Friday, April 30, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம் 


பாயிரவியலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரங்களை இது வரை சிந்தித்தோம். 


அடுத்தது நீத்தார் பெருமை. 


நீத்தார் என்றால் யார்?


அனைத்தையும் நீத்தார், துறந்தவர். அனைத்து பற்றையும் விட்டவர். 


அவர் விட்டு விட்டுப் போகட்டும். நாம் ஏன் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? அதற்கும் அற நூலுக்கும் என்ன சம்பந்தம்? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_30.html


(please click the above link to continue reading)


முதலாவது, அறங்கள் இயற்கையில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை யாரவது கண்டு சொன்னால் தான் மக்களுக்குப் புரியும். உதாரணமாக, மழை பெய்கிறது. பயிர் விளைகிறது. நாம் உண்கிறோம். இது எல்லோரும் காணக் கூடியது. இதன் பின்னால் மறைந்து கிடக்கும் இரகசியம் என்ன? மழைதான் உலகில் அறம் வாழத் தேவையான ஒன்று என்பது. அறத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு எளிதாகத் தெரியாது. அதை கண்டு சொல்ல ஒரு  ஆள் வேண்டும். அது யார்?


இரண்டாவது, நான் ஒரு நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கம் நிதி நிலை அறிக்கையை பார்லிமெண்டில் சமர்ப்பிக்கிறது. அதில் உள்ள ஓரிரு விடயங்கள் சரி அல்ல என்று நான் நினைக்கிறேன். ஒரு செய்தி நிறுவனம் என்னை அணுகி என்னுடைய பார்வையில் அந்த நிதி  நிலை அறிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். நான் உண்மையைச் சொல்வேனா? சொன்னால், என் நிறுவனத்துக்கு வர வேண்டிய சலுகைகள் வராமல் போய் விடுமோ என்று அஞ்சுவேன் அல்லவா? நான் ஏதோ சொல்லப் போக அதனால் என் நிறுவனத்துக்கு தீங்கு வரலாம் என்ற அச்சம் இருக்கும் அல்லவா? எனவே, நான் என்ன சொல்வேன்...."அருமையான நிதி அறிக்கை, மிகத் தேவையான ஒன்று ...அற்புதம்" என்று சொல்லி விடுவேன். அது உண்மை அல்ல.


அது மக்களுக்கும் தெரியும். எவ்வளவு நல்ல அறிக்கையாக இருந்தாலும், எதிர் கட்சிகள் குறை சொல்லும். ஆளும் கட்சி மிக நல்ல அறிக்கை என்று சொல்லும். காரணம், பயம், பற்று, ஆசை போன்றவை. 


எனவே, ஒன்றின் மேல் பற்று இருந்தால், அது சார்ந்து தான் சொல்ல முடியும். 


என் பிள்ளை என்ன தவறு செய்தாலும், அதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். காரணம் பிள்ளை மேல் உள்ள பற்று. 


பற்று உள்ளவன், உண்மையே சொன்னாலும், உலகம் என்ன நினைக்கும்? அவனுக்கு அதில் ஏதோ ஒரு பற்று இருக்கிறது. அதனால்தான் அப்படிச் சொல்கிறான் என்று அவன் சொல்வதை நம்பாது. 


அப்படி என்றால் உண்மையை உள்ள படியே யாரால் சொல்ல முடியும்? எதிலும் பற்று இல்லாதவனால்தான் உண்மையை உள்ளபடியே சொல்ல முடியும். 


அந்த உண்மையால் யாருக்கு நல்லது, யாருக்கு கெடுதல் என்று அவன் கவலைப் பட மாட்டான். 


அவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று உலகம் நம்பும். 


இவ்வளவு போலிச் சாமியார்கள் இருந்தும், மக்கள் சாமியார்கள் பின் ஏன் போகிறார்கள் என்றால், அவன் அனைத்தும் துறந்தவன். அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையில் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருவனாவது உண்மைத் துறவி இருக்கமாட்டானா என்ற நம்பிக்கையில் போகிறார்கள். 


