Thursday, March 29, 2018

திருக்குறள் - உடம்பும் துன்பமும்

திருக்குறள் - உடம்பும் துன்பமும் 


எது இயற்கை ? இன்பமாக இருப்பதா ? துன்பப் படுவதா ? நம் உடலுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு விட்டால் உடனே நாம் பதறுகிறோம். என்னவோ உடலுக்கு துன்பமே வரக் கூடாது, இப்படி வந்து விட்டதே என்று.

அது நம் மன நிலை. அதை மாற்றி யோசிக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

இந்த உடம்பானது துன்பத்தின் இலக்கு.

துன்பம் என்பது இந்த உடம்பை குறி வைத்தே வரும். அது தான் இயற்கை. துன்பம் வரமால் இருந்தால் அதுதான் ஆச்சரியம்.

இயற்கையான ஒன்றுக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் பெரியவர்கள்.

காலையில் சூரியன் உதிக்கிறது. அதற்காக கவலைப் பட முடியுமா? மாலையில் மறைந்து விடும். ஐயோ, சூரியன் போய் விட்டதே என்று வருந்த முடியுமா ? அது இயற்கை. அது போல, உடம்புக்கு துன்பம் வருவது இயற்கை. அதையே பெரிதாக நினைத்துக் கொண்டு வேலை செய்யாமல் இருந்துவிடக் கூடாது.

சான்றோர், உடம்புக்கு வந்த துன்பத்தை இயற்கையான ஒன்று என்று நினைத்து அதனால் சோர்ந்து விட மாட்டார்கள்.


பாடல்

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

பொருள்

இலக்கம் = இலக்கு, குறி

உடம்புஇடும்பைக்கு = உடம்பானது துன்பத்துக்கு

என்று = என்று

கலக்கத்தைக் = கலக்கத்தை, சோர்வை,

கையாறாக் = கையில்

கொள்ளாதாம் = கொள்ள மாட்டார்கள்

மேல் = மேலோர், சான்றோர், பெரியோர்

உடம்புன்னா அப்படித்தான் இருக்கும். துன்பம் வரத்தான் செய்யும். அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.  வைத்தியம் பார்க்கலாம். மருந்து மாத்திரை சாப்பிடலாம். அது ஒரு பாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும். நாம் நம் வேலையை பார்ப்போம் என்று கிளம்பி விட வேண்டும்.


இன்னும் ஒரு படி மேலே போய் சிந்திப்போம்.

உடம்பு என்றால் கை கால் தலை மட்டும் அல்ல. உடம்பினுள் இருக்கும் மனமும் தான்.

உடல் துன்பப் படுவதைப் போல மனமும் சில சமயம் துன்பப் படும். துக்கம்  வரும். வருத்தம் வரும். மன அழுத்தம், மன சோர்வு, பட படப்பு என்று வரும்.

இவை எல்லாம் இயற்கையானவை என்று எண்ணி மேலே செல்ல வேண்டுமே அல்லாது சோர்ந்து அங்கேயே உட்கார்ந்து விடக் கூடாது.

ஆனால், இது சரி வரும் என்று தோன்றவில்லையே. உலகத்தில் எல்லோரும் உடலுக்கு ஒரு துன்பம் என்றால் அது இயற்கையானது என்று சும்மா இருப்பது இல்லையே. வள்ளுவர் சொல்லுவது சரிதானா என்று தோன்றும் நமக்கு.

வள்ளுவருக்கு அது தெரிந்திருக்கிறது.

எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

"கொள்ளாதாம் மேல்"

என்கிறார்.

மேலோர் அப்படித்தான் கொள்வார்கள். மற்றவர்கள் உடல் உபாதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்வார்கள்.

"கையறா " என்றால் செயலற்று என்று அர்த்தம். உடலுக்கு ஒரு துன்பம் வந்தால் அப்படியே செயலற்று இருந்து விடமாட்டார்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார் ?


துன்பம் வந்த போது , முடங்கிக் கிடந்தால், அந்தத் துன்பம் இன்னும் பெரிதாகுமே அன்றி குறையாது. நாள் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு இருக்கச் சொல்லும். வந்த துன்பத்துக்கு கண் காது மூக்கு வைத்து அதை பெரிதாக நினைக்கச் சொல்லும்.

நமக்கு யாரும் உதவி செய்யவில்லையே என்று எல்லோரையும் திட்டத் தோன்றும். ஒரு தன்னிரக்கம் வரும்.

எனவே, இவற்றையெல்லாம் மாற்றி , வந்த துன்பத்தைப் போக்க, அது இயற்கை தான் என்று எண்ணிக் கொண்டு எப்போதும் போல செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_29.html



No comments:

Post a Comment