Thursday, February 8, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?


நமக்கு துன்பம் வரும் போது, யாரை எல்லாமோ நொந்து கொள்கிறோம்.

அரசாங்கம் சரி இல்லை, மருத்துவர் சரி இல்லை, அலுவலக நிர்வாக முறை சரி இல்லை, மக்கள் யாரும் சரி இல்லை, ஒருத்தருக்கும் பொறுப்பு என்பதே இல்லை என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம்.

ஒன்றும் கிடைக்காவிட்டால் ஆண்டவனை நொந்து கொள்கிறோம். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு கடவுளா என்று இறைவன் மேல் கோபம் கொள்கிறோம்.

நம் தவறு என்ன என்று யோசிப்பதே இல்லை.

நமது எல்லா துன்பங்களுக்கும் காரணம், எங்கோ எப்போதோ நாம் செய்த தவறு என்று உணரும் அறிவு வேண்டும்.

நம் சோம்பேறித்தனம், நம் அறிவீனம், நம் அறம் பிறழ்ந்த செயல்கள், நம் பொறாமை, கோபம், காமம் என்று எத்தனையோ குறைகள் , தவறுகள் நம்மிடம் இருக்கும். அதில் இருந்துதான் நமது ஒவ்வொரு பிரச்சனையும் பிறக்கின்றன.

மாரீசன் சொல்கிறான்

"உனக்கு சொந்த அறிவும் இல்லை. சொற் புத்தியும் இல்லை. இராமன் போருக்கு செல்ல மாலை எடுத்து அணியுமுன் அவன் எதிரிகள் இறந்து போவார்கள். இந்த சீதையை மானிடப் பெண் என்றா நினைக்கிறாய். அவள் அரக்கர்கள் செய்த பாவத்தின் வடிவம் "

பாடல்


'யாதும் அறியாய்; உரை கொளாய்; 
     இகல் இராமன்  
கோதை புனையாமுன், உயிர் 
     கொள்ளைபடும் அன்றே; 
பேதை மதியால், "இஃது ஓர் பெண் 
     உருவம்" என்றாய்; 
சீதை உருவோ? நிருதர் தீவினை 
     அது அன்றோ?

பொருள்


'யாதும் அறியாய் = நீ ஒன்றையும் அறிய மாட்டாய்

உரை கொளாய் = நல்லது சொன்னாலும் கேட்க மாட்டாய்

இகல் இராமன் = பகை கொண்ட இராமன்

கோதை = மாலை

புனையாமுன் = புனைவதற்கு முன் (போருக்கு போவதற்கு முன் மாலை அணிவது வழக்கம்)

உயிர் கொள்ளைபடும் அன்றே; = பகைவர்கள் உயிர் போய் விடும்

பேதை மதியால், = உன் அறிவீனத்தால்

 "இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்;  = சீதையை ஒரு பெண் உருவம் என்று சொல்கிறாய்

சீதை உருவோ? = சீதை ஒரு உருவமா ?

நிருதர் = அரக்கர்கள்

 தீவினை = செய்த தீவினை

அது அன்றோ? = அது அல்லவா ?

சிலர் செய்த பாவம், சாலை ஒர புளிய மரமாய் நிற்கும். காரில் வேகமாக சென்று அதில்   முட்டி சாவார்கள். அது புளிய மரம் இல்லை. அவன் செய்த வினை.

சிலருக்கு அலுவலக அதிகாரியாக, சிலருக்கு கொடுமைக்கார மாமியாராக,  சிலருக்கு ஆலை எரி போன்ற அயலானாக, சிலருக்கு படிக்காத பிள்ளையையாக , அடங்காத மனைவியாக, பொறுப்பற்ற கணவனாக எப்படி எப்படியோ வந்து நிற்கும்.

செய்த வினை.

இராவணனும் அரக்கர்களும் செய்த வினை, சீதை வடிவில் வந்து நின்றது.

துன்பம் வரும் போது மற்றவர்களை நோகாதீர்கள். செய்த வினை என்று நினையுங்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த சோதனை, துக்கம் என்று தோன்றும். நாம் யார் குடியை கெடுத்தோம், யாருக்கு மனசார தீங்கு செய்தோம்...என்ற எண்ணம் தோன்றும்.

பட்டினத்தார் சொல்கிறார்.

இந்த பிறவியில் செய்த தீங்கு என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை முற்பிறவியில் செய்த தீவினை தான் இங்கே வந்து சேர்ந்ததா என்று நினைக்கிறார்.

என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே 
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு 
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே

நல்லதை நினையுங்கள். நல்லதை செய்யுங்கள்.

நல்லதே நடக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_8.html


2 comments:

  1. நமக்கு நிகழும் எல்லா நல்லதும் தீயதும் நம் செயலாலேயே வருகின்றன என்று ஒப்புக்கொள்வைத்து கடினம். ஆனால், நாம் எப்படி நம்மையே கெடுத்துக் கொள்கிறோம் என்பது எண்ணத்தக்கது.

    ReplyDelete
  2. கர்ம வினையை, ,இப்பிறவிலையோ அல்லது முற்பிறவிலையோ செய்தது, அனுபவித்தே ஆகவேண்டும். புளிய மர உதாரணம் அழகாக விளக்கியது.எந்த ரூபத்திலும் பலன்கள் வரலாம். நிறைய படித்தும் கேட்டும் கூட அறிந்துகொள்ளும் பக்குவம் எளிதில் வருவதில்லை.எல்லாம் அறிந்த ராவணனுக்கே அப்படி என்றால், நாம் எம்மட்டும்.

    ReplyDelete