Tuesday, February 6, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணன் சொல்ல, அது தவறு என்று மாரீசன் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறான். இதுவரை அதைப் பார்த்தோம்.

அதைக் கேட்ட இராவணன் என்ன செய்தான் ?

அறிவுரை கேட்டு, மனம் மாறினானா ?

இல்லை. அரக்க குணம். தான் கொண்டதே சரி என்ற மூர்க்க குணம். எத்தனை நீதி நூல்களைப் படித்தாலும், எத்தனை சொற் பொழிவுகள் கேட்டாலும், எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தாற் போல தன் போக்கிலே போகும் தமோ குணம்.

இராவணனும் அவ்வாறே செய்கிறான்.

அவன் மனதில் கோபமும் , சீதை மேல் கொண்ட காமமும் நிறைந்து கிடக்கிறது.

முதலில் கோபம்.

மாரீசன் மேல் கோபம் கொள்கிறான்.

"நான் யார். என் பெருமை என்ன. என் வலிமை என்ன. கங்கையை சடையில் வைத்த சிவன் வாழும் கையிலை மலையை என் கையால் எடுத்த என் தோள் வலிமையை ஒரு மனிதர்களின் வலிமைக்கு முன்னால் குறைவானது என்றா நினைத்தாய்" என்று கண்ணில் தீ எழ பார்க்கிறான்.

பாடல்

‘கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது
    ஆடு எழில் மணித் தோள்,
இங்கு ஒர் மனிதற்கு எளிய
    என்றனை ‘எனத் தன்
வெம் கண் எரியப் புருவம்
    மீது உற விடைத்தான்.


பொருள்


‘கங்கை  = கங்கையை

சடை = சடையில்

வைத்தவனொடும் = வைத்த சிவனோடும்

கயிலைவெற்பு = கயிலை மலையை

ஓர் = ஒரு

அங்கையின்  = உள்ளங்ககையில்

எடுத்த எனது = எடுத்த எனது

ஆடு எழில் மணித் தோள் = ஆர்ப்பரித்து ஆடுகின்ற என் மணித் தோள்களை

இங்கு ஒர் மனிதற்கு = இங்கு ஒரு மனிதர்க்கு

எளிய என்றனை = எளிமையாக வெல்லப் படக்கூடியவை என்று நினைத்து விட்டாய்

‘எனத் = என்று

தன் = தன்

வெம் கண் = சிவந்த கண்கள்

எரியப் = தீ எழ

புருவம் மீது உற = புருவம் மேலே செல்ல

விடைத்தான் = கோபம் கொண்டான்


கோபம் கண்ணை மறைக்கிறது.

கோபம் வரும்போது உண்மை கண்ணுக்குத் தெரிவதில்லை.

கண்ணனை , இடையன் இடையன் என்று சொல்லிக் கெட்டான் துரியோதனன் .

முருகனை சிறு பிள்ளை , சிறு பிள்ளை என்று சொல்லிக் கெட்டான்  சூர பத்மன்.

இராமனை மனிதன் , மனிதன் என்று சொல்லிக் கெட்டான் இராவணன்.

ஆணவமும், கோபமும் உண்மையை மறைக்கும்.


உண்மையின்  தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் , முதலில் கோபத்தை விட வேண்டும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர்.

ஒரு பக்கம் ஆணவம் - கையிலை மலையை மட்டும் அவன் தூக்கவில்லையாம். அந்த மலையோடு, சிவனையும் சேர்த்து தூக்கினேன் என்கிறான்.

"கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு"

கங்கை, தலையில் கொண்ட சிவன், அவன் இருக்கும் கைலை மலை எல்லாவற்றையும் சேர்த்து  தூக்கினேன் என்கிறான்.

என்னைப் பார்த்தா மனிதர்களிடம் தோற்றுப் போவேன் என்று சொல்கிறாய் என்று சினப்படுகிறான்.

அந்த ஆணவமும், கோபமும் இல்லாமல் இருந்திருந்தால் அழிவு வந்திருக்காது.

இராவணனுக்கே அந்தக் கதி என்றால்......


இந்த பிளாக்கை படிப்பது எதற்கு ? ஏதேனும் நல்லது இருக்குமா என்ற ஆர்வம் தானே ?

எத்தனை நல்லது , எவ்வளவு வாசித்தாலும், கேட்டாலும் ஆணவமும், கோபமும், காமும் இருந்தால் அந்த வாசிப்பும், கேள்வியும் ஒரு பலனும் தராது.

நல்ல பாலை கழுவாத பாத்திரத்தில் இட்டு வைத்தால் பாலும் கெட்டு போகும் அல்லவா ?

பாத்திரத்தை சுத்தப் படுத்தி வையுங்கள். அப்புறம் அதில் பாலை இட்டு நிரப்பலாம்.

என்ன சரி தானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_6.html






No comments:

Post a Comment