Saturday, July 28, 2018

அபிராமி அந்தாதி - திரிபவராம்

அபிராமி அந்தாதி - திரிபவராம் 



எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன? அர்த்தம் என்ன? இவ்வளவு இன்பம், துன்பம், சுகம், துக்கம், சண்டை, சச்சரவு, நேசம், பாசம், அடி தடி, கருணை, காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், என்று இவை எல்லாம் எதற்காக?

நமக்கு முன்னால் எவ்வளவோ பேர் பிறந்து, வளர்ந்து , இறந்தும் போனார்கள். அவர்கள் செய்ததுதான் என்ன? சாதித்தது என்ன? நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? அப்படியே சாதித்தாலும் அதனால் என்ன ஆகி விடப் போகிறது?

நாம் ஒரு புதிதாக ஒரு இயந்திரத்தைப் பார்க்கிறோம்.  நமக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தால் ஏதோ ஒரு இயந்திரம் போல இருக்கிறது. ஆனால், அது என்ன செய்யும், எப்படி செய்யும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.

எப்படி கண்டு பிடிப்பது ?

அந்த இயந்திரத்தை  செய்தவனை பார்த்து கேட்கலாம் "இது என்ன மாதிரி இயந்திரம், இது எப்படி வேலை செய்யும்? எதற்காக இதை செய்தாய்?" என்று கேட்கலாம்.

ஒருவேளை, அவன் "இது எதுக்காக செய்தேன் என்று எனக்குத் தெரியாது. சும்மா பொழுது போகல. என்னத்தையோ சேர்த்து வைத்தேன். அவ்வளவுதான். ஒரு பெரிய நோக்கம் எல்லாம் இல்லை " என்று சொன்னால்  நாம் என்ன செய்வோம்? சரி தான், இந்த இயந்திரம் ஏதோ வேலை செய்கிறது. அதற்கென்று ஒரு நோக்கமும் கிடையாது என்று நினைத்துக் கொள்வோம் அல்லவா ?

அது போல,

நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று நம்மை படைத்தவனை போய் அபிராமி பட்டர் கேட்டார் ...அதற்கு அவன் சொன்னான் "பெரிய அர்த்தம் எல்லாம் இல்லை. சும்மா விளையாட்டுக்கு செய்தேன் அவ்வளவுதான் " என்று.

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மட்டும்தான். வேறு பெரிய நோக்கம் எல்லாம் கிடையாது. போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பாடல்


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் 
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு 
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென் 
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு  நகையுடைத்தே.


பொருள்

ஏத்தும் அடியவர் = போற்றும் அடியவர்கள்

ஈரேழ் உலகினையும் = பதினான்கு உலகையும்

படைத்தும் = படைத்து

காத்தும் = காத்து

அழித்தும் = அழித்து

திரிபவராம் = திரிபவராம்

கமழ் பூங்கடம்பு = மணம் வீசும் கடம்ப பூவின் மாலையை

சாத்தும் = அணிந்து இருக்கும்

குழல் = குழலை (தலை முடி) உடைய

அணங்கே = பெண்னே (அபிராமியே)

மணம் நாறும் = மணம் வீசும்

நின் = உன்

தாளிணைக்கு = தாள் + இணைக்கு = இணையான இரண்டு திருவடிகளுக்கு

கென் = என்

நாத்தங்கு = நா+ தங்கு = நாவில் தங்கும்

புன்மொழி = மோசமான வார்த்தைகள்

ஏறிய வாறு = சென்று அடைந்தது எவ்வாறு ?

நகையுடைத்தே = ஒரே சிரிப்புக்கு இடமாக இருக்கிறது. நகைக்கும் படி இருக்கிறது.


ஒருவன் வேலை வெட்டி இல்லாமல், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால், "பாரு வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுத்திக்கிட்டு திரிகிறான்" என்று சொல்லுவார்கள்.

திரிதல் என்றால் ஒரு நோக்கமும் இல்லாமல் காரியம் செய்தல்.


