Saturday, December 26, 2020

திருக்குறள் - நிலையின என்று உணரும்

திருக்குறள் - நிலையின என்று உணரும் 


ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.  விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் அவரவர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். நீங்கள் மட்டும், அங்கேயே இருப்பீர்களா அல்லது நீங்களும் கிளம்பி விடுவீர்களா?  அடா, என்ன அருமையான அலங்காரம், சுவையான சாப்பாடு,  நல்ல இசை, எத்தனையோ சொந்த பந்தம்...இவற்றை எல்லாம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று அங்கேயே இருப்பீர்களா அல்லது, வந்தமா, எல்லோரையும் பார்த்தோமா, மண மக்களை வாழ்த்தினோமா, மொய் எழுதினோமா, சாப்பிட்டோமோ , கிளம்பினோமா என்று இருப்பீர்களா?


ஏன் அந்த கல்யாண மண்டபத்திலேயே இருக்க வேண்டியது தானே. சுகமாகத்தானே இருந்தது. 

இருக்க மாட்டோம். ஏன் என்றால், அது நிரந்தரமான இடம் அல்ல. வந்த வேலை முடிந்தால் கிளம்பி விட வேண்டும். 

சுற்றுலா போகிறோம். புதிய இடம். அற்புதமான சூழ்நிலை. சுவையான உணவு. பெரிய கட்டிடங்கள், மலைகள், அருவி, கடற்கரை.  அங்கேயே இருந்து விடுவோமா? அல்லது ஆயிரம் ஆனால் நம்ம வீடு மாதிரி ஆகுமா என்று கிளம்பி விடுவோமா?


சுற்றுலா சென்ற இடம் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பி விடுவோம் அல்லவா? 

ஏன் என்றால் அது நிரந்தரமான இடம் அல்ல. 

இல்லை இந்த கல்யாண மண்டபத்திலேயே தான் இருப்பேன் அல்லது இந்த சுற்றுலா தலத்திலேயே தான் இருப்பேன் என்று யாரவது ஆடம் பிடித்தால், அவர்களை பற்றி  என்ன நினைப்பீர்கள்? 


ஏதோ கொஞ்சம் நட்டு கழண்ட கேஸ் என்று தானே நினைப்பீர்கள். 


இந்த உலகில் உங்கள் இடம் நிரந்தரம் என்று உங்களுக்குத் சொன்னது யார்?

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அல்லது இந்த உலகம் முடியும் வரை இருப்பீர்களா? 


இது உங்களின் நிரந்தர இடம் அல்ல. வந்தீர்கள், பார்த்தீர்கள், அனுபவித்தீர்கள்,  கிளம்ப வேண்டியதுதான். 


இல்லை, இங்கேயே இருப்பேன்.  அது எப்படி, அதுவும் இதுவும் ஒண்ணா, நான் இங்கேயே இருப்பேன், அது மட்டும் அல்ல, இந்த கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் யாரும்  போகக் கூடாது, எல்லோரும் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லுவது யாரும் எங்கும் போகக் கூடாது என்று சொல்லுவீர்களா?


அப்படிச் சொன்னால், அது மதியீனம் அல்லவா?


பாடல் 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_26.html


click the above link to continue reading


நில்லாத வற்றை  = நிலை இல்லாதவற்றை 

நிலையின = நிலையானவை 

என்றுணரும் = என்று உணரும் 

புல்லறி வாண்மை = குறைந்த அறிவு, சிற்றறிவு 

 கடை. = கீழ்மையானது. 


இந்த உலகத்தில் உங்கள் இடம் நிரந்தரமானது அல்ல. கொஞ்ச நாள் சுத்தி பாத்துட்டு  கிளம்பி விட வேண்டும். எல்லோருக்கும் தான். 

இல்லை, நான் என்றென்றும் இங்கேயே இருப்பேன், என் கூட உள்ளவர்களும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லும் அறிவு - "கடை" 


அது மட்டும் அல்ல, எத்தனை நிலை இல்லாதவற்றை பிடித்துக் கொண்டு, அது நிலைக்க வேண்டும்  பாடு படுகிறீர்கள். 


இளமை நிற்குமா? எத்தனை டை அடித்தாலும், பௌடர் போட்டாலும், லிப் ஸ்டிக்,  facial, நகை, நட்டு என்று போட்டாலும், அது நிற்காது. நில்லாது ஓடி விடும். அதுக்கா இந்தப் பாடு?


செல்வம். நிற்குமா? என்ன பாடு பட்டாலும், போகும் போது போய் விடும். வாழ் நாளை எல்லாம்  அதற்காக செலவழிக்க வேண்டுமா?


இந்த உடம்பு?  எப்போது வேண்டுமானாலும் சரியும். எனவே தான் அதற்கு சரீரம் என்று  பெயர். 


நிலை இல்லாதவற்றை , உங்களால் நிலைக்கப் பண்ண ஒரு காலும் முடியாது. 


முதலில் எது எல்லாம் நிலை இல்லாதது என்று அறிய வேண்டும். 


அது, அறிவின் முதல் படி. 



2 comments:

  1. அருமையான எடுத்துக் காட்டு. இது கண்டிப்பாக எல்லோருக்கும் புரியும்

    ReplyDelete
  2. அருமை. இந்தக் குறளை இதுவரை கேட்டதிலை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete