Thursday, April 22, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?


திருவரங்கத்துக்குப் போகணும், திருப்பதிக்குப் போகணும், காசிக்குப் போகணும் என்று எங்கும் நிறைந்த இறைவனை ஏதோ ஒரு இடத்தில் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கல்லாம். 


எங்கேயும் போக வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே, அவனை மனதில் நினைத்து வழிபட்டால் போதும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 


"விரிந்த இதழ்களை உடைய மலரில் வாசம் செய்யும் ததிருமகளின் தோள்களை அணைத்துக் கொண்டதும், அம்பால் ஏழு மரா மரங்களை துளைத்ததும், ஆடு மாடு மேய்த்ததும் , இவற்றையெல்லாம் நினைத்து, ஆடிப் பாடி, "அரங்கா" என்று அழைக்கும் தொண்டர்களின் பாதத்தில் இருந்து பறக்கும் பாதத் துளிகள் மேலே படும் பாக்கியம் பெற்றால், கங்கை சென்று நீராட வேண்டும் என்ற எண்ணம் என்னாவது?"


பாடல் 


தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_11.html

(click the above link to continue reading)



தோடுலாமலர் = இதழ் விரிந்த மலர்கள் 


மங்கை = அதில் வாசம் செய்யும் திருமகளின் 


தோளிணை = தோள்களை 


தோய்ந்ததும் = அணைத்துக் கொண்டதும் 


சுடர் வாளியால் = ஒளி வீசும் அம்புகளால் 


நீடுமாமரம் = பெரிய மரா மரங்களை 


செற்றதும் = துளைத்ததுவும் 


நிரை மேய்த்தும் = பசுக்களை மேய்த்ததும் 


இவையே நினைந்து = இவற்றை மட்டுமே நினைத்து 


ஆடிப்பாடி = ஆடிப் பாடி 


அரங்கவோ = அரங்காவோ 


என்ற ழைக்கும் = என்று அழைக்கும் 


தொண்ட ரடிப்பொடி = தொண்டர்களின் பாதம் பட்டு தெறிக்கும் தூசு 


ஆடனாம்பெறில் = அதில் ஆடப் பெற்றால் 


கங்கை நீர் = கங்கை ஆற்றிலே 


குடைந் தாடும் = குதித்து விளையாடும் 


வேட்கை = ஆசை 


யென் னாவதே = என்னாகும் ?


அடியவர்களின் பாதத் துளிகள் கங்கை ஆற்றை விட புனிதமானது என்பது பொருள்.


எங்கேயும் போகத் தேவையில்லை. அவனை மனதால் நினைத்தால் போதும் என்பதும் பெற்றாம். 


ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், கவிதை நடை. 


"அப்படி எல்லாம் இருந்தால், அந்த கங்கை போற எண்ணம் என்னாகும்?" என்று நம்மை பார்த்து நேரில் கேட்பது போன்ற ஒரு நடை, பாவனை. 


"இதெல்லாம் இருக்கும் போது, அங்க எதுக்கு போக நினைக்கிற" என்று நம்மைப் பார்த்து கேட்பது போன்ற நடை சற்று வித்தியாசமானது. 


திருமகள் மேல் காதல் 

மரம் துளைத்த வீரம் 

பசுக்களுக்கும் இரங்கும் கருணை 


வேறென்ன வேண்டும்?


நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல, நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது என்பது ஒரு அனுபவம்.  உங்களுக்கும், அந்த பாசுரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்புதான் அந்த அனுபவம். 


வார்த்தைகள், இலக்கணம், போன்றவற்றை விட்டு விட்டு நேரடியான அனுபவம் இருந்தால், அதன் சுகமே தனி. 


அதை என்னென்று சொல்லி விளங்க வைப்பது ? 



2 comments:

  1. பிரதி தினமும் ஆழ்வார்களின் பாசுரங்களை உங்களுடைய விளக்கத்தோடு படிக்கும் போது உண்டாகும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். இவ்வளவு வருடங்கள் படிக்காமல் இருந்து விட்டோமே, அதனால் எப்பேர்பட்ட பேரிழப்பு என்கிற ஆதங்கம்.
    உங்களைப்போல தமிழில் ஆழ்ந்த தேர்ச்சி இல்லாத என்னை போன்றவனுக்கு பாசுரங்களில் உள்ள நுட்பமான விஷயங்கள் எளிதில் 10 தடவை படித்தாலும் புரியாது. உங்கள் உதவி மிக்க அவசியம் நீங்கள் சொல்லும் அனுபவம் பெற.

    ReplyDelete
  2. இனிமையான பாடல். நன்றி.

    ReplyDelete