இறைவன், இந்த உலகை படைத்தும், காத்தும், அழித்தும் செய்யும் செய்கைக்கு ஒரு நோக்கமும் இல்லை.

"படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்"

அவனுக்கே ஒரு நோக்கமும் இல்லை என்றால், உங்களுக்கு எங்கிருந்து ஒரு நோக்கம் வருகிறது?  விட்டுத் தள்ளுங்கள்.

சரி, இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இந்த உலகை படைத்து, காத்து, அழித்து செய்யும் செயலுக்கு ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லி விட முடியுமா ?


நல்ல கேள்வி. முடியாதுதான்.

வேறு எங்காவது இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்ப்போம்.

கம்ப இராமாயணம். மிதிலை நகர். அங்குள்ள பெண்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருப்பது மட்டும் அல்ல, அழகாகவும் நடப்பார்களாம். பெண்களின் நடை அழகுக்கு அன்னப் பறவையை  உதாரணம் சொல்லுவார்கள். ஆனால், மிதிலை நகர் பெண்கள் அன்னப் பறவையை விட அழகாக நடக்கிறார்கள். இதனால், அந்த ஊர் அன்னப் பறவைகளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியாவது  தங்கள் நடை அழகை சரி செய்ய வேண்டும் என்று அவை எவ்வளவோ முயன்றன. முடியவில்லை. வெறுத்துப் போய் , கால் போன போக்கில், ஒரு நோக்கம் இல்லாமல் "திரிய" ஆரம்பித்து விட்டன.


சேலுண்ட ஒண்க ணாரின் திரிகின்ற செங்கால் அன்னம் 
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை 
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த 
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை

அன்னங்கள் திரிந்தன. ஒரு நோக்கமும் இல்லாமல்.

அது மட்டும் அல்ல, கம்பர் சொல்கிறார்,  இறைவன் இந்த உலகை படைப்பதும் , காப்பதும், அழிப்பதும் ஒரு விளையாட்டு என்கிறார்.

விளையாட்டு என்றால் என்ன ? ஒரு தீவிர நோக்கம் இல்லாதது. சும்மா ஒரு பக்கம் பந்தை போடுவார்கள், இன்னொரு பக்கம் அடிப்பார்கள். அதில் என்ன பெரிய   காரியம் நடக்கிறது. ஒன்றும் இல்லை.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

இறைவன் செய்யும் இந்த வேலை ஒரு விளையாட்டு. பெரிய காரியம் ஒன்றும் கிடையாது.

நீங்களும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கு இவ்வளவு தீவிரம் (seriousness ), tension , anxiety , மன அழுத்தம், போட்டி, பொறாமை, ஏமாற்றம் எல்லாம் ?

நெகிழ விடுங்கள். விளையாட்டாக எடுங்கள். எல்லாம் இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_28.html





1 comment:

  1. திரிபவர் என்ற சொல்லுக்கு அழகான விளக்கம்.ஆங்கிலத்தில் சொல்லப்போனால் to loaf about,இந்த வார்த்தைக்கு கம்ப ராமாயணத்திலிருந்தும் மேற்கோள்
    காட்டிவிட்டீர்கள்.
    ஆனால் எல்லாம் வல்ல இறைவனால் காரண காரியம் இல்லாமல் மிகப் பெரிய சமாச்சாரமான ஆக்குவது காப்பது நீக்குவது போன்றவற்றை எளிதாக திரிபவர் போல் செய்வதை உதாரணமாக கொண்டு எளியவர்களான நாமும் ஒரு நோக்கமுமில்லாமல் திரிந்து கொண்டிருக்க முடியுமா?இந்த 'திரிபவர்' போன்ற சொற்கள் ஒரு பக்தி பரவசத்தில் கவிகளால் கையாளப்படுகிறது.A poetic license or நிந்தாஸ்துதி எனக்கொள்ளலாம்.

    ReplyDelete