Friday, February 9, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை 


உறவினர்கள் என்றால் ஏதோ கல்யாணம் , வீடு பால் காய்ச்சுவது, போன்ற விழாக்களுக்கு போவது, பரிசு கொடுப்பது, உண்பது, புகை படம் எடுத்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது.

இப்போது கொஞ்சம் மேலே போய் whatsapp , facebook என்று தொடர்பு கொள்கிறார்கள்.

உறவு, நட்பு என்பதெல்லாம் வேறு நிலையில் வைத்து பார்க்கப் பட வேண்டியவை.

இராவணன் தவறு செய்ய நினைக்கிறான் என்று அறிந்த மாரீசன், அவனுக்கு நல்ல அறிவுரைகள் கூறுகிறான். நமக்கு என்ன என்று இருந்து விடவில்லை.

அது ஒரு செய்தி.

இன்னோர் செய்தி என்ன என்றால், ஒருவன் தவறு செய்தால், அது அவனோடு முடியும் கதை அல்ல. அவன் குடும்பத்தையும், உறவினர்களையும் பாதிக்கும்.

இப்போது செய்திகளில் பார்க்கிரோம். ஒரு பெரிய நிலையில் உள்ள ஒருவர், தவறு செய்து விடுகிறார். அவரை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அவரின் மனைவி, பிள்ளைகள் எவ்வளவு துன்பப் படுவார்கள். அக்கம் பக்கம் பேச முடியுமா ? தலை காட்ட முடியுமா ? அவரின் பிள்ளைகள் பள்ளிக் கூடம் போனால், அவர்களின் நண்பர்கள் பரிகாசம் செய்ய மாட்டார்களா ?

"அவன் பிள்ளை தான நீ, அப்படித்தான் செய்வ " என்று செய்யாத தவறுக்கும் பழி ஏற்க வேண்டி இருக்கும்.

மாரீசன் சொல்கிறான்

"இராவணா , நீ மட்டும் அல்ல , உன் உறவினர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள். நீ சொல்வதைக் கேட்டு என் மனம் பட படக்கிறது . விஷத்தை ஒருவர் குடிக்கும் போது அருகில் நின்று, நல்லது தான் குடியுங்கள் என்று யாராவது சொல்வார்களா "

என்று சொல்கிறான்.

பாடல்

"உஞ்சு பிழையாய் உறவினோடும்" 
     என உன்னா, 
நெஞ்சு பறைபோதும்; அது 
     நீ நினையகில்லாய்; 
அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து 
     அருகு நின்றார், 
நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" 
     எனலும் நன்றோ?

பொருள்

"உஞ்சு பிழையாய் = தப்பிப் பிழைக்க மாட்டாய். உய்தல் , உய்து என்பது உஞ்சு என்று ஆனது.

உறவினோடும் = நீ மட்டும் அல்ல, உன் உறவினர்களும்

என உன்னா = என்று நினைக்க மாட்டாய்

நெஞ்சு பறைபோதும் = என் மனம் பறை அடிப்பது போல அடித்துக் கொள்கிறது

அது நீ நினையகில்லாய் = அதைப் பற்றி நீ நினைக்க மாட்டேன் என்கிறாய்

அஞ்சும் எனது ஆர் உயிர் = என் உயிர் அஞ்சுகிறது

அறிந்து = அறிந்து கொண்ட பின்

அருகு நின்றார் =  அருகில் நிற்பவர்கள்

நஞ்சு நுகர்வாரை = நஞ்சை அருந்துபவர்களை

 "இது நன்று" = இது நல்லது என்று

  எனலும் நன்றோ? = என்று நினைப்பதும் சரி தானா ?

பிறர் பொருளை நஞ்சாக நினைக்க வேண்டும்.

ஊரை கொள்ளை அடிப்பவன், திருடுபவன், எல்லோரும் மற்றவர்கள் பொருளை அமுதாக அல்லவா  நினைக்கிறார்கள்.

அது நஞ்சு என்றால் தொடுவார்களா ?

தொட்டவன் இராவணன்.

இராமாயணம் கதை அல்ல. வாழ்க்கையை சொல்லித்தரும் அறம்.

 நான் அங்கங்கே சில பாடல்களை விட்டு விட்டுச் செல்கிறேன்.

நேரம் கிடைப்பின் அவற்றை எல்லாம் தேடிப் பிடித்து படியுங்கள்.

1 comment:

  1. "நகுதற் பொருட்டல்ல நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்று குறள் நினைவுக்கு வருகிறது. ஒருவர் தவறு செய்யும்போது சொல்லித் திருத்துவது சுலபமல்ல. ஆனால் நமக்கு நெருங்கினார் நம்மைத் திருத்துவர் என்பதை நாமும் நினைவில் வைக்க வேண்டும்.

    ReplyDelete