Sunday, February 25, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"கூர்வேல் கொடுந்தொழிலன்"

கூர்மையான வேலைக் கொண்டவன், கொடுமையான தொழில்களை செய்பவன். 

யார், கண்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன். 

இது கொஞ்சம் சற்று நெருடலான இடம். 


முதல் பாசுரத்திலே ஆண்டாள், கண்ணனின் தந்தையை ஏன் இப்படி அறிமுகம் செய்கிறாள். 


நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்கள் குணம், மன நிலை தான் நமக்கு வரும். 

அதனால் தான் , தீயாரை காண்பதுவும் தீது என்று சொன்னார்கள். நல்லாரை காண்பதுவும் நன்றே என்றார்கள். 

அது நமக்குத் தெரிகிறது. 

ஆனால், நமக்குத் தெரியாத நுண்ணிய விஷயம் என்ன என்றால், நாம் எவற்றோடு பழகுகிறோமோ, எதை அடிக்கடி கையாள்கிறோமோ அவற்றின் தன்மை நமக்கு வந்து விடும். 

அது ஒரு உயிரில்லா திடப் பொருளாக இருக்கலாம். நாம் எதை அடிக்கடி கை கொள்கிறோமோ, அதன் குணம் நமக்கு வந்து விடும். 


இராமனைப் பற்றி ஜனகனிடம் கூறும்போது, ஜனகனை "உறை ஓடும் நெடு வேலாய் " , இந்த இராமனுக்கு தந்தை தயரதன் தான் என்றாலும், இவனை படிபித்தது எல்லாம் வசிட்டன் தான் என்றான். 

இது கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். 

கையில் எப்போதும் அறிவாளும் கையுமாக திரிந்தால், எதையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றும். 

கையில் எப்போதும் சுத்தியலை கொண்டு திரிந்தால், எதையாவது தட்ட வேண்டும் என்று தோன்றும். 

நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். 

நம்மை சுற்றி புத்தகங்கள் இருந்தால், எதையாவது எடுத்து படிக்கத் தோன்றும். 

நம்மை சுற்றி டப்பா டப்பாவாக முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனிகள் இருந்தால் அதில் இரண்டை எடுத்து வாயில் போடத் தோன்றும். 

அப்படிஎன்றால், நமக்கு என்ன வேண்டுமோ, அது சம்பந்தப்பட்ட பொருள்களை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களை நம்மோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஹை,இது என்ன புது கதை. இது சரிதானா, அப்படியும் கூட இருக்குமா என்ற சந்தேகம் வரலாம். 

வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ? 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் 

உடல்சுவை உண்டார் மனம்

படை கருவிகளை கொண்டவர் மனதில் எப்படி அன்பு, அருள் , கருணை போன்ற நல்ல குணங்கள் இருக்காதோ , அது போல மாமிசம் தின்பவரின் மனத்திலும் அந்த நல்ல குணங்கள் இருக்காது என்கிறார். ஒன்றன் உடல் சுவை கொண்டார் மனம். மற்ற ஒரு உடலை கொன்று தின்பவரின் மனதில்  அருள் எப்படி இருக்கும் ? அது எப்படி என்றால், கத்தி , வேல்  போன்ற படைக் கருவிகளை கொணடவர் மனதில் நல்ல குணங்கள் எவ்வாறு இருக்காதோ அது போல என்கிறார். 

நந்த கோபன் நல்லவனா, கெட்டவனா என்பது அல்ல ஆண்டாள் சொல்ல வந்தது. கையில் வேல் இருந்தால், யாரையாவது குத்தச் சொல்லும். அது கொடும் தொழில். எனவே, அவற்றை விட்டு விடுங்கள். 

சாத்வீகம் மேலோங்கி, மெய்யுணர்வு பெற வேண்டுமா, மென்மையான பொருள்களை கை கொள்ளுங்கள், நல்லவர்களோடு பழகுங்கள் என்று சொல்ல வருகிறாள். 

சரி, இது வள்ளுவர் மட்டும் தான் சொன்னாரா ? அல்லது வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

கம்பர் சொல்லி இருக்கிறார். 

சனகனிடம் வேல் இருந்ததாம். ஆனால் அது எப்போதும் உறையிலேயே இருக்குமாம். வெளியே எடுக்கவே மாட்டானாம். கையில் எடுத்தால் அல்லவா, யாரை குத்தலாம் என்று தோன்றும். உறை போட்டு மூடி வைத்து இருந்தானாம். 


"உரை ஓடும் நெடு வேலாய் " என்கிறார். 


‘திறையோடும் அரசு இறைஞ்சும்
   செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
   புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
   உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை

   வளர்த்தானும் வசிட்டன்காண்.

நாம் கவனிக்க வேண்டிய தொடர் "உறை ஓடும் நெடு வேலாய்!". சனகனிடம் நீண்ட வேல் இருந்தது. அனால் அது உறையிலேயே கிடந்தது. சண்டை போட வாய்ப்பே இல்லை. சனகனை யாரும்  எதிர்த்து நிற்கவில்லை என்பது ஒரு பொருள். சனகன் யாரிடமும் பகைமை பாராட்டவில்லை என்பது இன்னொரு பொருள். 


நம் சூழ்நிலை நம்மை பாதிக்கும். 


ஆண்டாளுக்கு , நந்தகோபனை நினைத்தால் அவன் வேல் நினைவுக்கு வருகிறது. வேல் என்றால் அது செய்யும் கொடும் தொழில்கள் நினைவுக்கு வருகிறது. 

உயிர் கொலை பாவம் , கொடிய செயல் என்று நினைக்கிறாள். 

உயிர் கொலை செய்ய வேண்டாம் என்றால், பின் ஆயுதம் எதற்கு ?

ஆயுதங்களுக்காக கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்யும் அரசுகள் இதை கவனிக்க வேண்டும். 

ஆயுதங்களை குறையுங்கள். அன்பைப் பெருக்குங்கள்.

பகைம்மைக்கு பகைமை அல்ல மாற்று. அன்புதான் மாற்று. 

பகைவனை கொன்றாலும் கொலை தானே.

மனித நேயத்தின் உச்சம் தொடுகிறாள் ஆண்டாள்.

மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/4.html


3 comments:

  1. கூர்ந்த வேலோடு ந்ந்தகோபன் இருப்பதினாலோ மற்றும் தீயவர்களையும்பகைவர்களையும் கொடுமையாக அழிக்கும் திறன் உள்ளவராகவும் இருப்பதால் கூர்வேல் கொடுந்தொழிலன் என சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  2. எனக்கு இன்னும் ஏன் "கூர்வேல் கொடுந்தொழிலன்" என்கிறாள் என்று புரியவில்லையே ?

    ReplyDelete
  3. கூர்வேல். ... கண்ணனின் கண்கள்
    கொடுந்தொழிலன்... அந்த கண்களின் காந்த பார்வையால் கண்ணியரின் மனங்களை கொள்ளையடித்து இம்சைக்கும் கண்ணனாகிய நந்தகோபனின் மகன்..
    . ????

    ReplyDelete