மூன்றாவதாக, இல்லறத்தில் ஈடு பட்டவன் எந்நேரமும் அதிலேயே அவன் கவனம் இருக்கும். மனைவி, மக்கள், பொருள் சேர்ப்பது, அவற்றை பாதுகாப்பது, விருத்தி செய்வது, அதை அனுபவிப்பது, தானம் செய்வது என்பதிலேயே அவன் காலம் போய் விடுகிறது. (அவள் காலமும் தான்). அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது. சிந்திக்க நேரம் இருக்காது. வினை, கர்மம், யோகம், வீடு பேறு போன்றவற்றை பற்றி சிந்திக்க, அதை அடையும் முயற்சிகள் செய்ய இல்லறம் ஒரு தடை. அந்தத் தடை இல்லாதவனால் தான் அது பற்றி சிந்திக்க முடியும். அதற்கான வழிகளை ஆராய முடியும். ஆராய்ந்து தான் கண்டவற்றை பிறருக்கு சொல்ல முடியும். 


எனவே, இல்லறம், அதன் மூலம் துறவறம், அதன் மூலம் வீடு பேறு என்று போக வேண்டும் என்றால், அந்த வழியில் சென்றவர்கள், நீத்தார் பற்றியும் அவர்கள் பெருமை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். 


எனவே இந்த அதிகாரம். 


திருவள்ளுவர் இரண்டு விதமான துறவு பற்றி பேசுகிறார். 


ஒன்று முற்றும் துறந்தவன், 


இன்னொன்று துறவு நோக்கி முயல்பவன்.  நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் துறவிகள்தான். ஏதோ ஒன்றை நாம் துறந்துதான் இருப்போம். மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக நாம் சில இன்பங்களை துறந்துதான் இருக்கிறோம். ஆனால், அது முழுமையான துறவு அல்ல. ஒரு படி ஏறி இருக்கிறோம். இன்னும் சிலர் , மேலும் சில படிகள் ஏறி இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் முழுமையான துறவு அல்ல. 


ஒன்றை துறப்பதே எவ்வளவு கடினமாக இருக்கிறது. 


காலையில் எழுந்தவுடன் காப்பி குடிக்க வேண்டும். அதை விட முடிகிறதா. ஒரு நாள் குடிக்க முடியவில்லை  என்றால் எப்படி இருக்கிறது.   ஒரு வேளை உணவை துறக்க முடிகிறதா? வருடத்தில் ஒரு நாள் இரவு தூக்கத்தை விட முடிகிறதா? 


ஒன்றை விடுவதே இவ்வளவு கடினம் என்றால், அனைத்தையும் விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும். அப்படி ஒருவன் அனைத்தையும் விட்டு விட்டான் என்றால், அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும். 


அவன் என்னதான் சொல்கிறான் என்று கேட்க வேண்டாமா? 


அறம் நிலைக்க வேண்டும் என்றால், எது அறம் என்று தெரிய வேண்டும். 


அந்த அறங்களை எடுத்துச் சொல்பவன் நீத்தார் என்று சொல்லப் படுகின்ற முற்றும் துறந்தவன். 


அவன் சொல்வதில் பிழை இருக்காதா? அவன் பிழை விட மாட்டானா என்றால் மாட்டான் என்கிறார் வள்ளுவர். அதற்கு காரணமும் தருகிறார். 


அவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


பரிமேலழகர் வழி காட்ட அவர் கைப் பிடித்து அடுத்த அதிகாரத்துக்குள் நுழைவோம். 


2 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி அண்ணா .....
    அருமை ....
    தினமும் ஊக்கம் தருவது தங்கள் இன்பம் தரும் தமிழே ....
    வணக்கம்

    ReplyDelete
  2. ஒரு புறம் பரிமேல் அழகரின் கையையும், மறு புறம் தங்களின் கையையும் பிடித்து அதிகாரத்துக்குள் நுழைய சித்தமாக இருக்கிறோம்! மிக்க ந‌ன்றி!

    ReplyDelete