Tuesday, February 20, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"மார்கழி திங்கள்" 

ஏன் மார்கழி திங்கள் ? ஏன் வேறு எந்த மாதங்களில் இந்த பாவை நோன்பு செய்யக் கூடாது ? கீதையில் கூட கண்ணன், "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்கிறான். மார்கழிக்கு என்ன பெரிய சிறப்பு ?

இறைவனை நாம் எப்போது நினைப்போம்? ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை. 

ரொம்ப சோகமாக இருக்கும் போதும் இறைவனை நினைப்பது இல்லை. அப்படி நினைத்தாலும், "ஆமா, இந்த கடவுள் இருந்தும் ஒன்றும் தான் இல்லாததும் ஒன்று தான் "  என்று கடவுளை நிந்திக்க தலைப்படுகிரோம்.

உண்மையிலேயே நாம் இறைவனை நினைப்பது, ஒரு குழப்பமான மன நிலையில் தான். என்ன ஆகுமோ என்ற குழப்பம் வரும்போது , "கடவுளே  இது நல்ல படியாக முடியனும். அப்படி முடிந்தால், உன் சந்நிதிக்கு வருகிறேன். அதைச் செய்கிறேன் , இதைச் செய்கிறேன் " என்று உருகு உருகி  இறைவனை நினைப்போம். 

மனம் சஞ்சலம் அடையும் போது , குழப்பம் வரும் போது நாம் நினைக்கிறோம். 

நீங்கள் உங்கள் மன நிலையை உன்னிப்பாக கவனித்து, ஒரு டையரியில் உங்கள் மன நிலையை குறித்துக் கொண்டே வந்தால் அது ஒரு அலை போல எழுவதும், குறைவதும் தெரியும். 

இத்தனை மணிக்கு சந்தோஷம், இத்தனை மணிக்கு கோபம், வெறுப்பு, எரிச்சல், காதல், காமம், பசி, தூக்கம் என்று எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே வாருங்கள். 

ஒரு மாதம் கழித்து பாருங்கள். உங்கள் மன நிலை ஏறக்குறைய ஒரே மாதிரி ஒரு சுழற்சியில் இருப்பதை காணபீர்கள்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் மன நிலை உங்கள் கையில் இருக்கிறது என்று. இல்லை. அது பாட்டுக்கு வருகிறது போகிறது. கடலின் அலை போல. 

ஒரு வாரம் சேர்த்து வைத்த குறிப்புகளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் நாம் எப்படி இருக்கிறோம் என்று தெரியும். 

ஒரு சில மாதங்கள் சேர்த்த குறிப்பை பார்த்தால், ஒவ்வொரு வாரமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

ஒரு வருடம் முழுவதும் நாம் ஆராய்ந்தால், ஒவ்வொரு மாதமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

சித்தரை மாதம் நம் மன நிலை பொதுவாக எப்படி இருந்தது. ஆணியில், ஆவடியில்  என்று நாம் பார்க்க முடியும். 

நம்மை நாமே உணர கொஞ்சம் தன்னுணர்வு (sensitivity ) வேண்டும். கோபம் வரும் போது நான் இப்போது கோபமாக இருக்கிறேன் என்ற அறிவு வேண்டும். பல பேருக்கு அந்த அறிவு இருப்பது இல்லை. கோபப் படும்போது கோபம் மட்டுமே  இருக்கிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழ்க்கை செல்கிறது.

உணவின் அளவை குறைத்தால் இந்த sensitivty வரும். 

அப்படி வந்தவர்கள், அறிந்து சொன்னது, மார்கழி மாதம் மிகுந்த குழப்பம் நிறைந்த மாதம். 

ஏன் ?

நம் மன நிலை பலவித வெளிக் காரணங்களால் பாதிக்கப் படுகிறது. 

நாம் உண்ணும் உணவு, நாம் பருகும் திரவங்கள். நாம் இழுத்து விடும் மூச்சின் தன்மை. நாம் வாழும் சூழ்நிலை என்ற பல காரணங்கள் இருக்கின்றன. 

