Tuesday, April 6, 2021

திருக்குறள் - வேண்டுதல் வேண்டாமை இலான்

 திருக்குறள் - வேண்டுதல் வேண்டாமை இலான் 


பாடல் 

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்

கியாண்டு மிடும்பை யில (04)


சீர் பிரித்த பின் 


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_6.html

(click the above link to continue reading)



வேண்டுதல் = விரும்புதலும் 


வேண்டாமை  = வெறுப்பும் 


இலான் = இல்லாதவன் 


அடி = அடியை 


சேர்ந்தார்க்கு = இடை விடாது நினைப்பவர்களுக்கு 


யாண்டும் = எப்போதும் 


இடும்பை இல.  = துன்பம் இல்லை 


விருப்பும் வெறுப்பும் இல்லாதவன் திருவடியை அடைந்தவர்க்கு ஒரு போதும் துன்பம் இருக்காது. 


பரிமேலழகர் கை பிடித்துக் கொண்டு அவர் சொல்லும் உரையை அறிவோம். 


நமக்கு ஏன் துன்பம் வருகிறது? 


நமக்குத் துன்பம் இரண்டு காரணங்களால் வருகிறது. 


ஒன்று எதன் மீதாவது பற்று இருந்தால் அதனால் துன்பம் வரும். 


அல்லது

எதன் மீதாவது வெறுப்பு இருந்தால், அதனால் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை துன்பங்களுக்கும் இந்த பற்றும், வெறுப்பும் தான் காரணம். 


இந்த இரண்டும் இல்லாவிட்டால்? ஒரு துன்பமும் இல்லை. 


ஆனால், அவற்றை நம்மால் எளிதில் விட முடியாது. அதற்கு ஒரே வழி, அந்த இரண்டும் இல்லாத ஒருவனை பற்றிக் கொள்ள வேண்டியது. 


இறைவனிடம் பற்றும் இல்லை; வெறுப்பும் இல்லை. 


"இடும்பை இல" :  துன்பம் இல்லை. துன்பம் என்றால் என்ன?என்ன மாதிரி துன்பம்? தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, பணம் இல்லாத குறை, வேலை கிடைக்காமல் இருப்பது போன்ற துன்பங்களா?  இந்த மாதிரி துன்பங்களை துடைக்க  இறைவன் வர வேண்டுமா? 


துன்பம் என்பதற்கு பிறவித் துன்பங்கள் என்று பொருள் கொள்கிறார்.  அது எப்படி பிறவித் துன்பங்கள் என்று சொல்ல முடியும்? பரிமேலழகர் அவர் இஷ்டப்படி பொருள் சொல்லலாமா ?


அவர் மேலும் விளக்குகிறார். 


"யாண்டும்" = எப்போதும். எப்போதுமே துன்பம் இருக்காது என்றால் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. எந்தப் பிறவியிலும் துன்பம் இருக்காது என்பதால் துன்பம் என்பது பிறவித் துன்பம் என்று பொருள் கொள்கிறார்.


"பிறவித் துன்பம்" என்றால் என்ன?  சும்மா பிறந்து இறப்பது துன்பமா? இல்லை. பிறவித் துன்பம் என்பது மூன்று விதங்களில் நிகழ்வது. 


" பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான் வருந்துன்பங்கள்."


இவற்றை வட மொழியாளர்கள், 

தன்னைப்பற்றி வரும் துன்பங்களை ஆத்யாத்மிகம்  என்றும், ; 

பிற உயிர்களைப்பற்றி வரும் துன்பங்களை  ஆதிபௌதிகம் என்றும்;

தெய்வத்தைப் பற்றி வரும் துன்பங்களை  ஆதிதைவிகம் என்றும் 

கூறுவர்.


இதில், ஆத்யாத்மிகம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று உடலைப் பற்றியது - காய்ச்சல், தலைவலி, போன்ற உடல் சம்பத்தப்பட்ட துன்பங்கள். வேறு யாரும் வந்து ஒன்றும் செய்வதில்லை. நம் தலை வலித்து நமக்குத் துன்பம் தரும். பின்னது, மனம் சம்பந்தப் பட்டது. காமம், கோபம், பொறாமை போன்ற தீய குணங்களால் வருவது. 


சீதை மேல் ஆசைப்படு , அவளை தூக்கிக் கொண்டு வா என்று இராவவணனிடம் சொன்னது யார். அவள் அழகாக இருக்கிறாள் என்று சூர்பனகை சொன்னாள். இருந்து விட்டுப் போகட்டுமே என்று இவன் சும்மா இருக்க வேண்டியது தானே. மனதால் வரும் துன்பம். 


ஆதி பௌதிகம் என்பது தீய மனிதர்கள், விலங்குகள் போன்றவற்றால் வருவது. 


ஆதி தைவிகம் என்பது புயல், மழை, காற்று போன்றவற்றால் வருவது. 


 முந்தைய ப்ளாகில் கூறியது போல் "சேர்ந்தார்" என்று இங்கு குறிப்பிடுகிறார். 


இலானடி சேர்ந்தார். 


சேர்ந்தார் என்றால் இடைவிடாமல் மனதில் நினைப்பவர். 


யார் ஒருவர் வேண்டுதலும், வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாது நினைக்கிறார்களோ அவர்களுக்கு பிறவித் துன்பம் வராது. 


மனதால் வழிபடுவதால் வரும் நன்மைகளை மேற்கூறிய இரண்டு குறள்களில் கூறிவிட்டார். 


அடுத்தது....






No comments:

Post a Comment