப்பார் " என்று சொன்னால், தயரதன் மேல் சீதைக்கு மதிப்பு குறையும். அது குடும்பத்துக்கு நல்லதல்ல.

"என் அம்மா கொஞ்சம் ஒரு மாதிரி. நீ பாத்து நடந்துக்க " என்று மனைவியிடம் சொன்னால்  , மாமியார் மருமகள் சண்டைக்கு அங்கே விதித்திடப் படுகிறது என்று அர்த்தம்.

எப்படி கணவன் இவற்றை எல்லாம் இல்லை மறை காயாக சொல்ல வேண்டுமோ, மனைவியும் அவற்றை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு  , குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும்.

எல்லாவற்றையும் தோண்டி துருவி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

குடும்பம் என்றால் அப்படித்தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.

தன் குடும்பத்தைப் பற்றி கணவன் மனைவியிடம் தரம் தாழ்த்தி பேசக் கூடாது.

கணவன் செய்கையில் இருந்து மனைவி புரிந்து கொண்டு குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இதுவும் , கம்பன் சொல்லாத இராமாயணம்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_14.html

3 comments:

  1. அற்புதமான விளக்கம்.ஏற்புடையாக உள்ளது. ஊன்றி படித்தால் எவ்வளவு பொதிந்து இருக்கிறது என புலப்படும்

    ReplyDelete
  2. நல்ல விளக்கம். நன்கு இரசித்தேன்.

    ReplyDelete
  3. தொடர்ந்து உங்கள் பதிவுகளை ஆவலோடு படித்துவருகிறேன். மிகவும் அருமையான விளக்கங்களைத் தருகின்றிர்கள். நன்றி.

    ReplyDelete