Wednesday, February 14, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2


பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

இந்த ஊர் எங்கே இருக்கிறது? இந்த ஊரின் சிறப்புகள் என்ன?


திரு அழுந்தூர் என்று கூறப் பட்டாலும், இதன் ஆதிப் பெயர் தேரழுந்தூர். 

ஒரு முறை ஒரு கந்தர்வன் , தேவர்களுக்கு எதிராக தவறான ஒரு தீர்ப்பு சொன்னானாம். அதனால் கோபம் கொண்ட தேவர்கள், பறக்கும் அவன் தேர் தரையில் அழுந்திப் போக என்று சாபம் கொடுத்து விட்டார்களாம். அந்த தேர் அழுந்திய ஊர்  , தேர் அழுந்தூர் என்று ஆகி, தேரழுந்தூர் என்று ஆகி, அழுந்தூர் என்று ஆகி, பின்னர் திரு அழுந்தூர் என்று ஆகிவிட்டது. 

அதெல்லாம் விடுங்கள். 

இந்த ஊருக்கு இன்னொரு முக்கிய , மிக மிக முக்கிய சிறப்பு உண்டு. 

கவி சக்கரவர்த்தி கம்பன் இந்த ஊரில் தான் பிறந்தாராம். அந்த ஊர் மண்ணை மிதித்தால் உடல் சிலிர்க்கும் அல்லவா. ஒரு காலத்தில், கம்பர் இந்த ஊரில்  இருந்திருக்கிறார் , இந்த மண்ணில் நடந்திருக்கிறார் என்று நினைக்கும் போது  எவ்வளவு பெருமையாக , மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு இங்கே மணி மண்டபம் இருக்கிறது. 

அதற்கும் மேலாக, கம்பரின் மனைவிக்கும் ஒரு ஒரு சிலை இருக்கிறது. கம்பரின் மனைவியை  நாம் நினைத்தாவது பார்த்தது உண்டா?


*“கம்பன் பிறந்தவூர், 
காவிரி தங்குமூர்          
கும்பமுனி சாபம் குலைந்தவூர் 
செம்பதுமத்தாதகத்து நாண்முகனும் தாதையும் 
தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

என்ற புலவர் புராணம், இந்த ஊர் கம்பர் பிறந்த ஊர் என்று சொல்லும். 

இந்த ஊரில், பெரிய குளங்கள் இருக்கின்றன. அதில் அன்னப் பறவைகள் வசிக்கின்றன. அன்ன குஞ்சுகள், குளத்தில், அதன் கூட்டில் உறங்குகின்றன. அதன் பெற்றோர் இரை தேடி போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் அந்த குஞ்சுகள் பசியால் விழித்து அழுகின்றன. அந்த சத்தத்தில் , குழம்பிப் போய் அந்த குளத்தில் உள்ள  மீன்கள் அங்கும் இங்கும் தாவுகின்றனவாம். 

குளம்  என்றா சொன்னேன். தவறு. திருத்திக் கொள்ளுங்கள். குளம் இல்லையாம். நிலமாம். அங்குள்ள நிலங்களில் அவ்வளவு தண்ணீர் இருந்ததாம். நிலத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுமாம். அன்னம் கூடு கட்டி வசிக்குமாம். 

பெரிய திருமொழி காட்டும் தேரழுந்தூர் அது. 

  வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
          அடியேன் மனம் புகுந்தென்
     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
          நின்றார் நின்ற ஊர் போலும்
     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
          போனகாதல் பெடையோடும்
     அள்ளல் செறுவில் கயல் நாடும்
          அணியார் வயல் சூழ் அழுந்தூரே
                   (1591) பெரியதிருமொழி 7-5-4

ஒரு போக விளைச்சலுக்கு , மற்ற மாநிலத்தை தண்ணீருக்காக எதிர் நோக்கி இருக்கும் இன்றைய நிலையை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

ஒரு காலத்தில் நீர் அவ்வளவு இருந்தது. 

அப்படிப்பட்ட நீர் உள்ள நிலங்கள் சூழ்ந்த இடம் , தேரழுந்தூர். 

இந்த திரு தலத்தை பிரபந்தம் அப்படி கொண்டாடுகிறது. 45 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

*கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.*

(2066)

*தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,

பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,


நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.*

(2077)


இந்த இடம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

மாயவரத்துக்கு பக்கத்தில் , 2 km  தொலைவில். 

மாயவரம் பக்கம் போனால். ஒரு எட்டு போய்விட்டு வாருங்கள். 

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2.html

2 comments:

  1. நான் சில முறை மாயவரம் போயிருக்கிறேன், ஆனால் கம்பர் பிறந்த ஊர் அருகில் இருப்பது தெரிந்திருந்தால் போய் வந்திருப்பேனே!

    நன்றி.

    ReplyDelete
  2. செம்பதுமத்தாதகத்து நாண்முகனும் தாதையும்
    தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”.. பொருள் என்ன

    ReplyDelete