Friday, May 7, 2021

நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்

 நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்


சில சமயம் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் முயற்சி பயனற்று போய் விடுவது உண்டு. அதே சமயம் சிலபேரை பார்க்கிறோம். அவன் என்ன செய்தாலும் அதில் வெற்றி வருகிறது. 


குருட்டாம்போக்கில் ஏதோ செய்வான், பணம் அள்ளிக் கொண்டு வரும். ரொம்ப முயற்சி செய்யாமலேயே நல்ல இடத்தில் பிள்ளைகளுக்கு வரன் அமையும், வேலையில் பணி உயர்வு கிடைக்கும், நல்ல மதிப்பும் மரியாதையும் அவனுக்கு கிடைக்கும் .


நமக்கோ, கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் கூட ஏதோ ஒரு வழியில் தேவை இல்லாமல் விரயம் ஆகும். பிள்ளைக்கு ஒரு மதிப்பெண்ணில் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய் விடும். 


இதற்கு என்ன செய்வது?


இதை எப்படி புரிந்து கொள்வது. 


நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது ஒரு பக்கம். தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கிடைப்பது மறு பக்கம். 


கோபமும், எரிச்சலும், பொறாமையும், வெறுப்பும் வரும் அல்லவா?


இது என்ன வாழ்க்கை? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்ற சலிப்பு வரும் அல்லவா?


இதுவரை இந்த பிரச்னைக்கு ஒரு தெளிவான, அறிவியல் பூர்வமான தீர்வு இல்லை. 


ஔவை, தன் அனுபவத்தில் கூறுகிறாள். 


"என்ன தான் வருந்தி முயற்சி செய்தாலும், எது நமக்கு இல்லையோ அது நம்மிடம் வராது. சரி, வேண்டாம், போதும், போ என்று சொன்னாலும் சில சமயம் போகாது. இது எல்லாம் விதிப்படி நடக்கும். அதை நம்பாமல் இவற்றை எல்லாம் நெடுக நினைத்து நெஞ்சம் புண்ணாகி இறுதியில் வருத்தத்தில் இறந்து போவதே இந்த மக்களின் தொழிலாக இருக்கிறது"


பாடல் 


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_7.html

(please click the above link to continue reading)


வருந்தி = கஷ்டப்பட்டு 


அழைத்தாலும் = கூப்பிட்டாலும் 


வாராத = எது நமக்கென்று இல்லையோ 


வாரா = அவை நம்மிடம் வராது 


பொருந்துவன = எது நமக்கென்று விதித்து இருக்கிறதோ 


போமினென்றாற் = அவற்றை போ என்று சொன்னாலும் 


போகா = போகாது 


இருந்தேங்கி = இருந்து ஏங்கி 


நெஞ்சம் = நெஞ்சம் 


புண்ணாக  = புண் ஆகும் படி 


நெடுந்தூரந் தாம் நினைந்து = நீண்ட நாட்களாக அவற்றை எண்ணி 


துஞ்சுவதே = பின் அந்த வருத்தத்திலேயே இறந்து போவது தான் 


மாந்தர் தொழில். = மனிதர்களின் வேலையாக இருக்கிறது 


நல்லதோ, கெட்டதோ - நமக்கு எது விதித்து இருக்கிறதோ அது நம்மை வந்து அடைந்தே சேரும். எது நமக்கு இல்லையோ அவை என்ன பாடு பட்டாலும் நம்மை வந்து சேராது. 


சரியான துணை அமையவில்லை. விட்டு விடலாம் என்றாலும் முடியாது. போ என்றால் போகாது. நோய் வந்து விட்டது.  மருந்து மாத்திரை என்று என்ன செய்தாலும், போகின்ற காலம் அல்லது போகாது. இருந்து படுத்திவிட்டுத் தான் போகும். 


இனிமேலாவது நல்லது வேண்டும், துன்பம் வேண்டாம் என்றால், நல்லது செய்ய வேண்டும். 


விதைப்பதைத் தானே அறுக்க முடியும். 


வெண்டை விதைத்து விட்டு கத்தரி அறுக்க நினைக்கலாமா?




2 comments:

  1. random என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நாம் "விதி" என்ற பெயர் வைத்து விட்டோம்!

    ReplyDelete
  2. Intresting poet make poet intresting

    ReplyDelete