Thursday, December 17, 2020

திருக்குறள் - தூக்கமும் விழிப்பும்

 திருக்குறள் - தூக்கமும் விழிப்பும் 


எந்த ஒரு காரியத்தையும் முதன் முதலில் செய்யும் போது ஒரு பயம் இருக்கும். கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது, நீச்சல் கற்றுக் கொள்ளும் போது, புதிதாக ஒன்றை சமைக்கும் போது ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். 


பழக பழக பயம் போய் விடும். 


உள்ளதுக்குள் பெரிய பயம் மரண பயம் தான். நாம் பழகியவர்களை விட்டு விட்டுப் போக வேண்டும். அல்லது நாம் நேசிப்பவர்கள் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயம். கொஞ்சம் பழகினால் பயம் விட்டுப் போய் விடும். ஆனால், மரணத்தை எப்படி பழகுவது? 

இயற்கை அதற்கும் ஒரு வழி செய்து வைத்து இருக்கிறது. 


தினம் தினம் தூங்கி எழும்புகிறோம் அல்லவா? 


தூக்கத்தில் என்ன நடக்கிறது? பிள்ளைகள், கணவன்/மனைவி, அப்பா, அம்மா உடன் பிறப்பு, நட்பு  என்று ஏதாவது தெரிகிறதா? அருகில் உறங்கும் கணவனோ மனைவியோ கூட தெரிவது இல்லை. மரணத்துக்கும் அந்த தூக்கத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?  


ஐயோ, தூங்கப் போனால், என் பிள்ளையின் நினைவு எனக்கு அற்றுப் போய் விடுமே, என் பெற்றோரை நான் மறந்து போவேனே என்று யாராவது தூங்காமலே இருப்பார்களா? அல்லது, பிள்ளையை, கணவனை , மனைவியை தூங்க விடாமல் இருப்பார்களா?


அந்த தூங்கும் நேரத்தில் உங்களுக்கும் இந்த உலகுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. உறவு இல்லை. நினைவு இல்லை. பழக்கம் இல்லை. இன்ப துன்ப அனுபவம் இல்லை. 


இருந்தும் ஒரு பயமோ, தயக்கமோ இல்லாமல் தினமும் தூங்கப் போகிறோம். மற்றவர்களை தூங்கப் பண்ணுகிறோம். 

வள்ளுவர் சொல்கிறார்

பாடல் 

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_17.html

click the above link to continue reading 


உறங்கு வதுபோலும் = தூங்குவதைப் போல 

 சாக்காடு  = இறப்பு 

உறங்கி = தூங்கிய பின் 

விழிப்பது போலும் = விழித்து எழுவதைப் போல 

பிறப்பு = பிறப்பு 


நித்தம் நித்தம் இறந்து பிறக்கிறோம். இதில் என்ன பயம். இறந்தால் பிறக்க மாட்டோம் என்ற பயம் இருக்கிறதா? உறங்கினால், விழிப்போம் என்று யாராவது உங்களுக்கு உத்தரவாதம் தந்து இருக்கிறார்களா? இல்லையே?  

சரி, ஒரு நாள் சரியாக உறங்காவிட்டால் மறு நாள் எப்படி இருக்கும்? எவ்வளவு சோர்வாக இருக்கும்? 

ஒரு நாள் நன்றாக உறங்கினால், "நேற்று சுகமாக உறங்கினேன்" என்று சொல்கிறோம். உறங்கின அனுபவம் இருக்குமா?  உறங்கும் போது ஒன்றுமே தெரியாது. இருந்தும் அது சுகமாக இருந்தது என்று சொல்கிறோம். 


உறக்கம் ஒரு சுகம். உறக்கம் சரியாக வராதவர்களை கேட்டுப் பாருங்கள் தெரியும். உறக்கம் ஒரு வரம். 


அது போல, இறப்பும் ஒரு சுகம். ஒரு வரம். அதை அறிந்து கொண்டால் வாழ்கை சுகமாக இருக்கும். தூக்கத்துக்கு பயந்து கொண்டு தூங்காமல் இருக்க முடியுமா? 


அது  போலத்தான் இறப்பும். 


ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை புலப்படும். 







1 comment:

  1. சபாஷ் அருமையான விளக்கம்

    ReplyDelete