Saturday, March 20, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 



அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


அறம் என்பது மூன்று கூறுகளை உடையது - ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்பன. 


ஒழுக்கம் என்றால் என்ன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அடுத்தது, வழக்கு என்றால் என்ன என்று சொல்ல வருகிறார். 


"வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்."


அதாவது, ஒரு பொருளை இரண்டு பேர் அது தங்களுடையது என்று சண்டையிட்டு கொள்ளுவது.  சில சமயம், சில பேர் ஒழுக்கக் குறைவு உடையவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மாறுபட்டு கருத்து உருவாகும். இதை வழக்கு என்பார்கள். 


வழக்கு வரும். வந்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். 


எனவே, அடுத்து "தண்டம்" பற்றி கூறுகிறார். 


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்பதற்கு முன்னால், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


தண்டனை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் என்ன ? என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 


ஒரே வரியில் பரிமேலழகர் சொல்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_20.html


(click the above link to continue reading)


"தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்."


தண்டனை என்பது அந்த ஒழுக்க நெறியில் இருந்து விலகியவர்களை, அந்த நெறியில் நிறுத்த, அதற்காக தண்டித்தல்.


அதாவது, தண்டனை என்பது ஒருவனை ஒழுக்க நெறியில் நிறுத்த உதவ வேண்டும்.  அவனை பயமுறுத்தவோ, அல்லது மற்றவர்களுக்கு ஒரு உதாரணம் போல் காட்டவோ அல்ல.  தவறு செய்தவனை திருத்த மட்டுமே தண்டனை உதவ வேண்டும்.


எனவே, ஒழுக்கம், வழக்கு, தண்டம் பற்றி பரிமேலழகர் கூறியதை புரிந்து கொண்டோம். 


அடுத்து என்ன என்பதை அடுத்த ப்ளாகில் பார்க்க இருக்கிறோம். 




2 comments:

  1. நல்ல விளக்கம் ...
    அடுத்ததை எதிர்பார்த்து காத்து கிடப்பதும் சுகம் ஐயா

    ReplyDelete
  2. "கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்" என்றால் என்ன என்று சொல்லவில்லையே?

    ReplyDelete