Sunday, January 14, 2018

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா



முன் பின் தெரியாத ஒரு ஊருக்குப் போய் , அங்குள்ள ஒரு ஆட்டோவில் ஏறி வழி கேட்டால், போகிற வழியில் ஆளுக்கு ஒரு வழி சொல்வார்கள். முன்னும் பின்னும், வடக்கும் தெற்கும் அலைவோம். ஆட்டோ கூலி வேறு ஏறிக் கொண்டே போகும். நமக்கோ வழி தெரியாது. கேட்பவர்களும் சரியாகாத் தெரியாமல் நம்மை அலைக் கழிப்பார்கள்.

வழி தெரிந்த ஆள் என்று ஒருவரை எப்படி அடையாளம் காண்பது ? அதுவும் சிக்கல்தான்.

இறைவனை அடைய வேண்டும். வீடு பேறு பெற வேண்டும். உண்மை எது என்ன என்று கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறோம். யாரிடம் கேட்பது ? எதையெதையோ படிக்கிறோம். யார் யார் சொல்வதெல்லாமோ கேட்கிறோம். எங்கு போகிறோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் வாழ்க்கையை நடத்த நமக்கு உதவி செய்வது நமது புலன்கள். அவை நமக்கு உதவி செய்கின்றனவா ? கண் ஒரு பக்கம் இழுக்கிறது. காது ஒரு பக்கம் இழுக்கிறது. நாக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. அங்கும் இங்கும் அழைக்கிறோம்.

வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

புலன்களை விட்டு விடலாமா என்றால், அதுவும்  முடியாது. அவற்றை நம்பலாமா என்றால்  அதுவும் முடியாது.
'
பின் என்னதான் செய்வது ?

இந்தத் திகைப்பு நமக்கு மட்டும் அல்ல, சுந்தரருக்கும் இருந்திருக்கிறது.

" இறைவா,இந்த புலன்களை என்னை பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கின்றன. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன். நான் உய்யும் வழியை நீ தான் காட்ட வேண்டும் "என்று அலறுகிறார்.

பாடல்


ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்
அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா
தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.

பொருள்

ஐவகை = ஐந்து வகையான

அரையர்அவர் ஆகி = அரசு செய்யும் அதிகாரிகளாக ஆகி

ஆட்சி கொண்டு = என்னை ஆண்டு கொண்டிருக்கும் அவர்கள்

ஒருகால் = ஒரு காலத்திலும்

அ வர் நீங்கார் = அவர்கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள்

அவ்வகை =   அந்த வகையில்

அவர்வே = அவர்கள் (புலன்கள்)

வேண்டுவ தானால் = வேண்டுவதனால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து = அந்தந்த புலன்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நான் சென்று

செய்வகையறியேன் = செய்வது என்ன என்று அறிய மாட்டேன்

சிவலோகா = சிவலோகத்தில் உள்ளவனே

தீவணா = தீ போன்ற வண்ணம் கொண்டவனே

சிவனே = சிவனே

எரியாடீ = கையில் அனலைக் கொண்டு ஆடுபவனே

எவ்வகை = எந்த வகையில்

எனக்கு = எனக்கு

உய்வகை= உய்யும் வகை

அருளாய் = அருள் செய்வாய்

இடைமருதுறை = திருவிடை மருதூர் என்ற தலத்தில் உள்ள

ஏந்தை = என் தந்தையே

பிரானே = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

சுந்தரர் பாடு அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_48.html

2 comments:

  1. ரொம்ப கஷ்டம் .இதை எல்லாம் படித்தால் மனதில் ஓர் அங்கலாய்ப்பு தான் உண்டாகிறதே தவிர,ஐம்புலன்களை அடக்கி ஈசன் பால் மனம் செல்ல வழி தெரிய வில்லையே.என்ன செய்ய?

    ReplyDelete
  2. புலனடக்கம் என்ற தத்துவம் நம் இலக்கியத்தில் எவ்வளவு ஊறிக் கிடக்கிறது!

    ReplyDelete