Sunday, November 22, 2020

திருக்குறள் - எண்ணும் எழுத்தும்

 திருக்குறள் - எண்ணும் எழுத்தும் 


பாடல் 


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு


பொருள் 


எண்ணென்ப = எண்கள் என்று சொல்லப்படுபனவும் 

ஏனை = மற்ற 

எழுத்தென்ப = எழுத்து என்று சொல்லப் படுவதும் 

இவ்விரண்டும் = இந்த இரண்டும் 

கண்என்ப = கண் போன்றது என்று சொல்லுவார்கள் 

வாழும் உயிர்க்கு = வாழும் உயிர்களுக்கு 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_22.html


click the above link to continue reading


எண்ணும் , எழுத்தும் இரண்டு கண் போன்றது. உயர்வானது, சிறப்பானது....என்று தானே நமக்கு பொருள் தெரிகிறது? அப்படித்தான் நமக்குச் சொல்லித் தந்து இருப்பார்கள். 

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா? யாருக்குத்தான் தெரியாது? 


அதற்கு பின் வருவோம்...

எதற்காக படிக்கிறோம்? பள்ளிக்கூடம், கல்லூரி அதன் பின் மேல் படிப்பு என்று படிக்கிறோமே எதற்காக? பெரும்பாலானோர் சொல்லுவது "நல்லா படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், நல்ல வாழ்கை வாழலாம்". அது ஓரளவு உண்மையும் கூட. 

ஆனால், படிப்பின் நோக்கமே வேறு. நாம் அதை வருமானத்துக்குப் பயன் படுத்துகிறோம் என்பது வேறு விடயம். படிப்பின் நோக்கம் அறத்தை அறிந்து கொள்வது. உண்மையை புரிந்து கொள்வது. 

பணம் எப்படியும் வரும். படித்துதான் வர வேண்டும் என்று இல்லை. எனவே, பணம் சம்பாதிக்க படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அறிவின் நோக்கம், அடிப்படை அறத்தை அறிந்து கொள்வது. 

வாழ்வில் அறம் இல்லாவிட்டால் எவ்வளவு செல்வம் இருந்தாலும், புகழ், செல்வாக்கு இருந்தாலும் மனதில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்காது. 


தவறான வழியில் பணம் வந்து விட்டால், நிம்மதியும், சந்தோஷமும் இருக்குமா? 


சரி, அதுக்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம்?


"கண் என்ப வாழும் உயிர்க்கு"...கண் என்ன செய்யும்? பார்க்கும். கண் என்பது தானே அறிந்து கொள்ளும் கருவி. காது அப்படியல்ல. யாராவது சொன்னால் தான் கேட்டுக் கொள்ள முடியும். தானே காது ஒன்றை கேட்டுக் கொள்ள முடியாது. 


அறம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்று கேட்டால், பதிலை வேறு யாரோ சொல்ல வேண்டும், நீங்கள் கேட்கத் தயார் என்று ஆகி விடுகிறது அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார், யாரிடமும் கேட்காதே. நீயே "பார்". உன்னைச் சுற்றி உள்ளவற்றைப் பார். நீ எதைப் பார்கிராயோ, அதில் இருந்து அறம் என்பது என்ன என்று அறிந்து கொள்...என்கிறார். 


இல்லையே, அப்படி ஒண்ணும் குறளில் இல்லையே? அறம் என்ற வார்த்தையே குறளில் இல்லையே. வள்ளுவர் அறத்தைப் பார்க்கச் சொன்னார் என்று எங்கு இருக்கிறது?


வருவோம்...


எல்லோருக்கும் கண் இருக்கிறது. ஆனால், பார்வை ஒன்றாக இருக்கிறதா? ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள். 


ஒரு பெண் ஒரு பையனை அடிக்கிறாள் அல்லது கண்டிக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். 


"என்ன இவ...சரியான இராட்சசியா இருப்பா போல இருக்கே...அந்தச் சின்னப் பிள்ளையை இப்படியா அடிப்பது/திட்டுவது" என்று சிலர் சொல்லலாம். 


"அடா, அந்த பெண்ணுக்குத் தான் அந்தப் பிள்ளையின் மேல் எவ்வளவு அக்கறை. நாளை பின்ன இப்படி தவறு செய்து ஊருக்குள்ள கெட்ட பேர் வாங்கிரக் கூடாதே என்று அடிப்பது கடினமாக இருந்தாலும், அதைச் செய்கிறாளே..." என்று சிலர் பாராட்டலாம். 


செயல் ஒன்றுதான். "பார்வை" வேறு படுகிறதுஅல்லவா ?


படித்தவனின் பார்வை ஊடுருவி உண்மை என்ன, அறம் என்ன என்று பார்க்கும்.


அப்படிப் பார்க்க கண்ணுக்குப் பின்னால், கண் காண்பதை சரியாக விளக்கம் சொல்ல அறிவு வேண்டும். 


அந்த அறிவு எண்களையும் , எழுத்துக்களையும் ஒழுங்காக படித்தால் தான் வரும். 


மொத்தம் மூன்று பேரைச் சொல்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்...


எண் என்ப -  எண் என்று சொல்லுவார்கள் 

எழுத்து என்ப - எழுத்து என்று சொல்லுவார்கள் 

கண் என்ப - கண் என்று சொல்லுவார்கள். 


இதில் முதல் சொன்ன இருவரையும் பரிமேல் அழகர் "அறிவில்லாதவர்கள்" என்று சொல்கிறார். காரணம், அறிவு என்பது எண் , எழத்து என்று பிரிந்து இருப்பது அல்ல. எல்லாம் ஒன்று தான். 


எண் என்று சொல்லுபவர்களையும், எழுத்து என்று சொல்லுபவர்களையும் விட்டு விட்டு, "கண்" என்று சொல்லுபவர்களை சிறந்தவர்கள் என்கிறார் பரிமேல் அழகர். 


இரண்டு கண் தான், அதில் எது சிறந்து, எல்லாம் ஒன்று தான். அதில் பேதம் பார்க்க முடியாது என்பதால். 


எதுக்கு எடுத்தாலும், அறம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அது காலத்துக்கு காலம் மாறுமா, எல்லாருக்கும் ஒரே அறமா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியாமல், நீயே "பார்"த்து தெரிந்து கொள் என்கிறார். 


அந்தப் பார்வை சரியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு பின் புலத்தில் எண்ணும் எழுத்தும் இருக்க வேண்டும். 


பார்வையில் உள்ள பழுதை, அறிவு நீக்கும். 




No comments:

Post a Comment