Saturday, April 28, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான் 



இலங்கையை விட்டு வீடணன் விலகி வந்து விட்டான்.

அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தான். அவர்களும் இராமனிடம் செல்வதுதான் முறை என்று சொன்னார்கள்.

"சரி, இரவில் செல்வது நன்றாக இருக்காது. விடிந்தபின் செல்வோம்" என்று கூறி, அவர்கள் எல்லோரும் ஒரு சோலையில் தங்கி இரவைக் கழித்தார்கள். இராமனும், மாலையில் கடற்கரை ஓரம் உலவி விட்டு இரவு வெகு நேரம் கழித்து பாசறை அடைகிறான்.

மறு நாள் பொழுது விடிகிறது.

இராமன் பாசறையில் மந்திரிகளோடு இருக்கிறான். அப்போது இராமனைக் காண வீடணன் வருகிறான்.


பாடல்

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான்-
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான்.


பொருள்

உறைவிடம் எய்தினான் = தங்கும் இடத்துக்குச் சென்றான் (இராமன்)

ஒருங்கு கேள்வியின் = ஒன்று பட்ட அறிவு சார்ந்த

துறை அறி = துறை என்றால் இடம், பகுதி, வழி என்று அர்த்தம். நூல்களின் வழி அறிந்த

துணைவரோடு = மந்திரிகளோடு

இருந்த சூழலில், = இருந்த சூழலில்

முறை படு தானையின் = முறையாக அங்கு இருந்த படையின்

மருங்கு முற்றினான்= அருகில் சென்றான்

அறை கழல் வீடணன் = சப்தம் எழுப்பும் கழல்களை அணிந்த வீடணன்

அயிர்ப்பு இல் சிந்தையான் = சந்தேகம் இல்லாத மனதை உடையவன்


முன்பே சொன்னேன். தீயவர்களுக்கு தீமையில் இருக்கும் உறுதி, நல்லவர்களுக்கு நல்லது செய்வதில் இருப்பதில்லை என்று.

வீடணன் வருகிறான். அவன் மனதில் எவ்வளவு  சந்தேகங்கள் இருக்கலாம்? ஒரு வேளை இராமன் ஏற்றுக் கொள்ளா விட்டால்? இராமன் தன்னை சந்தேகப் பட்டால் ? இராவணனும் இல்லை, இராமனும் இல்லை என்ற நிலை வந்து  விட்டால் என்ன செய்வது?

இராவணனை விட்டு விட்டு வந்து இருக்கக் கூடாதோ?

என்று இப்படி ஆயிரம் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், வீடணனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

"அயிர்ப்பு இல் சிந்தையான்"

என்கிறான் கம்பன்.  இராமன் மேல் அவ்வளவு நம்பிக்கை. தான் எடுத்த முடிவின் மேல் அவ்வளவு நம்பிக்கை.

எவ்வளவோ படிக்கிறோம். படித்துக் கொண்டே இருக்கிறோம். ஒன்றிலிருந்து மற்றொன்றாக  அது கிளைத்துக் கொண்டே போகிறது. எது சரி, எது தவறு, எதை பின் பற்றுவது, என்று குழம்பித் தவிக்கிறோம். இந்த குழப்பத்தில் இருந்து  விடுபடுவதற்குள் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

படிப்பில் இருந்து ஒரு தெளிவு வர வேண்டும். மேற்செல்லும் பாதை தெரிய வேண்டும். அந்த அறிவைக் கையில் கொண்டு கரை ஏற வேண்டும்.

இராமனிடம் இருந்த அமைச்சர்கள்

"ஒருங்கு கேள்வியின் துறை அறி துணைவரோடு"

துறை அறிந்தவர்கள். 

ஆறு ஓடிக் கொண்டே இருக்கிறது. அதில் இறங்கி, நம் உடலை சுத்தம் செய்து கொள்ள, அதில் இருந்து தண்ணீர் முகந்து கொள்ள, ஒரு சிறிய இடம் செய்து வைத்து இருப்பார்கள். அதில் படி இருக்கும், பிடித்துக் கொள்ள கம்பி இருக்கும். தண்ணீரின் வேகம் இருக்காது. 

அதற்கு படித்துறை என்று பெயர். 

நேரடியாக ஆற்றில் குதித்தால் அடித்துக் கொண்டு போய் விடும். படித்துறை சுகமான  இடம். ஆற்றின் சுகம் அனைத்தும் கிடைக்கும். ஆபத்து இல்லாமல். 

இறைவனை நோக்கி செல்லுகின்ற அந்த உண்மைத் தேடலில் அங்கங்கு உள்ள  படித்துறைகள் தான் வெவ்வேறு சமயங்கள். 

"சைவத் துறை விளங்க " என்பார் சேக்கிழார். 


வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.


திருஞான  சம்பந்தர் அழுததற்கு ஒரு பாடல்!


சைவம் ஒரு துறை.  வைணவம் ஒரு துறை. நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் இறங்கி நீர் மொண்டு கொள்ளலாம். நீராடலாம். ஆற்றின் நீர் என்னவோ ஒன்று தான்.  துறை முக்கியம் அல்ல. ஆற்றின் நீர் முக்கியம். 

இராமனிடம் இருந்த அறிஞர்கள் "துறை அறிந்தவர்கள்". 

துறை அறியாவிட்டால், ஆற்றின் நீர் அடித்துக் கொண்டு போய் விடும். 

புத்தகங்களை படிப்பதன் மூலம்,  துறை அறிந்து, அதில் இறங்கி, உண்மையை தரிசித்துக் கொள்ள வேண்டும்.  ஆயுள் பூராவும் படித்துக் கொண்டே இருப்பேன் என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை. 

இரண்டு பாடங்கள் இந்தப் பாடலில். 

2 comments:

  1. துறை என்பதன் பொருள் மிக இனிமை. நன்றி.

    ReplyDelete
  2. ஆற்றின் படித்துறையையும் அதனால் கிடைக்கும் பயன்களை வாழ்வில் சமயங்கள் என்கிற படித்துறைகளோடு ஒப்பிட்டு அழகாக விளக்கினீர்கள்.

    ReplyDelete