Saturday, January 9, 2021

திருக்குறள் - செய்வன

 திருக்குறள் - செய்வன 

பெரும்பாலும் திருக்குறள் படிக்கும் போது, அறத்துப் பால் படிப்போம். ஒரே அறவுரையாக இருக்கும். சரி கொஞ்சம் மனதை இலகுவாக்குவோம் என்று இன்பத்துப் பால் படிப்போம். நடுவில் உள்ள பொருள் பால் போவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 


பொருள் பாலில், பொருள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, ஒரு நல்ல குடிமகனாக, சமுதாயத்தில் ஒரு நல்ல அங்கத்தினனாக இருப்பது என்பது பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அதிகாரம். அது எந்த செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

"தெரிந்து செயல் வகை" 


அதில் ஒரு குறள். 


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்


பொருள் 

click to continue


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_9.html


செய்தக்க அல்ல = செய்வதற்கு தகுதி இல்லாதவற்றை 

செயக்கெடும் = செய்தால், கெடுதல் விளையும் 

செய்தக்க = செய்யத் தகுந்தவற்றை 

செய்யாமை யானும் கெடும் = செய்யாவிட்டாலும் கெடுதல் வரும் 


எது செய்யக் கூடாதோ, அதைச் செய்தால் கெடுதல் வரும். 


எதைச்  செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டாலும் கெடுதல் வரும். 


புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  


சிந்திப்போம். 


செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டால் என்ன கெடுதல் வந்து விடும்? அதனால் வர  வேண்டிய பலன் கிடைக்காமல் போகலாம். கெடுதல் எப்படி வரும்?

ஒவ்வொரு வருடமும், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். (annual medical check up ). அதைச் செய்தால், நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே கண்டு பிடித்து, மருந்து சாப்பிட்டு  குணப் படுத்திக் கொள்ளலாம். ஆண்டு மருத்துவ சோதனை செய்யாமல் விட்டால், நோய் முற்றி , பின்னாளில் எந்த மருந்துக்கும் சரியாகாமல்  துன்பப் பட நேரிடும். 


செய்ய வேண்டியதை, செய்யாமல் விட்டால் வரும் கெடுதல். 

உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாவிட்டால் கெடுதல் வருமா இல்லையா?


இளமையில் படிக்க வேண்டும். படிக்காவிட்டால்? 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியவற்றை  செய்யாமல் விட்டால்  துன்பம் வரும். 


இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், செய்ய வேண்டியது எது என்று நமக்குத் தெரியாமல்  இருப்பதுதான். 


பிள்ளைகளை கட்டிக் கொடுத்து, அதுக எல்லாம் செட்டில் ஆகிருச்சு. இனி என்ன இருக்கு செய்ய வேண்டியது என்று   சிலர் நினைக்கலாம். 

படிச்சோம், வேலைக்குப் போனோம்...சம்பாதித்தோம் , இனி என்ன செய்ய வேண்டியது இருக்கிறது , என்று சிலர் நினைக்கலாம். 

குடும்பம் ஒழுங்கா போய்கிட்டு இருக்கு. இதுல என்ன செய்ய வேண்டி இருக்கு என்று கேள்வி எழலாம். 

அதற்கு பதில் சொல்ல முடியும். இருந்தாலும், அவரவர்கள் சிந்தித்து முடிவுக்கு வருதலே நலம். 


அடுத்தது, செய்ய வேண்டாதவற்றை செய்தாலும் கெடுதல் வரும். 


புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது, சோம்பேறியாக இருப்பது,  whatsapp ல் நேரத்தை செலவிடுவது,  facebook , youtube  என்று  நேரத்தை விரயம் பண்ணுவது,  கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பது, அரட்டை அடிப்பது  போன்ற செய்ய வேண்டாத காரியங்களை செய்தாலும் கெடுதல் வரும். 


இரண்டு பட்டியல் போடுங்கள்.


எதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியல். 


எதை ஆரம்பிக்க வேண்டும்/ தொடர வேண்டும் என்று ஒரு பட்டியல். 


இந்தக் குறளை இன்னும் விரித்துச் சொல்லலாம்.  அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். 


பொருட்பாலில், ஒரு அதிகாரத்தில், ஒரு குறளில் இவ்வளவு இருக்கிறது. 


வேறு என்ன சொல்ல?




No comments:

Post a Comment