Tuesday, January 23, 2018

இராமாயணம் - மாரீசன் அறவுரை - செற்ற மனத்தோடு அறைகின்றான்

இராமாயணம் - மாரீசன் அறவுரை - செற்ற மனத்தோடு அறைகின்றான் 


அறம் சொல்வது ஒன்றையே பிரதானமான குறிக்கோளாக கொண்டன நமது இலக்கியங்கள்.

கதை சொல்லும் போது கூட, இடை இடையே அறம் சொல்லிப் போகின்றன.

கதையில் பல பாத்திரங்கள் வரும், போகும்.

எந்த பாத்திரத்தின் வழியாக அறம் சொல்லலாம் என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

படிக்கிறவர்கள் பல தரப் பட்டவர்கள்.

வசிட்டர் வாயாலேயே அனைத்தும் தர்மங்களையும் சொன்னால், "ஆமா, இவருக்கு வேற வேலை இல்லை ...எப்ப பாரு எதையாவது உபதேசம் செய்து கொண்டே இருப்பர் " என்று சலிப்புற்று மக்கள் அதை வாசிக்காமலேயே போய் விடுவார்கள்.

எனவே, கம்பன் வெவ்வேறு பாத்திரங்கள் மூலம் தர்மத்தை சொல்கிறான்.

வீட்டில் கூட, பெற்றோர்கள் சொன்னால் பிள்ளைகள் பெரும்பாலும் கேட்பதில்லை. "ஆமா, உங்களுக்கு வேற வேலை இல்லை. எப்ப பாரு எதையாவது advice பண்ணிக்கொண்டே இருப்பீர்கள் " என்று பிள்ளைகள் பெற்றோரின் நல்ல வார்த்தைகளை உதாசீனம் செய்து விடுவார்கள். அதையே அவர்கள் நண்பர்கள் சொன்னால் கேட்பார்கள்.

இராமாயணத்தில் மாரீசன் வாயிலாக கம்பன் சில தர்மங்களை சொல்கிறான்.

சீதையை கவர்ந்து வர ஒரு திட்டத்தை மாரீசனிடம் சொல்கிறான் இராவணன். அதைக் கேட்ட மாரீசன், துடித்துப் போகிறான். அப்படிச் செய்யாதே என்று இராவணனுக்கு அறவுரை கூறுகிறான்.

பாடல்

இச் சொல் அனைத்தும் சொல்லி, 
     அரக்கன், எரிகின்ற 
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் 
     என்னக் கிளராமுன், 
'சிச்சி' என, தன் மெய்ச் செவி 
     பொத்தி; தெருமந்தான்; 
அச்சம் அகற்றி, செற்ற 
     மனத்தோடு அறைகின்றான்;

பொருள்


இச் சொல்  அனைத்தும் சொல்லி = இராவணன் கூறிய அனைத்து சொற்களையும்

அரக்கன் = இராவணன்

எரிகின்ற கிச்சின் = எரிகின்ற தீயில்

உருக்கு இட்டு = இரும்பை இட்டு உருக்கி

உய்த்தனன்   = காதில் இட்டது போல

என்னக் = என்று

கிளராமுன் = உணர்ச்சி வசப்பட்டு

'சிச்சி' என, =சீ சீ என்று

 தன் = தன்னுடைய

மெய்ச் செவி பொத்தி = காதுகளை மூடி

தெருமந்தான் = தடுமாறினான்,

அச்சம் அகற்றி = அச்சம் அகற்றி (இராவணன் மேல் அச்சம், இராவணன் சொன்னதைக் கேட்டு அச்சம்)

செற்ற மனத்தோடு = கோபம் கொண்ட மனத்தோடு

அறைகின்றான் = சொல்லுகின்றான்

அறம் எங்கே இருந்து வருகிறது பாருங்கள்.

மாரீசன் என்ன சொல்கிறான் என்று கேட்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_23.html



No comments:

Post a Comment