Friday, November 13, 2020

கம்ப இராமாயணம் - பொன் மான்

 கம்ப இராமாயணம் - பொன் மான் 

சீதை பொன் மானைக் கண்டதும், அதைப் பற்றித் தருமாறு இராமனை வேண்டியதும், இராமன் போனதும் அந்தக் கதை எல்லாம் நமக்குத் தெரியும். 


உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் என்ற அளவுக்கு ஆற்றல் கொண்ட சீதை, பொன் மான் உண்மையானது அல்ல என்று அறிய மாட்டாளா? 

சரி, அவள் தான் பெண், ஏதோ ஆசைப் பட்டுவிட்டாள், இராமனுக்குத் தெரியாதா? பொன் மான் என்று ஒன்று கிடையாது என்று அவனுக்குத் தெரியாதா? வசிட்டரிடமும், விச்வாமித்ரரிடமும் படித்த கல்வி அதைச் சொல்லவில்லையா? இலக்குவனுக்குத் தெரிந்தது இராமனுக்குத் தெரியாதா? 


பின் ஏன் அது நிகழ்ந்தது?


அப்படி போனால், இராவணன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு போவான், அது தேவையான ஒன்று என்று அவர்கள் நினைத்து இருந்தால், அவர்கள் மேல் பரிதாபப் பட ஒன்றும் இல்லை. வேண்டும் என்றே செய்த ஒன்று. 


சரியான விளக்கமாகப் படவில்லையே. எப்படி போனாலும் இடிக்கிறதே. 

அது ஒரு புறம் இருக்கட்டும். 


பொன் மான் உண்மை அல்ல என்று தெரிந்தும் அதை விரட்டியது அறிவீனமான செயல் என்றால், நாம் எத்தனை பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம்?

கடைசி காலத்தில் பிள்ளை பார்த்துக் கொள்வான் என்று ஒரு பொன் மான். 

வயதான காலதத்தில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள் என்று ஒரு பொன் மான். 

சுவர்க்கம், நரகம், பரமபதம், கைலாசம் என்று சில பொன் மான்கள். 

நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீயது செய்தால் தீயது நடக்கும், கர்ம வினை,  என்று சில பொன் மான்கள். 


அதெப்படி, அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியும்? நம் முன்னோர்கள் மூடர்களா என்று கேட்கலாம். அப்படித்தான் சீதை நினைத்தாள். அப்படித்தான் இராமன் நினைத்து அதன் பின் போனான். பட்ட துயரம் வராலாறு. 


இவை எல்லாம் உண்மையான மான்கள் என்று நினைப்பது அவரவர் உரிமை.  


வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்கலாம் என்று கணவனை அந்த வீடு என்ற பொன் மானை பிடித்துத் தரச் சொல்லி விரட்டும்  சீதைகள் எத்தனை. 


ஒவ்வொருவரும் சில பல பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மான்களின் பட்டியல் மிக நீண்டது. நமக்குத் தெரிவவதில்லை. 


நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என்று வழி வழியாக துரத்திக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மானை துரத்துவது நின்றால் தான் நிம்மதி, அமைதி பிறக்கும். 

எல்லா பொன் மானும், நிஜ மான் போலவே தெரிவதுதான் சிக்கல். 

பாடல் 

'ஆணிப் பொனின் ஆகியது;      ஆய் கதிரால்

சேணில் சுடர்கின்றது; திண்      செவி, கால்,

மாணிக்க மயத்து ஒரு      மான் உளதால்;

காணத் தகும்' என்றனள்,      கை தொழுவாள்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_13.html

(click the above link to continue reading)


'ஆணிப் பொனின் ஆகியது = ஆராய்ந்து எடுக்கப்பட்ட பொன்னால் ஆனது 

ஆய் கதிரால் = சூரிய ஒளியில் 

சேணில்  = தூரத்தில் இருந்து பார்க்கும் போது 

சுடர்கின்றது = ஒளி விடுகிறது 

 திண்  செவி, கால், = உறுதியான காது, மற்றும் கால்கள் 

மாணிக்க மயத்து  = மாணிக்கம் போல 

ஒரு  மான் உளதால்; = ஒரு மான் உள்ளது 

காணத் தகும்' என்றனள்,    = காணத் தகும் என்று 

கை தொழுவாள். = கை கூப்பி நின்றாள் 


பெண்ணின் ஜாலம். வேண்டும் என்று சொல்லவில்லை. "பாத்தா அப்படி நல்லா இருக்கு " என்று கூறி விட்டு கை கூப்பி நின்றாள். 


அதற்கு என்ன அர்த்தம் ? அதை எனக்கு பிடித்துத் தா என்பதுதான் அர்த்தம். 

அவ ஒண்ணும் அப்படிச் சொல்லவில்லை, இராமனாகத்தான் பிடிக்கப் போனான் என்று சொல்லும் முன் சற்று பொறுங்கள். முழுவதையும் படித்து விடுவோம். 


மாய மான்களை விரட்டிக் கொண்டு கையில் வலையோடு அலைந்து கொண்டு இருக்கிறோம்.  


ஒரு மானைப் பிடித்தால் புதிதாக நாலு மான்கள் வருகின்றன. 


இந்த மான் பிடி ஓட்டம் என்று நிற்கும்? 


2 comments:

  1. அப்படியானால், போன் மானைச் சுட்டிக்காட்டிய சீதை முட்டாள், அதை பிடிக்கப் போன இராமனும் முட்டாள்தானே?

    ReplyDelete