Tuesday, April 3, 2018

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க 


வேலை கிடைத்து விட்டது, உடனே நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டி.

பிறந்த நாள் என்றால்  கொண்டாட்டம்.

பதவி உயர்வு என்றால்  பெரிய விருந்து.

என்று இன்பம் வந்தால் தலை கால் புரியாமல் கொண்டாடுவது. அதில் தப்பில்லை. நல்லது நடந்தால் மகிழ்ச்சி தானே.

அதே சமயம், retire ஆகி விட்டால், சோகம். வேலை போய் விட்டால் துக்கம்.

பதவி வந்த போது, ஏதோ தான் தான் பெரிதாக சாதித்து விட்டதாக இறுமாந்து இருந்தால், பதவி போகும் போது துக்கம் நெஞ்சை அடைக்கத்தான் செய்யும்.

சரி, அதற்காக வீட்டில் ஒரு நல்லது நடந்தால் அதை கொண்டாட வேண்டாமா என்றால், கொண்டாடுங்கள். அதில் நிதானம் வேண்டும்.

இன்பமும் துன்பமும் வாழ்வில் இயற்கையாக நிகழ்பவை. இன்பம் வந்த போது தையா தக்கா என்று குதித்தால் , துக்கம் தாள முடியாததாக இருக்கும்.

இன்று நல்ல விஷயம் நடந்திருக்கிறது.  நல்லது. சந்தோஷம் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.

அப்படி இருந்தால், துன்பம் வரும் போது, அது நமக்கு துன்பமாகத் தெரியாது.

பாடல்


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்


பொருள்

இன்பத்துள் = இன்பம் வந்த போது

இன்பம் விழையாதான் = இன்பம் அடையாதவன்

துன்பத்துள் = துன்பம் வந்த போது

துன்பம் உறுதல் இலன் = துன்பம் அடைய மாட்டான்

 விழைதல் என்றால் மிக விரும்புதல். அதீதமாக கொண்டாடுவது. பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது போல.

பதவி வரும். போகும்.

வேலை வரும். போகும்.

மதிப்பு வரும். போகும்.

இன்பத்துள் ரொம்பவும் தலை கால் புரியாமல் திளைத்து ஆடாமல் இருந்தால், துன்பம் வந்தாலும் அது பெரிதாகத் தெரியாது.

நம்மிடம் என்ன சிக்கல் என்றால், இன்பம் மட்டுமே வேண்டும். அது வந்த போதெல்லாம் கொண்டாட வேண்டும் . துன்பம் வரவே கூடாது என்று நினைக்கிறோம்.

அது யதார்த்தம் அல்ல. கற்பனை வாழ்க்கை.

இன்பத்தில் ரொம்பவும் ஆட்டம் போடாமல் இருந்தால், துன்பத்தில் ரொம்ப வருந்த  வேண்டி இருக்காது.

நிதானமாக இருக்கப் பழக வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post.html


2 comments:

  1. எதையும் மிதமாகவும் பக்குவமாகவும் அணுகினால் இன்பத்தையும் துக்கத்தையும் நிதானமாக மேற்கொள்ளமுடியும். அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. இன்பத்தையும் துன்பத்தையும் இரண்டையுமே "அடக்கி வாசி" என்று கொள்வதுதான் நன்று . நன்றி.

    ReplyDelete