Sunday, April 15, 2018

திருவாசகம் - போற்றி

திருவாசகம் - போற்றி 


பாடல்

ஈசனடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பொருள்

ஈசனடிபோற்றி = ஈசன் அடி போற்றி. ஈசனின் திருவடிகளுக்கு வாழ்த்து. ஈசன் என்ற சொல்லுக்கு தலைவன், குரு, இறைவன், அரசன், மூத்தவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஈசன் மனைவி ஈஸ்வரி.

எந்தை அடி போற்றி = என் தந்தையின் அடி போற்றி.

தேசன் அடிபோற்றி = தேசு என்றால் ஒளி. தேசன், ஒளி நிறைந்தவன். பொன்னைப் போல ஒளி நிறைந்தவன் என்பார் சுந்தரர்.

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

 செந்தழல் புரை திரு மேனியும் காட்டி  என்பார் மணிவாசகர்.


முந்திய முதல் நாடு இறுதியும் ஆனாய் ,
மூவரும் அறிகிலர் , யாவர் மற்றறிவார் ,
பண்டனை விரலியும் நீயும் நின் அடியார் ,
பழம் குடில் தொருன் எழுந்தருளிய பரனே ,
செந்தழல் புரை திரு மேனியும் காட்டி ,
அந்தணன் ஆவதும் கட்டி வந்து ஆண்டி ,
ஆரமுதே பள்ளி  எழுந்தருளாயே


சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி = நேயம் என்றால் அன்பு, கருணை, இரக்கம் என்று அர்த்தம். மலம் என்றால் குற்றம், தவறு. நி -மலன் என்றால் குற்றம் இல்லாதவன். கருணை நிறைந்த குற்றமற்றவன்.


மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி =  மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னன் அடி போற்றி. அது என்ன மாயம் ? பிறவி என்பது உண்மை தானே. பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். இதில் இன்ன மாயம் இருக்கிறது?  நாம் தான் பிறக்கிறோம், இறக்கிறோம் , மீண்டும் பிறக்கிறோம் என்பது தெரியாமல் அது நிகழ்கிறது. எனவே மாயப் பிறப்பு. இந்த பிறவி இன்பமானது போலத் தெரியும். ஆனால், துன்பத்தின் இருப்பிடம் இது. அது தெரியாமல் இருப்பதுதான் மாயம்.


சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி = சிறந்த , திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறையும் (வாழும்) நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தீராத இன்பம் அருளும் மலை போற்றி

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_15.html




No comments:

Post a Comment