இதில் முக்கியமானது, நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியாதது சூழ்நிலை. 

இரவு பகல், கோடை குளிர் என்பவை நம் மனதை பாதிக்கின்றன. 

சூரியன் நாம் பூமியில் இருக்கும் வட பகுதிக்கு நுழையும் நாள் உத்தராயணம் எனப்படும்.  அது தை மாதம் முதல் தேதி. 

தை முதல் ஆனி  வரை ஆறு மாதம் சூரியன் வட பகுதியில் இருப்பான். 

ஆனி  தொடங்கி  மார்கழி வரை ஆறு மாதம் சூரியன் தென் பகுதியில் இருப்பான். சூரியன் நம்மை விட்டு விலகி இருக்கும் நாட்கள் ஒளி குன்றி இருக்கும். 

அப்படி என்றால், மார்கழி மாதம் தான், இருள் விலகவும், ஒளி பிறக்கவும் உள்ள ஒரு இடைப்பட்ட காலம். இந்த நேரத்தில் மனம் மிகுந்த குழப்பங்களுக்கு உள்ளாகும். 

மனம் நெகிழ்ந்து இருக்கும். 

இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். 

இப்படி யோசித்துப் பாருங்கள். இரவு நன்றாக தூங்கினால், அதி காலை விழிப்பு வரும். அந்த இருள் விலகி ஒளி வரும் நேரம் மனம் தூய்மையாக இருக்கும். சாத்வீக குணம் ஓங்கி இருக்கும் நேரம். அதனால் தான் அந்த நேரத்தில் பூஜை செய்யவும், படிக்கவும் சொன்னார்கள்.. மனதில் அப்படியே படியும். 

நாள் என்பதால் நம்மால் அதை உடனடியே அறிய முடிகிறது. 

இதுவே மாதம் என்று வந்தால் , காலம் நீண்டு இருப்பதால் நம்மால் அதை உணர்ந்து  கொள்ள முடிவதில்லை.

ஒரு நாளின் அதி காலை எப்படியோ, மாதங்களில் மார்கழி அப்படி. 

மனம் தெளிந்து, குழப்பங்கள் விலகி, இருள் நீங்கி, ஒளி பிறக்கும் மாதம். 

மார்கழி திருவாதிரை அன்று தீபம் ஏற்றி சிறப்பாக கொண்டாட காரணம், அது ஒளி முழுவதுமாக நம் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் நேரம். 

எனவே மார்கழி திங்கள் . 

மார்கழியில் பாவை நோன்பு. 

திருப்பாவை முழுவதும், தூங்கும் பெண்களை எழுப்பும் பாடலாக இருக்கும். இது என்ன பக்தி பாடல் ? தூக்கம் ஆட்களை எழுப்புவது ஒரு பக்தியா ? 

எழுப்புதல் என்பது அறியாமை என்ற தூக்கத்தில் இருக்கும் நம்மை எழுப்பி அறிவுடைய செய்வது. மெய்யுணர்வு பெறச் செய்வது. தூக்கத்தில் இருக்கும் போது கனவை உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்போம்.  அது உண்மையல்ல. விழித்துக் கொள் என்று சொல்ல வந்த பாடல்கள் திருப்பாவை. 

எனவே, முதல் இரண்டு வார்த்தைகள், "மார்கழி திங்கள் "

மேலும் சிந்திப்போம்.  

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2_20.html








2 comments:

  1. நல்ல விளக்கம். ஏற்பு உடையதாக உள்ளது.தன்றி.

    ReplyDelete
  2. தை மாதம் முதல் நாள் என்பது ஜனவரி நடுவில் வருவதல்லவா? அப்போதா சொல்ஸ்டிஸ் (solstice) ஏற்படுகிறது? அது தவறாகத் தோன்றுகிறது. அது டிசம்பர் 20 அல்லது 21ஆம் தேதி வருவதாகும், தை மாதம் அல்ல.

    ReplyDelete