Wednesday, March 28, 2018

திருக்குறள் - அற்றதும் பெற்றதும்

திருக்குறள் - அற்றதும் பெற்றதும் 


செல்வம் வந்த போது அதை நன்றாக பாதுகாக்கத் தெரியாதவர்கள் அதை இழந்த போது எதற்கு வருந்த வேண்டும் ?

பாடல்

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

பொருள்

அற்றேம்என்று  = இழந்தோம் என்று

அல்லற் படுபவோ = துன்பப் படுபவர்கள்

பெற்றேம்என்று  = அந்த செல்வத்தைப் பெற்ற போது

ஓம்புதல் = பாதுகாத்தல்

தேற்றா தவர் = செய்யாதவர்

.எல்லா உரைகளிலும் இவ்வளவுதான் இருக்கிறது. இதற்கு வள்ளுவர் மெனக்கெட்டு ஒரு குறள் எழுதுவாரா ?

ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அற்றேம் , பெற்றேம்  என்று சொல்லும் போது எதை என்று வள்ளுவர் சொல்லவில்லை.

செல்வத்தை என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள்.

நம்மிடம் ஆரோக்கியம் இருக்கும் போது அதைப் பற்றி நாம் கவலைப் படுவது  கிடையாது.  அதை இழந்து நோய் வாய்ப் படும் போது அப்படி செய்திருக்கலாமே, இப்படி செய்திருக்கலாமே என்று நொந்து என்ன பயன்.
மருத்துவர் எவ்வளவோ சொன்னார். கேக்காம கண்டதையும் உண்பது. அப்புறம், இரத்தத்தில் சர்க்கரை கூடிவிட்டது என்று அல்லல் படுவது. உடம்பு பருத்து விட்டதே என்று  வருந்துவது. நடந்தால் மூச்சு வாங்கும் . படி ஏறினால் மூச்சு வாங்கும். படுக்கப் போகும் போது பல் விளக்குவது கிடையாது. அப்புறம் பல் சொத்தை வந்து, பல்லை பிடுங்கச் சொன்னால் , வலிக்கிறதே என்று நோவது ஏன்.


நம்மிடம் நேரம் இருக்கும் போது அதை வெட்டித்தனமாக செலவழிப்பது. டிவி, Whatsapp , நண்பர்களோடு அரட்டை, ஊர் சுற்றுவது என்று நேரத்தை வீணடிப்பது. அப்புறம், வருந்துவது.  அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே என்று.

உறவும், நட்பும் நம்மிடம் இருக்கும் போது அவற்றை உதாசீனப் படுத்துவது. ஒவ்வொன்றாகப் போன பின், எனக்கென்று யாரும் இல்லையே என்று வருந்துவது.


நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை சரியான  படி  உபயோகப் படுத்துகிறோமா என்று அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சரியான படி உபயோகப் படுத்த வேண்டும்.

நல்லபடி உபயோகப் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, ஐயோ, சரியான படி உபயோகப் படுத்தவில்லையே என்று பின்னால்  புலம்பாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.

இருப்பதை நல்லபடி பயன்படுத்துங்கள்.  பின்னால் வரும் புலம்பலை அது தவிர்க்க உதவும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_28.html




2 comments:

  1. செல்வம் என்ற சொல்லுக்கு, ஒரு அகலமான பொருள் தந்தது நன்றி. நன்றி.

    ReplyDelete
  2. இந்து எந்த அத்தியாயத்தில் வருகிறது?

    வள்ளுவர் என்ன பொருளில் எழுதினால் என்ன, நீ எழுதிய பொருளே மேன்மை. நன்றி.

    ReplyDelete